சென்னையை சேர்ந்த வக்கீல் பழனிமுத்து ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார்.
அதில் அவர் கூறி இருந்தாவது:-
சென்னை அரும்பாக்கத்தில் யுனானி மருத்துவ மையம் உள்ளது. அங்கு தமிழ் வழி கல்வி நடைமுறையில் இல்லை. இந்த நிலையில் 27 யுனானி உதவி மருத்துவ அலுவலர்களுக்கான தேர்வை கடந்த 6-ந்தேதி டி.என்.பி.எஸ்.சி. நடத்தியது. அதில் யுனானி மருத்துவத்தை தமிழ் வழியில் கற்றவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை தரப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
பணி தேர்வில் உருது மொழி தெரியாதவர்கள் இல்லாத பட்சத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவரை கொண்டு பணி இடத்தை நிரப்பலாம் என்று அந்த துறை உத்தரவிட்டுள்ளது. இதை முன் மாதிரியாகக் கொண்டு சுகாதார துறையும் அதே மாதிரி உத்தரவை பிறப்பித்துள்ளது. இது இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிரானது. எனவே யுனானி உதவி மருத்துவ அலுவலர் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. தற்காலிக தலைமை நீதிபதி எலிபி தர்மாராவ், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. யுனானி உதவி மருத்துவ அலுவலர் தேர்வுக்கு தடைவிதித்து அவர்கள் உத்தரவிட்டனர்.