உலகத்தமிழ் ஆராய்ச்சி நிலையத்திற்கு, புதிய கட்டடம் அமைக்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னும், இன்று வரை பணிகள் துவங்காமல் உள்ளது. இதனால், எப்போது கட்டடம் இடிந்து விழுமோ என்ற உயிர் பயத்தில், மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
சென்னை, தரமணி வளாகத்தில், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தில், 60க்கும் மேற்பட்ட எம்.பில்., - பிஎச்.டி., மாணவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழின் சிறப்பு, வளர்ச்சி, தமிழரின் பண்பாடு, நாகரிகம், காலாசாரம் ஆகியவை குறித்து, இந்நிறுவனத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஆய்வு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளாக, இக்கட்டடத்தின் நிலை மோசமானது.குறிப்பாக, இடிந்து விழும் நிலையில் உள்ளது.
ஆராய்ச்சி மாணவர்களின் அறையும், உலகப்புகழ் பெற்ற இவ்வாராய்ச்சி நிலையத்தின் நூலகமும் இடிந்து விழும் அபாயத்தில் இருந்தது. பக்கவாட்டுச் சுவர்களின் பெரும் கீறல் விழுந்தது. இதைத் தொடர்ந்து, புதிய கட்டடம் அமைக்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், 3.20 கோடியில், புதிய கட்டடம் அமைக்க, தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதில், மூன்று அடுக்கு கட்டடம் அமைக்கவும், வெளிநாடுகளில் இருந்து ஆராய்ச்சி நிலையத்திற்கு வரும் ஆய்வாளர்கள், மாணவர்கள், தமிழ் அறிஞர்கள் தங்குதவதற்கும், 12 அறைகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான வரைபடமும் தயாரானது.
ஆனால், ஆராய்ச்சி நிலையில், புதிய கட்டடம் கட்டுவதில் ஆர்வமாக இருந்த போதிலும், பொதுப்பணித்துறை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது. இதுகுறித்து, ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
கட்டடம் எந்த வகையில் அமைய வேண்டும் என்பது குறித்து, நான்கு வகையான வரைபடம் தயாரித்து, பொதுப்பணித்துறைக்கு அளித்தோம். ஆனால், பொதுப்பணித்துறை கட்டடம் அமைவதில் ஆர்வம் காட்டவில்லை. வரைபடம் முடிவான பிறகு, நான்கு மாதத்திற்குள், பொதுப்பணித்துறை கட்டுமானப் பணிகளை துவக்க வேண்டும். ஆனால், வரைபடத்தின் படி, கட்டடம் கட்டுவதற்கு, போதுமான பணம் இல்லை என, நிராகரித்தது. புதிய வரைபடம் தயாரிக்க வேண்டும் என்றது.
புதிய வரைபடம் தயார் செய்தால், மீண்டும் அரசின் ஒப்புதல் வாங்குவதற்கு தாமதமாகும் என்பதால், ஏற்கனவே வரைந்த வரைபடத்திற்கு ஆகும் செலவினங்களை, நாங்களே ஏற்றுக் கொள்கிறோம் என்றோம். ஆனால், இன்று வரை பணிகள் துவங்கவில்லை.
இதனால், மாணவர்கள் மட்டுமின்றி, பேராசிரியர்களும் எந்நேரம் கட்டடம் இடிந்து விழுமோ என்ற பயத்தில், தவித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, பொதுப்பணித்துறை கட்டட பிரிவு அதிகாரிகள் கூறுகையில், "இன்னும் இரண்டு நாட்களில் பணிகள் துவங்கி விடும்" என்றனர்.