Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

90% தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் தரமானதல்ல!


நாட்டில்  எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், தேவைக்கும் அதிகமான அளவில், தொழில்நுட்ப பட்டதாரிகளை உற்பத்தி செய்து வருகின்றன. ஆனால், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்(AICTE) எடுத்த ஆய்வின்படி, ஏறத்தாழ 90% தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், விதிமுறைகளின்படி இயங்குவதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

AICTE, சுமார் 400 கல்லூரிகளில் திடீர் ஆய்வை மேற்கொண்டது. அதில், 350 கல்லூரிகள் வரை, அடிப்படை விதிமுறைகளைக் கூட நிறைவு செய்திருக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. மாணவர்கள் இல்லாமல் ஈயாடுவதால், அதிகளவிலான பொறியியல் கல்லூரிகள், மூடுவிழா நடத்தும்பொருட்டு, AICTE க்கு விண்ணப்பங்கள் அனுப்பியுள்ளன.

விதிமுறைகளை நிறைவுசெய்யாத கல்வி நிறுவனங்களுக்கு, AICTE சார்பில், குறைபாடுகளை சரிசெய்யுமாறு அறிவுறுத்தியும், எச்சரித்தும், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குறைகள் சரிசெய்யப்படவில்லை என்றால், அடுத்த கல்வியாண்டுக்கான அனுமதி ரத்துசெய்யப்படும். அந்த கல்வி நிலையங்களில் படித்துவரும் மாணவர்கள், வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்படுவார்கள்.

AICTE -ன் ஆன்லைன் அங்கீகார செயல்பாட்டில், இதுவரை, 25 மாநிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. E-governance முறையின் மூலம், அங்கீகாரமளிக்கும் செயல்பாட்டை, AICTE எளிதாக்கியுள்ளது. E-governance மூலம், வெளிப்படைத் தன்மை, அணுகுதல் மற்றும் விரைவான செயல்பாடு ஆகியவற்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவிலுள்ள 15,000க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை எளிதாக நிர்வகிக்கலாம்.

நடப்பு ஆண்டில் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: டி.என்.பி.எஸ்.சி.


கடந்த ஆண்டில், தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு, 24 ஆயிரம் பேரை தேர்வு செய்து, சாதனை படைத்த, டி.என்.பி.எஸ்.சி., நடப்பு ஆண்டில், 30 ஆயிரம் பேர் வரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசின் பல்வேறு துறைகளில் தேவைப்படும், பணியாளர் எண்ணிக்கை குறித்த விவரங்களை பெற்று, தேர்வாணையம் இறுதி செய்துள்ளது.

இது குறித்த அறிவிப்பு, பொங்கலுக்குப் பின் வெளியாகும் என, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

சில ஆண்டுகளாக, தமிழக அரசின் பல்வேறு துறைகளில், புதிய பணியாளர்களை நியமனம் செய்யும் பணி, வேகம் எடுத்து வருகிறது. கடந்த 2011ல், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதில் இருந்து, அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யும் பணி, முழு வீச்சில் நடந்து வருகிறது. துறை வாரியாக, காலியாக உள்ள பணியிடங்கள் கணக்கு எடுக்கப்பட்டு, டி.என்.பி.எஸ்.சி., - டி.ஆர்.பி., மூலமும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையிலும், பல்வேறு வகையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அரசுப் பணிகள், தொய்வின்றி, முழுவீச்சில் நடப்பதற்கு வசதியாக, காலிப் பணியிடங்களை நிரப்புவதில், முதல்வர் ஜெயலலிதா, தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், பட்டதாரிகள், மிகுந்த உற்சாகத்துடன், பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்று, அரசுப் பணிகளில் சேர்ந்து வருகின்றனர். குறிப்பாக, டி.என்.பி.எஸ்.சி., மூலமாக அரசு பணியாளர்களும், டி.ஆர்.பி., மூலமாக ஆசிரியர்களும், கணிசமான எண்ணிக்கையில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி., தலைவராக நடராஜ் பதவி ஏற்றதில் இருந்து, தேர்வு நடத்துவதிலும், முடிவை உடனுக்குடன் வெளியிட்டு, பணி நியமன உத்தரவுகளை வழங்குவதிலும், தேர்வாணையம் வேகமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, குரூப்-2 பணியிடங்கள், 10 ஆயிரத்து 500, குரூப்-4 நிலையில், 10 ஆயிரத்து 718 இடங்கள், 1,870 வி.ஏ.ஓ., பணியிடங்கள் உட்பட, 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில், நடப்பு ஆண்டில், புதிய பணி நியமனம் செய்வதற்காக, துறை வாரியாக உள்ள காலி பணியிடங்கள் விவரங்களை, தேர்வாணையம் கேட்டு பெற்றுள்ளது. அதன்படி, 30 ஆயிரம் பேர் வரை, நடப்பு ஆண்டில் தேர்வு செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த முழுமையான அறிவிப்பு, பொங்கல் பண்டிகை முடிந்ததும் வெளியாகும் என, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

அப்போது, இந்த ஆண்டு முழுவதும், எத்தனை வகையான தேர்வுகள் நடக்கும், ஒவ்வொரு தேர்விலும், எத்தனை பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர், தேர்வு அறிவிப்பு, தேர்வு நடக்கும் தேதி, முடிவு அறிவிப்பு, பின் கலந்தாய்வு, பணி நியமனம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அடங்கிய ஆண்டு தேர்வு அட்டவணையை, தேர்வாணைய தலைவர் நடராஜ் வெளியிடுவார் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய தேர்வு அறிவிப்பில், குரூப்-4 நிலையிலான காலி இடங்கள், எண்ணிக்கை கணிசமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.  அதேபோல், குரூப்-2 தேர்விலும், அதிகளவில் தேர்வர்கள் தேர்வு செய்ய வாய்ப்புகள் உள்ளன என்றும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே, பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி முதல், பட்டதாரிகள் வரை படித்தவர்கள், இப்போதே போட்டித் தேர்வுகளுக்கு தயாராக ஆரம்பித்து விடலாம்.

தொடர்ச்சியாக, பல்வேறு போட்டித் தேர்வுகள் நடப்பதால், தேர்வாணையத்தின் புதிய அறிவிப்பை, பயிற்சி மைய நிர்வாகிகளும், ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தி.மு.க.தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயரை முன்மொழிவேன்: கருணாநிதி

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது.


கூட்டம் முடிந்ததும் தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டதா?

பதில்:- கூட்டணி பற்றியும் கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள். அதையும் மனதில் வைத்து செயல் படுவோம்.

கேள்வி:- இந்த கூட்டத்தில் மு.க.அழகிரி கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதா?

பதில்:- அவர் மாவட்ட செயலாளர் அல்ல.

கேள்வி:- உங்களுக்கு பின் மு.க.ஸ்டாலின் என்று நீங்கள் பேசியதற்கு தி.மு.க. மடம் அல்ல என்று மு.க.அழகிரி கூறி இருக்கிறாரேப

பதில்:- பா.ம.க.வில் இருந்து 2 ஆயிரம் பேர் தி.மு.க.வில் சேர்ந்த போது அவர்களை வரவேற்று நான் பேசிய போது சமுதாயத்தை பற்றித்தான் பேசினேன். அந்த சமுதாய பணியில் நானும் என்னுடைய குடும்பத்தாரும் என் அளவுக்கு ஈடுபட்டதை கோடிட்டு காட்டினேன். அந்த சமுதாய பணியை எனக்கு பிறகு என்னை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற முற்படுவார் என்று குறிப்பிட்டேன்.

தி.மு.க.வின் அடுத்த தலைவராக ஸ்டாலின் வருவார் என்று நான் குறிப்பிட்டதாக பத்திரிகை படிக்காத சில ஏடுகள் விஷமத்தனமாக செய்தி வெளியிட்டன. அந்த விஷமத்தை நம்பிக்கொண்டு யாராவது எதிர் கருத்து தெரிவித்திருந்தால் அது அவர்களுடைய புரியாமையைத்தான் காட்டும்.

கேள்வி:- தி.மு.க. ஒரு முதன்மையான கட்சி. அந்த கட்சியில் உங்களுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் என்று கூறுவதில் தவறு இல்லையா?

பதில்:- நான் பேசும் போது தி.மு.க.வுக்கு அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் என்று பேசியதாக வெளியிட்டுள்ளார்கள். தி.மு.க. என்ற அரசியல் இயக்கத்துக்கு எனக்கு பிறகு மு.க.ஸ்டாலின் வருவார் என்று நான் பேசியதாக உங்களால் எடுத்துக்காட்ட முடியுமா? அப்படியே நான் சொல்லி இருந்தாலும் அதில் என்ன தவறு.

மு.க.ஸ்டாலின் வரக்கூடாதா? அவர் வரக் கூடாது என்று இப்போதே தடுப்பு முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு அது கடுப்பை ஏற்படுத்தும். தி.மு.க. அரசியல், சமுதாயம் இரண்டையும் இணைத்து செயல்படும் கட்சி. அன்று பா.ம.க.வில் இருந்து 2 ஆயிரம் பேர் தி.மு.க.வில் வந்து இணைந்த நிகழ்ச்சியாகும். அந்த நிகழ்ச்சியில் சமுதாயத்தை பற்றி நான் பேசும் போது என்னுடைய சமுதாய முன்னேற்ற சமத்துவ உணர்வுகளுக்கு எனக்கு பிறகும் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஈடுபடுவார் என்று குறிப்பிட்டேன்.

தி.மு.க. தலைவராக எனக்கு பிறகு அவர் வருவார் என்று அன்று நான் கூறவில்லை. தி.மு.க. ஒரு ஜனநாயக இயக்கம். கட்சி தேர்தலில் குறிப்பாக தலைமை கழக தேர்தலில் தலைவராகவோ, பொதுச் செயலாளராகவோ ஒருவர் நிற்க வேண்டும் என்றால் அதை ஒருவர் முன்மொழிந்து பொதுக்குழுவில் தான் பெரும்பான்மை முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். அப்படி முன்மொழியக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு வருமேயானால் அந்த வாய்ப்பை நான் பயன்படுத்தி மு.க.ஸ்டாலின் பெயரை முன் மொழிவேன்.

கேள்வி:- மு.க.ஸ்டாலின் அலை அனைத்து மட்டங்களிலும் ஏற்பட்டுள்ளது.

பதில்:- கழக சட்ட திட்டத்தை பின்பற்ற வேண்டும்.

கேள்வி:- அழகிரியும் தலைவர் பதவியை விரும்புகிறார். ஸ்டாலினும் தலைவர் பதவியை விரும்புகிறார். இதில் ஸ்டாலின் பெயரை முன்னிலைப்படுத்துவது தவறு இல்லையா?

பதில்:- யார் யார் விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் பொதுக் குழுவில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். தேர்தல் முறைப்படி நடைபெறும்.

கேள்வி:- அ.தி.மு.க. பொதுக்குழுவில் செல்லாக்காசும், செல்லரித்த காசும் கூட்டணி வைக்கப் போவதாக பேசி இருக்கிறார்களே?

பதில்:- நான் கள்ளக்காசை பற்றி பேச விரும்பவில்லை.

கேள்வி:- தே.மு.தி.க. வுடன் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளதா?

பதில்:- தே.மு.தி.க.வில் தி.மு.க. என்று இருக்கிறதே.

இவ்வாறு அவர் கூறினார்.