தேர்வு சமயத்தில், இரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்வெட்டு காரணமாக, படிக்க முடியாததுடன், போதுமான தூக்கமின்றி, உடலளவிலும், மனதளவிலும், பள்ளி மாணவ,மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்னையால் தொழிற்சாலைகள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், விவசாயம் என அனைத்துதுறைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வுகளை எதிர்கொள்ளும் பள்ளி மாணவர்கள், படிக்க முடியாமல் தவிக்கின்றனர்; உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 1ல் துவங்கிய பிளஸ்2 பொதுத்தேர்வுகள், வரும் 27ல் நிறைவடைகின்றன. அதே தேதியில் எஸ்.எஸ். எல்.சி., பொதுத் தேர்வு துவங்குகிறது. தவிர, பிற வகுப்புகளுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக இரவு நேர மின்வெட்டு அதிகரித்து வருகிறது.
இரவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின்வெட்டு என, ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேலாக மின்வெட்டு நிலவுகிறது.
தொடர் மின்வெட்டால் பொதுத் தேர்வை சந்திக்கும் மாணவ, மாணவியர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வுக்கு படிக்க முடியாததுடன், தூக்கமும் வருவதில்லையென புலம்புகின்றனர்.
இதுகுறித்து, பள்ளி மாணவர்கள் கூறுகையில்,""இரவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின்வெட்டு ஏற்படுகிறது. பாடங்களை கண்விழித்தும் படிக்க முடிவதில்லை.
அதிகாலை நேரத்தில் எழுந்து படிக்கலாம் என்று நினைத்து தூங்கினால், உஷ்ணம், கொசுத் தொல்லை உள்ளிட்ட காரணங்களால் சரிவர தூங்க முடிவதில்லை.
தேர்வறையில் தூக்கம் தூக்கமாக வருகிறது. மூளையும் சோர்வடைவதால் சிந்தித்து தேர்வெழுதமுடிவில்லை. எதிர்வரும் தேர்வுகளை எதிர்கொள்வதை நினைத்தாலே பயமாக உள்ளது. இரவு நேர மின்வெட்டை தவிர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.
கோவை, மின்வாரிய தலைமைப்பொறியாளர் தங்கவேலு கூறியதாவது:
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், வழக்கம்போல் காற்றாலைகளின் மின் உற்பத்தி குறைவாகவே உள்ளது.
கடந்த ஜன., மாதத்தில் காற்றாலை உற்பத்தித்திறன் குறைந்தது 1,000 மெகாவாட்டாக இருந்தது தற்போது 15 மெகா வாட்டாக குறைந்துள்ளது; மின் தேவையும் அதிகரித்துள்ளது. மழையின்மையால் அணைகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அனல் மின்சாரமும் கைகொடுக்கவில்லை.
இரவுநேர மின் பயன்பாட்டை குறைக்க கடைகள், ஓட்டல்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது.
தற்போது தேர்வு சமயம் என்பதால், கேரள மாநிலத்தில் இரவு 8.00 மணி முன்னதாக கடைகள், ஓட்டல்களை மூடிவிடுகின்றனர்.
இதனால், மின்தட்டுபாடு குறைகிறது. அதேபோல், இங்கும் மின்பயன்பாட்டை குறைத்து, தேர்வு சமயங்களில் மாணவர்களுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
ஆறு மணிநேர தூக்கம் அவசியம்
டாக்டர்கள் கூறுகையில்,"நாளொன்றுக்கு குறைந்தது ஆறு மணி நேரத் தூக்கம் தேவை என்ற நிலையில், இரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்வெட்டால் மாணவர்களுக்கு தூங்க போதுமான நேரம் கிடைப்பதில்லை. இதனால், சிந்திக்கும் திறன் குறைவதுடன், உடல் வலி, கண் எரிச்சல் போன்ற பிரச்னைகள் உண்டாகும். தேர்வில் கவனம் சிதற வாய்ப்புள்ளது. குறிப்பாக சிந்தித்து எழுதும் கணிதத் தேர்வில் பாதிப்புகள் அதிகம் இருக்கும். எனவே, தேர்வு சமயத்தில், மாணவ,மாணவியருக்கு குறைந்தபட்சம் ஆறு மணி நேர தூக்கம் தேவை,'' என்றனர்.