கடந்த ஆண்டில், தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு, 24 ஆயிரம் பேரை தேர்வு செய்து, சாதனை படைத்த, டி.என்.பி.எஸ்.சி., நடப்பு ஆண்டில், 30 ஆயிரம் பேர் வரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசின் பல்வேறு துறைகளில் தேவைப்படும், பணியாளர் எண்ணிக்கை குறித்த விவரங்களை பெற்று, தேர்வாணையம் இறுதி செய்துள்ளது.
இது குறித்த அறிவிப்பு, பொங்கலுக்குப் பின் வெளியாகும் என, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
சில ஆண்டுகளாக, தமிழக அரசின் பல்வேறு துறைகளில், புதிய பணியாளர்களை நியமனம் செய்யும் பணி, வேகம் எடுத்து வருகிறது. கடந்த 2011ல், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதில் இருந்து, அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யும் பணி, முழு வீச்சில் நடந்து வருகிறது. துறை வாரியாக, காலியாக உள்ள பணியிடங்கள் கணக்கு எடுக்கப்பட்டு, டி.என்.பி.எஸ்.சி., - டி.ஆர்.பி., மூலமும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையிலும், பல்வேறு வகையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
அரசுப் பணிகள், தொய்வின்றி, முழுவீச்சில் நடப்பதற்கு வசதியாக, காலிப் பணியிடங்களை நிரப்புவதில், முதல்வர் ஜெயலலிதா, தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், பட்டதாரிகள், மிகுந்த உற்சாகத்துடன், பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்று, அரசுப் பணிகளில் சேர்ந்து வருகின்றனர். குறிப்பாக, டி.என்.பி.எஸ்.சி., மூலமாக அரசு பணியாளர்களும், டி.ஆர்.பி., மூலமாக ஆசிரியர்களும், கணிசமான எண்ணிக்கையில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
டி.என்.பி.எஸ்.சி., தலைவராக நடராஜ் பதவி ஏற்றதில் இருந்து, தேர்வு நடத்துவதிலும், முடிவை உடனுக்குடன் வெளியிட்டு, பணி நியமன உத்தரவுகளை வழங்குவதிலும், தேர்வாணையம் வேகமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, குரூப்-2 பணியிடங்கள், 10 ஆயிரத்து 500, குரூப்-4 நிலையில், 10 ஆயிரத்து 718 இடங்கள், 1,870 வி.ஏ.ஓ., பணியிடங்கள் உட்பட, 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில், நடப்பு ஆண்டில், புதிய பணி நியமனம் செய்வதற்காக, துறை வாரியாக உள்ள காலி பணியிடங்கள் விவரங்களை, தேர்வாணையம் கேட்டு பெற்றுள்ளது. அதன்படி, 30 ஆயிரம் பேர் வரை, நடப்பு ஆண்டில் தேர்வு செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த முழுமையான அறிவிப்பு, பொங்கல் பண்டிகை முடிந்ததும் வெளியாகும் என, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
அப்போது, இந்த ஆண்டு முழுவதும், எத்தனை வகையான தேர்வுகள் நடக்கும், ஒவ்வொரு தேர்விலும், எத்தனை பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர், தேர்வு அறிவிப்பு, தேர்வு நடக்கும் தேதி, முடிவு அறிவிப்பு, பின் கலந்தாய்வு, பணி நியமனம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அடங்கிய ஆண்டு தேர்வு அட்டவணையை, தேர்வாணைய தலைவர் நடராஜ் வெளியிடுவார் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய தேர்வு அறிவிப்பில், குரூப்-4 நிலையிலான காலி இடங்கள், எண்ணிக்கை கணிசமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், குரூப்-2 தேர்விலும், அதிகளவில் தேர்வர்கள் தேர்வு செய்ய வாய்ப்புகள் உள்ளன என்றும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே, பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி முதல், பட்டதாரிகள் வரை படித்தவர்கள், இப்போதே போட்டித் தேர்வுகளுக்கு தயாராக ஆரம்பித்து விடலாம்.
தொடர்ச்சியாக, பல்வேறு போட்டித் தேர்வுகள் நடப்பதால், தேர்வாணையத்தின் புதிய அறிவிப்பை, பயிற்சி மைய நிர்வாகிகளும், ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக