Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 20 அக்டோபர், 2012

இளைய சமுதாயமே ! நம் வரலாற்றை சற்று திரும்பிப் பார்ப்போம் !


                  தன் வரலாற்றை அறியாத சமுதாயம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.எனவே , சமுதாயம் ,சமுதாயம் என்று நாள் தோறும் சாலை மறியல் ,ஆர்ப்பாட்டம்  , மக்களிடம் வசூல் போன்றவற்றில் தீவிரமாக உள்ள நாம் ,நம் சமுதாயத் தலைவர்கள் நம் சமுதாயம் முன்னேற செய்த பணிகள் என்ன என்பதனை சிந்தித்து பார்க்க கடமை பட்டுள்ளோம் .

    இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு ,தமிழகத்தை பொருத்தவரை முஸ்லிம் சமுதாயத்திற்கென்று இருந்த ஒரே கல்லூரி 1919 - ஆண்டு வாணியம்பாடியில் ஆரம்பிக்கப் பட்ட இஸ்லாமியக் கல்லூரி ஒன்று மட்டும் ஆகும் .

     இந்திய சுதந்திரம் அடைந்த பின்பு , அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தை ,அதன் தனித்துவத்தை அகற்றுவதற்கு  அன்றைய ஆட்சியாளர்கள் முயற்சி செய்தபோதும் , சென்னையில் முஹம்மதன் கல்லூரியின் பெயரை மாற்றுவதற்கு ஆட்சியாளர்கள் முயற்சித்த போதும் கடுமையாக  எதிர்த்து போராடிய நம் சமுதாயத் தந்தை காயிதே மில்லத்தும் அவர் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சமுதாயத் தளபதிகளும் ,சமுதாயத்தின் நிலை குறித்தும் , தங்களுக்கென்று கல்வி நிலையங்கள் வேண்டும் என்று சிந்தித்து அதனை செயல் படுத்தியும் காட்டினார்கள் . அசைத்து பார்க்க நினைத்த ஆட்சியாளர்களை , அதிரவைத்தது  நம் சமுதாயத் தலைவர்களின் செயல்பாடுகள்.

     ஆம் ,ஆட்சியாளர்களின் செயல்பாடுகளையும் , கல்வியில் நம் சமுதாயத்தின் நிலையையும் ஆலோசித்து , நமக்கென்று நாமே கல்லூரிகளை உருவாக்க முடிவு செய்தார்கள் .

   முடிவு செய்த மாத்திரத்தில் , காயிதே மில்லத் (ரஹ்) அவர்கள் , சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமது , M .M.பீர் முஹம்மது சாஹிபு போன்ற நாவன்மை மிக்க  தன் போர்படை தளபதிகளை அழைத்துக் கொண்டு ,சிங்கப்பூர் , மலேசியா  , பர்மா போன்ற நாடுகளுக்குச் சென்று நம் சமுதாய பெரு மக்களை சந்தித்து , பள்ளிவாசல்கள் தோறும் சென்று சென்று இந்திய இஸ்லாமிய சமுதாயத்தின் கல்வி நிலை உயர வேண்டும் என்பதனை எடுத்துக்கூறி , மடிப்பிச்சை ஏந்தி வசூல் செய்யப்பட்ட 5 லட்சம் ரூபாயை கொண்டுவந்து , அன்று பணக்காரர்கள் கூடும் ஜாலி கிளப் இருந்த இன்றைய சென்னை ராயபேட்டையில் உள்ள 12 ஏக்கர் நிலத்தை வாங்கினார்கள் .

      அவ்வாறு வாங்கப் பட்ட இடத்தில்தான் 1951 -ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான்  இன்று சென்னையில் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் "புதுக்கல்லூரி"ஆகும் .  அப்படி உருவாக்கிய அந்த கல்லூரியின் ,ஒவ்வொரு வளர்ச்சியிலும் காயிதே மில்லத் (ரஹ் ) கண்ணும் கருத்துமாக இருந்தார்கள் . அதனை தொடர்ந்து வந்த சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமது சாகிபு அவர்கள் 14 ஆண்டுகள் அந்தக் கல்லூரியின் தலைவராக இருந்து அந்தக் கல்லூரியை படிப் படியாக உயரச் செய்தார்கள் .

     இன்றைக்கும் அந்தக் கல்லூரி இன்றைய சமுதாயத்தை பார்த்து கேள்வி எழுப்பிக் கொண்டுள்ளது , அதனை இன்றைய இளைய சமுதாயம் மறந்து விடுகின்றது . வீதி தோறும் உணர்ச்சிகளை தூண்டி , வசூல் செய்கின்றீர்களே, என்னை உருவாக்கி ,என்னை வளரச் செய்த தலைவர்கள் போன்று , உங்களால் ஒரு கல்வி நிலையத்தை உருவாக்க முடியவில்லையா ? என்று கேள்வி எழுப்பிக்  கொண்டுள்ளது .

இன்ஷாஅல்லாஹ் ,கேள்விகள் தொடரும்................

   

நமக்கு நாமே மின்சாரம் ! வழிகாட்டுகிறது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்


செப்டம்பர் 24 முதல் மார்ச் 21 வரை பகல் நேரம் குறைந்து இரவு நேரம் அதிகமாக இருக்கும் என்கிறது அறிவியல். ஆனால் கடந்த சில மாதங்களாகவே தமிழகம் இருண்டுதான் கிடக்கிறது. இரண்டு மணி நேரம் மின்வெட்டு என்று கொதித்தெழுந்து, அதற்கா கவே ஆட்சியை மாற்றினோம் என்று சொன்ன மக்கள் 16 மணி நேரத்தைத் தாண்டிக் கொண்டி ருக்கும் மின்வெட்டைக் கண்டு மிரண்டுபோய் இருக்கிறார்கள். தொழில் நகரங்களெல்லாம் மின் விடுமுறை விடுவதென்று தீர்மானித் தால் வாரத்தின் 6 நாட்கள் விடுமுறை விட்டாக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட் டுள்ளன. மிக்சி, கிரைண்டர், பேன், லேப்டாப் என மின்சாரத்தில் இயங்கும் பொருட்களெல்லாம் இலவசமாகத் தருவதாகச் சொன்ன அரசு, இவற்றை இயக்க மின்சாரம் தராததால், வாங்கிய மிக்சி,கிரைண்டரை மூலையில் கிடத்தி விட்டு, மூலையில் கிடந்த ஆட்டுக் கல்லை எடுத்து அம்மிகொத்தித் தயார்செய்து வைத்திருக்கிறார்கள்.

அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் கிராமம் கிராமமாக சென்று தனது விற்பனையை விரிவாக்கியிருப்பதாகக் கூறுகிறார் ஓம்சக்தி ஆட்டுக்கல் விற்பனையாளர்.

செய்முறைத் தேர்வு நேரத்தில் மின் துண்டிக்கப்படாததால், தங்கள் மதிப்பெண்களைக் குறித்துக் கவலைப்பட்ட மாணவ, மாணவியர் தேர்வுக்குப் படிப்பதற்கே விளக்குகளற்று விழிபிதுங்கி நிற்கின்றனர். இன்வெர்ட்டர்களில் மின்சாரத்தைச் சேமித்துப் பயன்படுத்தி வந்தவர்கள்; சேமிப்பதற்கும் மின்சாரம் இல்லாததால் வீணாக்கிப்போன பேட்டரிகளை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

பெருகும் மின் தேவையை எப்படி நிறைவு செய்வது என்ற திட்டமிடல் இல்லாமல் 2001-_06 அ.தி.மு.க. அரசு செயல்பட்டதன் காரணமாக, 2006ல் அமைந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தின் மின் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியது.

2008க்குப் பிறகு மின் பற்றாக்குறை ஒரு பிரச்சினையாக எழுந்த நேரத்தில், பிற மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்கி, தற்காலிகமாகப் பிரச்சினையைக் - குறைத்த கலைஞர், நிரந்தரத் தீர்வுக்காக புதிய மின் திட்டங்களை தொடங்கினார். அவை 2013ல் பயன்தரத் தொடங்கும் என்ற நிலையில் மீண்டும் 2011ல் வந்தது அதிமுக அரசு! தி.மு.க.வின் மின்திட்டங்களை மனதில் வைத்து 6 மாதத்தில் தடையில்லா மின்சாரம் தருவேன் என்று சொன்ன ஜெயலலிதா அரசு, அந்தத் திட்டங்களையும் காலத்தே முடித்து பயனுக்குக் கொண்டுவரத் தெரியாமல் முடங்கிக் கிடக்கிறது.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளும் வழக்கம்போல் மின்வெட்டில் தவிக்கின்றன. மாற்று மின்சக்தியை முன்னிறுத்த வேண்டிய அரசு அதனைப் பெரிதும் கண்டு கொள்ளாமலே இருக்கிறது. கொஞ்ச காலமே சூரிய ஒளி இருக்கும் அய்ரோப்பிய நாடுகளே அதனை மின் ஆற்ற லாக மாற்றி தங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய முயலும்போது, தினமும் வெய்யில் கொளுத்தும் இந்தியாவில் அதற்கான முன்னெ டுப்புகள் பரந்த அளவில் செய்யப் படவில்லை. கழிவுகள் குவிந்து கிடக்கும் இந்நாட்டில் அவற்றிலிருந்து மின்சாரம் எடுக்கும் தொழில்நுட்பமோ ஆராய்ச்சிகளோ அதிகளவில் செய்யப்பட்டுள்ளனவா?

பெருகிவரும் மின் தேவை, குவிந்துவரும் குப்பைகள், கழிவுகள் இவற்றை ஒருசேர சிந்திக்கும் அறிவியலாளர்கள் நம்மிடம் இல்லையா? அந்தப் பொறுப்பு அரசுக்கு இல்லையா? இக்கேள்விக்கு விடை தருகிறது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம். கழிவுப் பொருள் மேலாண்மை, மாற்று மின்சாரத் தயாரிப்பு இரண்டையும் திறம்பட நிர்வகிக் கிறது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம். காய்கறிக் கழிவுகளையும், திரவக் கழிவு களையும் பல்லுயிரி வளர்ப்புக்கு உணவாக்கியும், மண்புழு உரமாக மாற்றியும் ஏற்கெனவே பயன் படுத்தி வந்தது.

சாண எரிவாயு தயாரிக்கும் முறையையும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்திவந்தது. கடந்த 2011 ஜூலை 27 அன்று நடைபெற்ற பசுமைத் தொழில் நுட்பத்திற்கான பன்னாட்டு மாநாட்டில், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் முன்னிலையில், பல் வகைக் கழிவுகளையும் எரிவாயு வாக மாற்றி அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும், பயோ மீதேனேசன் பிரிவைத் தொடங்கி வைத்தார் இந்தியக் குடியரசின் மேனாள் தலைவரும் அறிவியலாளரூமான டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம். உயிர் எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணி பல படிநிலைகளில் நடைபெறுகிறது. மாட்டுச் சாணம், மனித திடக் கழிவு, காய்கறிக் கழிவுகள், வீணான உணவுப் பொருட்கள், சானிடரி நாப்கின்கள் உள்ளிட்ட அனைத்து விதமான கழிவுப் பொருட்களும் இதற்கு உள்ளீடாகப் பயன்படுகின்றன. ஒவ்வொரு நாளும் இதன் மூலம் 500 கனமீட்டர் எரிவாயு தயாரிக்கப்படுகிறது .

இந்த எரிவாயுவைக் கொண்டு ஒரு மணிநேரத்திற்கு 60 கிலோவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது. இது எரிவாயு தயாரிக்க மட்டுமே பயன்படுவதில்லை; கூடுதலாக இதன் எஞ்சிய பொருள் மண்ணை வளப்படுத்தும்  (Soil conditioner) பொருளாகவும் பயன்படுகிறது. இந்த கலவைக் கலன் 18. மீட்டர் விட்டமும், 5.7 மீட்டர் உயரமும் கொண்டது. ஒரு நாளைக்கு திடக்கழிவு - 2 டன், காய்கறிக் கழிவு - 4 டன்; சாணம் - 3.5 டன், உணவுக்கழிவு - 0.5 டன் என மொத்தம் 10 டன் மூலப் பொருட்கள் இந்த திட்டத்துக்குத் தேவை. மனித திடக் கழிவுக்கென்று ஒரு குழாயும், பிற கழிவுப் பொருட்களுக்கென ஒரு குழாயுமாக இரண்டு குழாய்கள் இந்த டைஜஸ்டருக்கு உள்ளீடு குழாய்களாகும்.

சரிசெய்யப்பட்ட கழிவுகள் வெளிவர ஒரு குழாய் என இதன் அமைப்பு இருக்கும். உணவுக் கழிவும், காய்கறிக்கழிவும் பொடியாக்கப்பட்டு கலவைக் கலனுக்குள் அனுப்பப்படும். செங்குத்தான உந்தித்தள்ளியின் மூலம் இது கலவைக் கலனைச் சென்றடையும். இதே கலவைக் கலனுக்குள் மாட்டுச்சாணமும் கலக்கப்படுகிறது. இந்த கலவையிலிருந்து எரிவாயு வெளியாக 42 நாட்கள் ஆகும். அவ்வாயு வெளியேறிவிடாமல் இருக்க, டைஜஸ்டர் தார்ப்பாய் கொண்டு பராமரிக்கபட்டுள்ளது .

கழிவு நுரை படிந்துவிடாமல் இருக்க மீண்டும் மீண்டும் அது சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. இதன் பிறகு பெறப்படும் கார்பன் டை ஆக்ஸைடு, ஹைட்ரஜன் சல்பைடு ஆகிய வாயுக்கள் பலூனில் சேகரிக்கப்படுகின்றன. இது மின் தயாரிப்புக்கு அனுப்பப்படுகிறது. வாயு சேகரிக்கப்படுவதைன் அளக்கவும், உள்ளீடு மற்றும் வெளியீடு செய்யப்படும் கழிவுகளைச் சோதிக்க பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. அழுத்தமானி, வாயு அளக்கும் கருவி, அமிலக் காரக் குறியீட்டைக் குறிக்கும் கருவி ஆகியனவும் பயன்படுத்தப்படுகின்றன.

வாயு தயாரிக்கப்பட்டது போக எஞ்சிய கழிவுகள் மண்புழு உரமாகத் தயாரிக்கப் பயன்படுத்தபடுகிறது. இவ்வாறு கழிவுப் பொருட்கள் முறைப்படி பயன்படுத்தப்பட்டு பயனுள்ள மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இது மட்டுமே அல்லாமல், பல்கலைக் கழகத்தின் வெளியரங்குகளில், சாலைகளில் வைக்கப்பட்டி ருக்கும் மின் விளக்குகள் சூரிய வெப்பத்தினால் இயங்குமாறு வைக்கப்பட்டுள்ளன. அதற்காக சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யும் கருவி ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு உருவாகும் 500 கன மீட்டர் கழிவைக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு 60 கிலோ வாட் மின்சாரம், அதாவது ஒரு நாளைக்கு 480 யூனிட் மின்சாரம் தயாராகிறது.

இவ்வாறு ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவு ரூ.5.21; அரசு வழங்கும் மின்சாரத்திற்கான கட்டணம் ரூ.7.75. இம்முறையினால் பல்கலைக் கழகம் தனக்குத் தேவையான மின்சாரத்தில் 60 விழுக்காட்டிற்கும் மேலாக நிறைவு செய்யப் படுகிறது. மாற்று முறையில் மின்சாரம் தயாரிக்க வேண்டியது அவசர அவசியமாகும். இதற்கான உதவித் தொகைகளை மக்களுக்கு அரசு வழங்குமேயானால், நிச்சயமாக மக்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராகவே இருப்பார்கள்.

சூரிய ஒளி மின்சாரமும், இதர மாற்று மின்சாரங்களும் நிச்சயம் இந்தியாவுக்கு பெரும் பயனளிக்கக் கூடியனவாக இருக்கும். எதற்கும் வழிகாட்டும் பெரியார், இதோ மின் பற்றாக்குறை தீரவும் வழிகாட்டுகிறார். அவர் வழியில் நடைபோட்டால் நாடு நலம்பெறும்; வளம் பெறும்.


தமிழகத்தில் ஆசிரியர்கள் ஆர்பாட்டம் அறிவிப்பு


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் ரெங்கராஜன் கூறினார். இதுகுறித்து நெல்லையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் மாதம் தோறும் 8,170 ரூபாய் குறைவாக வழங்கப்படுகிறது. எனவே, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை உடனடியாக ரத்து செய்து வேலைவாய்ப்பு அலுவலக முன்னுரிமையின்படி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். தகுதி தேர்வு பிரச்னையால் படித்து முடித்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் சுமார் 3 லட்சம் பேருக்கு பாதிப்புகள் ஏற்படும். தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். பழைய முறையிலான திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மாத தவணை தொகை 150 ரூபாய் பிடித்தம் செய்ய்பபடுகிறது. இந்த தொகையை குறைக்க வேண்டும். கல்வித் துறை அலுவலகங்களில் சுமார் 2,534 காலி பணியிடங்கள் உள்ளன. இதனால் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இந்த கோரிக்கைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கை விளக்க சிறப்பு பொதுக்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. வரும் நவம்பர் மாதம் 18ம் தேதிக்குள் இக்கூட்டங்கள் நடத்தி முடிக்கப்படும். தொடர்ந்து நவம்பர் மாதம் 22ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணியும், வரும் ஜனவரி மாதம் 5ம் தேதி அனைத்து பகுதிகளிலும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்படும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். கோரிக்கைகளுக்காக பிற ஆசிரிய சங்கங்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு மாநில பொது செயலாளர் கூறினார்.