Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 8 ஜனவரி, 2013

நசிந்து வரும் சுண்ணாம்பு கல் தயாரிப்பு தொழில்


வெள்ளை அடிக்க சுண்ணாம்பு பொடிகள் மற்றும் பெயிண்ட் பயன்பாடு அதிகரிப்பதால், சுண்ணாம்பு கல் தயாரிக்கும் தொழில் நசிந்து வருதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

தமிழக மக்கள், பொங்கல் பண்டிகையை ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.இத்திருநாளையொட்டி, பொதுமக்கள் இல்லங்களை சுத்தப்படுத்தி, சுண்ணாம்பு அடித்து, கோலமிட்டு அலங்கரிப்பர். நவீன பெயிண்ட்கள் மற்றும் சுண்ணாம்பு பொடிகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதை அடுத்து, சுண்ணாம்பு கல் விற்பனை குறைந்துள்ளது.

இது குறித்து தர்மபுரி சுண்ணாம்புகாரத் தெருவை சேர்ந்த காவேரியம்மாள், 55 கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில், சுண்ணாம்பு கல் உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்தது தர்மபுரி சுண்ணாம்பகாரத்தெரு. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை, பொதுமக்கள் மத்தியில் சுண்ணாம்பு கல்லுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இத்தொழிலில் இப்பகுதியை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வந்தோம். பெயிண்ட், மற்றும் சுண்ணாம்பு பொடி வரத்தால், சுண்ணாம்பு கல்லுக்கு சந்தையில் மவுசு குறைய துவங்கியது.

இதனால், இத்தொழில் ஈடுபட்டிருந்தவர்கள் படிபடியாக வேறு தொழிலுக்கு செல்லத் துவங்கினர். பரபரம்பரை தொழிலை விட முடியாமல், சுண்ணாம்பு கல் தயாரிக்கும் தொழில் இப்பகுதியில் உள்ள, மூன்று குடும்பங்களை சேர்ந்தவர்கள் மட்டும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.
தர்மபுரியை அடுத்த அரியகுளம் பகுதியில் தனியார் நிலங்களில் இருந்து சுண்ணாம்புகல்கள் வெட்டி எடுக்கப்பட்டு டிராக்டர்கள் மூலம் இங்கு கொண்டு வரப்படுகிறது. ஒரு டிராக்டர் சுண்ணாம்பு கல் வெட்டி எடுத்து, தர்மபுரி கொண்டு வர, 2,000 ரூபாய் செலவகிறது. ஒரு டிராக்டர் லோடு சுண்ணாம்பு கல்லில், 200 கிலோ சுண்ணாம்பு தயாரிக்க முடிகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், நவம்பர் மாதம் இருந்து சுண்ணாம்பு கல் உற்பத்தி துவங்கும். மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லதால், இந்தாண்டு கடந்த, 10 தினங்களுக்கு முன் தான் பணிகள் துவங்கியது.
கிராமக்கள் மட்டும் வீடுகளை வெள்ளை அடிக்க சுண்ணாம்பு கல்கலை வாங்கி செல்வதால், ஐந்து டிராக்டர் லோடு சுண்ணாம்பு கல் மட்டும் வாங்கி சூளை வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆயிரம் கிலோ வரை சுண்ணாம்பு கல் கிடைக்கும். ஒரு கிலோ சுண்ணாம்பு கல், 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் சீஸன் முடிந்தும் வேறு வேலைகளுக்கு சென்று விடுவோம்.இவ்வாறு கூறினார்.

சினிமா ஆசை காட்டி ரூ.2 கோடி மதிப்பு சொத்து அபகரிப்பு


 சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மோசடி செய்து அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர் திருவண்ணாமலை எஸ்.பி., முத்தரசியிடம் புகார் மனு கொடுத்தார்.

வந்தவாசி அடுத்த தூசி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் கோபு, 42. இவர் நேற்று முன்தினம் (டிச.,31) மாலை தனது சகோதரி உஷாராணி மற்றும் உறவினர்கள் சிலருடன் வந்து திருவண்ணாமலை எஸ்.பி., முத்தரசியிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரத்தில் உள்ள எனது அக்கா உஷாராணி வீட்டில் தங்கி என்னை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி தூசி கிராமத்தை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் ஒருவர் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகரிடம் அழைத்து சென்றார்.

இருவரும் சேர்ந்து என்னை "டிவி' தொடர் ஒன்றில் சில காட்சிகளில் நடிக்க வைத்தனர். ஒரு நாள் திருத்தணியில் தங்கியிருந்த போது, எனக்கு மது வாங்கிகொடுத்து என்னிடம் வெற்று பேப்பர்களில் கையெழுத்து வாங்கினர்.
வெற்று பேப்பர்களில் கையெழுத்து போட்டால்தான் சினிமாவில் நடிக்க முடியும் என கூறி, அரை மயக்கத்தில் இருந்த என்னிடம் பல வெற்று தாள்கள், பாண்டு பத்திரங்களில் கையெழுத்து வாங்கி கொண்டு தனியே விட்டு விட்டு சென்றுவிட்டனர்.

கஷ்டப்பட்டு காஞ்சிபுரம் திரும்பி வந்தேன். சந்தேகத்தின்பேரில் என் பெயரில் உள்ள சொத்துக்கள் குறித்த விசாரித்த போது, வீடு நிலங்களை போலியான ஆவணம் மூலம் வேறு நபர்களுக்கு விற்று இருப்பது தெரிந்தது. இதன் மதிப்பு, 2 கோடி ரூபாயாகும். எனவே அபகரிக்கபப்ட்ட எனது சொத்துக்களை மீட்டு தந்து, மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.மனு மீது எஸ்.பி., முத்தரசி விசாரணை நடத்தி வருகிறார்.

அனைவருக்கும் கல்வி திட்டம்: பயிற்சியை புறக்கணிக்கும் ஆசிரியர்கள்


அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், பயிற்சி தரப்படும் நாளன்று, அதிகமான ஆசிரியர்கள் விடுமுறை எடுப்பதால், அரசின் முயற்சியும், நிதியும் வீணாவதுடன், மாணவர் நலனும் பாதிக்கப்படுகிறது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், முதல் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியரின் கல்வித்தரத்தை மேம்படுத்த, பல்வேறு செயல் திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இதில், ஐந்தாம் வகுப்பு வரை, செயல்வழிக்கற்றல் முறையும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, படைப்பாற்றல் முறையும் செயல்படுத்தப்படுகிறது.

இதில், ஒவ்வொரு ஆண்டும் பாடத்திட்டங்களில் ஏற்படும் மாற்றம், புதிதாக சேர்க்க வேண்டிய பகுதி உள்ளிட்டவை குறித்து, அனைத்து ஆசிரியர்களுக்கும், 15 நாட்கள் பயிற்சியளிக்கப்படுகிறது. சனிக்கிழமைகளில் நடைபெறும் இப்பயிற்சிகளில் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் என, அனைவருக்கும் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

பயிற்சியன்று கலந்து கொள்ள முடியாத கட்டாயம் ஏற்படும் பட்சத்தில், அப்பகுதி உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அனுமதி பெற்று, விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என, விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, ஆசிரியர்கள் பயிற்சிக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

கடந்த, 5ம் தேதி சேலம் மாவட்ட துவக்க மற்றும் நடுநிலை ஆசிரியர்களுக்கு கலை மற்றும் கைவினை பொருட்கள் தயாரிப்பு குறித்து, அந்தந்த வட்டார வள மையங்களில், ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. அன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இதில், கலந்து கொள்வதற்காக, பல ஆசிரியர்கள் விடுமுறை எடுத்து, பயிற்சி வகுப்பில் பங்கேற்பதை தவிர்த்தனர். இதனால்,பயிற்சியில், 20 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலர் ஒருவர் கூறியதாவது: பல கோடி ரூபாய் செலவில், புதிய கல்வி முறைகளை அரசு செயல்படுத்துகிறது. இவற்றை அமல்படுத்துவதற்காக, ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. அப்பயிற்சியின் போது, விடுமுறை எடுப்பதால், அத்திறன்களை மாணவர்களிடம் கொண்டு செல்வதில் தடங்கல் ஏற்படுகிறது.

மாணவர் நலன் பாதிக்கும் என்பதாலேயே, பயிற்சியின் போது, விடுமுறை வழங்கக்கூடாது என, உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், அவர்கள் ஒவ்வொரு பயிற்சியின் போதும் ஆசிரியர்களுக்கு விடுமுறை எடுக்க அனுமதி வழங்குகின்றனர். இதனால், அரசு திட்ட நிதி வீணாவதுடன், மாணவர் நலனும் பாதிக்கப்படுகிறது. இதை தவிர்க்க, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் லாபம் தரும் கொய்யா மரம் பயிர் செய்வதில் விவசாயிகள் தீவிரம்


 கொய்யா பயிர் செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதாக திண்டிவனம் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
திண்டிவனம் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கொய்யா மரம் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து மாமண்டூரை சேர்ந்த செல்வா என்ற விவசாயி கூறிய
தாவது:
கொய்யா மரம் நடவு செய்த இரண்டு ஆண்டில் காய் காய்க்கத் துவங்கிவிடும். இந்த மரம் ஒன்றிற்கு 1 கிலோ பொட்டாஷ், டி.ஏ.பி., மற்றும் பாக்டம்பாஸ் உள்ளிட்ட உரங்கள் போடப்படுகிறது.
கொய்யா மரத்தை சப்பாத்தி பூச்சி தாக்காமல் இருக்க மருந்து அடிக்க வேண்டும். இதில் லக்கோனா ரகம் கொய்யாக் காய் ஆடி, ஆவணி, புரட்டாசி உள்ளிட்ட மாதங்களில் அதிகமாக காய்க்கும்.
காய் அறுவடையின் போது கொய்யா தோட்டத்திற்கு வந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கு ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் போது ஒரு கிலோ 30 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் விழாக்காலங்களில் ஒரு கிலோ காய் 40 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படும்.

நான் தற்போது 7 அரை ஏக்கர் பரப்பளவில் கொய்யா மரத் தோப்பு குத்தகை எடுத்து பயிர் செய்துள்ளேன்.
இந்த பரப்பளவில் ஒரு ஆண்டிற்கு 10 கிலோ எடையுள்ள பெட்டியில் 10 ஆயிரம் பெட்டி காய் அறுவடை செய்வேன். இதனால் எனக்கு ஆண்டு ஒன்றிற்கு செலவுகள் போக 4 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.
கொய்யா மரத்தை சரியாக பராமரித்தால் 12 ஆண்டுகள் வரை விடாமல் காய் காய்க்கும். கொய்யா பயிர் செய்வதன் மூலம் எப்போதும் லாபம் மட்டுமே கிடைக்கும் என்று விவசாயி செல்வா கூறினார்.