Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 26 ஜனவரி, 2013

34 ஆண்டுகளாக பதவி உயர்வி இல்லை: தொழிற்கல்வி ஆசிரியர்கள் வேதனை


 கல்வித்துறையில் வாட்ச்மேன் அல்லது அலுவலக உதவியாளராக பணிபுரிந்தவர்கள் பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர்களாக வரும் நிலையில், 34 ஆண்டுகளாக அனைத்து தகுதியுடன் பணியாற்றி வரும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வின்றி மன உளைச்சலில் உள்ளனர்.

தமிழகத்தில் 1978ல் மேல்நிலை பள்ளி முறை துவங்கிய போது, பல தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 1986ம் ஆண்டு முதல் மேல்நிலை பள்ளிகளில் கம்ப்யூட்டர் தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது, 500க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் நீண்ட நாள் கோரிக்கை பதவி உயர்வு.

இதை, கல்வி துறை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இவர்களில் வணிகவியல் ஆசிரியர்களை மட்டும், கடந்த ஆட்சியில் பதவி உயர்வு கொடுத்துவிட்டு, மற்ற ஆசிரியர்களை கண்டுகொள்ளவில்லை.

தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநில செயல் தலைவர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: முதன்மை கல்வி அலுவலகத்தில் வாட்ச்மேன் அல்லது அலுவலக உதவியாளராக பணியில் சேருபவர், தபால் மூலம் பட்டப்படிப்பு படித்து, முதுகலை ஆசிரியர் அளவிற்கு பதவி உயர்வு பெறுகிறார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து தகுதியுடன் மேல்நிலை வகுப்புகளுக்கு பாடம் நடத்திய, எங்களுக்கு பதவி உயர்வு இல்லை. போராட்டங்கள் நடத்தியும் பூஜ்யம் தான், என்றார்.

"வெறும் வயிற்றுடன் இளைஞர்கள் கனவு காண முடியாது"


 "வெறும் வயிற்றுடன் இளைஞர்கள் கனவு காண முடியாது. தங்களுக்கு நன்மையானதை இந்த அரசு செய்யுமா என்ற ஏக்கமும், சந்தேகமும் இளைஞர் பட்டாளத்திற்கு உள்ளது. தேவையான சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டும்" என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.

நாட்டின், 64வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: புதிய இந்தியாவின் அடையாளமாக திகழ வேண்டிய இளம் பெண், தலைநகர் டில்லியில் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அறிந்ததும், நம் இதயங்கள் வெற்றிடமாகி விட்டன; அறிவில் பயங்கர குழப்பங்கள் ஏற்பட்டன.

ஒரு உயிரை மட்டும் நாம் இழக்கவில்லை; ஒரு கனவையும் நாம் இழந்துவிட்டோம். இந்திய நாகரிகத்தில் பெண்களுக்கு உயர்ந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் புனித தன்மை போற்றப்பட வேண்டும் என காலம் காலமாக போதிக்கப்பட்டு வந்துள்ளது. அத்தகைய பெருமை வாய்ந்த பெண்ணை சிதைத்ததன் மூலம், தேசத்தின் ஆன்மாவையும் சிதைத்து விட்டோம்.

தேசத்தின் அற நெறி திசைகாட்டியை மாற்ற வேண்டிய நேரமிது. நாம் சிறப்பான நிர்வாகத்தை வழங்குகிறோம் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட வேண்டும்.தங்களுக்கு நன்மையானதை இந்த அரசு செய்யுமா என்ற ஏக்கத்திலும் சந்தேகத்திலும் இளைஞர் பட்டாளம் உள்ளது.

வளரும் தலைமுறையினரின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில், தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.வெறும் வயிற்றுடன் இளைஞர்கள் கனவு காண முடியாது. அவர்களின் திறமைகளுக்கு ஏற்ற வேலைகள் கிடைக்க வேண்டும்.

அப்போது தான் அவர்களால் தேச குறிக்கோளை அடைய முடியும்.அதற்காக விரைந்த செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், நக்சல் தீவிரவாதம் போன்ற வன்முறைகள், ஆபத்தான வடிவங்களை பெற்று விடும். தேசிய குறிக்கோளை அடைய அரசு நிர்வாகமும், சமுதாய மாற்றத்தை விரும்புபவர்களும் பேச்சுவார்த்தையில் இறங்க வேண்டும்.

எதிர்பார்த்த அளவு கல்வி, உயர்மட்டத்தை இன்னும் அடையவில்லை. சரியான படி கல்வி வளர்ச்சி அடைந்திருந்தால், இப்போதிருக்கும் அளவை விட, இரண்டு மடங்கு அதிக வளர்ச்சி பெற்றிருப்போம். முந்தைய ஆறு நூற்றாண்டுகளை விட, கடந்த 60 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி பெற்றிருக்கிறது என நீங்கள் நினைத்தால், கடந்த, 60 ஆண்டுகளை விட, வரும், 10 ஆண்டுகளில் இன்னும் அபரிமித வளர்ச்சி அடையும் என்ற உறுதியை அளிக்கிறேன். இவ்வாறு, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, தன் முதல் குடியரசு தின உரையில் குறிப்பிட்டார்.

அரசாங்கமும் நீதிமன்றமும் மக்களின் உணர்வுகளை மதித்து விஸ்வரூபம் படத்தை நிரந்தர தடை செய்வதில் எந்த தயவு தாட்சணியமும் காட்டக்கூடாது : எம்.அப்துல் ரகுமான் எம்.பி.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் M.அப்துல் ரஹ்மான் விஸ்வரூபம் திரைப்படம் குறித்த அக்கட்சியின் நிலைப்பாட்டை விளக்கினார்.

முஸ்லிம்களின் உயிர் மூச்சான புனித குர்ஆனையும்,தீவிரவாத போக்கினையும் இணைத்து ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமே தீவிர வாதத்துக்கு துணை நிறகக்கூடியதைப் போன்ற காட்சிகளையே பரவலாகக் கொண்டிருக்கும் விஸ்வரூபம் படம் தடை செய்யப்பட வேண்டும் என்பதில் முஸ்லிம் லீக் தனது உறுதிப்பாட்டை தெரிவிக்கின்றது.

நம்முடைய எதிர்ப்பை மிக அழுத்தமாக தெரிவிக்கும் பொருட்டு தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் திர்.ராஜகோபால் அவர்களை தொடர்பு கொண்டு நம்முடைய கண்டனத்தை தெரிவித்திருக்கின்றோம்.சமுதாயத்தின் பல்வேறு அமைப்புகளும் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை தெரிவித்திருக்கின்றன.

தமிழக அரசு 15 நாட்களுக்கு தடை விதித்திருப்பது சற்று ஆறுதலை தந்தாலும்,இந்த படத்தை வெளியிடாமல் முற்றுலுமாக தடை செய்ய வேண்டும் என்பதே முஸ்லிம் லீகின் நிலைபாடு.
வருகிற 28-ம் தேதி வெளியிடப்ப்ட இருக்கின்ற நீதிமன்ற தீர்ப்பும் இதே அடிப்படையிலான நியாமுள்ள தீர்ப்பாக இருக்குமென எதிர்பார்க்கின்றோம்.
இந்த திரைப்படம் வெளிவந்தால் சட்டம் ஒழுங்கு நிச்சயமாக கெடும் என்கிற அச்சப்பாடு நிலவி வருவதை அரசாங்கமும் நீதிமன்றமும் கருத்தில் கொள்வது இன்றியமையாதது.

திரைப்படங்கள் இஸ்லாமிய மார்க்கத்தை மாத்திரமல்ல எந்த மத உணர்வையும் புண்படுத்தக்கூடிய வகையில் இருக்கக் கூடாது.
என்கிற முஸ்லிம் லீகின் நிலையை எல்லாத் தளங்களிலும் பதிவு செய்தே வருகிறோம்.

மதமாச்சரியம் இல்லாமல் திரைப்படங்களை தயாரிப்பவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.இந்த வரையரையை மீறிய காரணத்தினால் தான் விஸ்வரூபம் படம் கடும் எதிர்ப்பினை சந்தித்திருக்கிறது.இந்த எதிர்ப்பு தார்மீக நிலையில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணத்தினால் தான் ,தமிழக அரசும் உடனடியாக 15 நாட்கள் தடை விதிக்க முன் வந்திருக்கிறது.
இந்தத் தடை தற்காலிகமாக இல்லாமல் நிரந்தரமானதாக ஆக்கப்பட வேண்டும் இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்கக் கூடிய சூழ்நிலையைஉண்டாக்கி விடுமோ என்கிற அச்சம் நிலவுவதை மறுப்பதற்கில்லை,ஆகவே அரசாங்கமும் நீதிமன்றமும் மக்களின் உணர்வுகளை மதித்து விஸ்வரூபம் படத்தை தடை செய்வதில் எந்த தயவு  தாட்சணியமும் காட்டக்கூடாது என்பதை மாத்திரம் இப்போதைக்கு சொல்லி வைக்கிறோம் என்று குறிப்பிட்டார்.