Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 14 நவம்பர், 2012

இந்தியாவில் உலக கடல்சார் பல்கலைக்கழக கிளை


உலக கடல்சார் பல்கலைக்கழகத்தின் கிளையை, இந்தியாவில் துவக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை மத்திய அமைச்சகம் மேற்கொள்ளும் என்று மத்திய அமைச்சர் வாசன் தெரிவித்தார்.

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில், 2008ம் ஆண்டு நவம்பர், 14ம் தேதி பாராளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டது. நான்காவது பல்கலைக்கழக நாள் கொண்டாட்டம் நேற்று நடந்தது. பல்கலைக்கழக முதல் துணைவேந்தரான விஜயன் வரவேற்று பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி குறித்து பேசினார்.

மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன், சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பல்கலைக் கழகத்திற்கான புதிய "லோகோ'வை அறிமுகப்படுத்தி, விழா மலரை வெளியிட்டு பேசியதாவது:

கடந்த, 1949ம் ஆண்டு இந்திய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு, இந்திய கடல்சார் கல்வியுடன் இணைக்கப்பட்டது. இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு, கடல்சார் வாணிபம் என்பது மிக முக்கியமானது. கடல் வர்த்தகத்தை பொறுத்தவரை வரும், 2015ம் ஆண்டு உலக சந்தையில் இந்தியாவின் பங்கு, 9 சதவீதம் அதிகரிக்கும்.

தற்போது, கடல்சார் பொறியாளர்கள் தட்டுப்பாடு, அதிகளவில் உள்ளது. நாம் ஒவ்வொரு ஆண்டும், மூவாயிரத்திற்கும் அதிகமான பொறியாளர்களை உருவாக்கி வருகிறோம். தனியார் கல்வி நிறுவனங்களும் சிறந்த கடல்சார் பொறியாளர்களை உருவாக்கி வருகிறது.

தற்போதுள்ள தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியை போல கடல்சார் துறையும் மிகப்பெரிய வளர்ச்சியடையும். வரும், 2018 - 19ம் ஆண்டு, அனைத்து மாணவர்களும் கடல்சார் சம்பந்தப்பட்ட, படிப்புகளை தேடி வருவார்கள். இத்துறைக்காக, 285 கோடி ரூபாயினை, அரசு ஒதுக்கியுள்ளது. இதில், உள்கட்டமைப்பிற்காக, 272 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. மற்றவைகளுக்காக, 6.92 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், உலகத் தரமான கடல்சார் கல்வியை நம் மாணவர்களுக்கு தரும் முயற்சியாக, உலக கடல்சார் பல்கலைக் கழகத்தின் கிளையை, இந்தியா அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பல்கலைக் கழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை அமைச்சகம் மேற்கொள்ளும். இவ்வாறு, மத்திய அமைச்சர் வாசன் பேசினார்.

ஹிஜ்ரி புத்தாண்டு - வரலாறு

இன்று முஹர்ரம் முதல் நாள் ,இஸ்லாமிய புத்தாண்டு தினம் !

நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் அவர்களுக்கு அடுத்து வந்த ஜனாதிபதி அபுபக்கர்(ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்திலும் நாம் தற்போது பயன்படுத்தும் ஹிஜ்ரி ஆண்டு பயன்படுத்தப்படவில்லை. உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் இந்த ஹிஜ்ரி ஆண்டு துவங்கப்பட்டது.

அபூமூஸா(ரலி) அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் உங்களிடமிருந்து கடிதம் வருகிறது, ஆனால் அதில் காலம் குறிப்பிடப்படுவதில்லை' என்று கூறியிருந்தார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்தார்கள்... என்ற செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (பத்ஹுல் பாரீ, பாகம் 7, பக்கம் 268)

உமர்(ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்து 'வருடத்தை எந்த நாளிலிருந்து துவங்கலாம்?' என ஆலோசனை கேட்டார்கள். அப்போது அலீ(ரலி) அவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பு பூமியை விட்டு விட்டு நாடு துறந்து சென்ற நாளை எடுத்துக் கொள்ளலாம்' என்றார்கள். அவ்வாறே உமர்(ரலி) அவர்கள் செய்தார்கள்.
நூல்: ஹாகிம் (4287)

மக்கள் (ஆண்டுக் கணக்கை) நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட (அவர்களுடைய நாற்பதாவது வய)தில் இருந்தோ, அவர்களுடைய மறைவிலிருந்தோ கணக்கிடவில்லை. மதினாவுக்கு நபி(ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து) வந்ததிலிருந்தே கணக்கிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் சஅத் (ரலி),
நூல்: புகாரி (3934)

உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 16 அல்லது 17வது ஆண்டில் இந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது.
(பத்ஹுல் பாரீ: பாகம் 7, பக்கம் 268)

நபிகளார் அவர்கள்; மதினா சென்ற பின்னர் தான் இஸ்லாம் வளர்ச்சி பெற்றது. மேலும் இறைவனை நிம்மதியாக வணங்க முடிந்தது. இறையில்லமும் கட்டப்பட்டது. எனவே, இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்த இந்த ஹிஜ்ரத்தை ஆண்டின் பெயராகக் குறிப்பிட்டனர்.

எந்த மாதத்தை முதல் மாதமாக கணக்கிடுவது என்பதில் சிலர் ரஜப் என்றும் சிலர் ரமளான் என்றும் குறிப்பிட்டனர். உஸ்மான் (ரலி) அவர்கள் 'முஹர்ரம்' என்று கூறினார்கள். 'ஏனெனில் இந்த மாதம் கண்ணியமிக்க மாதம். (போர் தடைசெய்யப்பட்ட மாதம்) மேலும், மக்கள் ஹஜ் செய்து விட்டுத் திரும்பும் போது வரும் முதல் மாதம்'
என்று குறிப்பிட்டார்கள்.
(பத்ஹுல் பாரீ:பாகம்7,பக்கம் 268)

இந்த கருத்து தேர்வு செய்யப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.


சிறுநீரிலிருந்து மின்சாரம் கண்டுபிடித்து நைஜீரிய மாணவிகள் சாதனை


நைஜீரியாவை சேர்ந்த மாணவிகள், சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.உலகம் முழுவதும் மின்சாரப்பற்றாக்குறை நிலவுகிறது. ஆப்ரிக்கா நாடுகளில் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

இதற்கிடையே, ஆப்ரிக்க நாடான நைஜீரியாவை சேர்ந்த மாணவிகள், மூன்று பேர், சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை கண்டு பிடித்துள்ளனர். லகோஸ் நகரில் நடந்த, ஆப்ரிக்க சிறு முதலீட்டாளர்கள் மாநாட்டில், இந்த மாணவிகள், தங்கள் கண்டுபிடிப்பை விளக்கினர்.

இவர்கள் கண்டு பிடிப்பின் படி, சிறுநீர், நைட்ரஜன், தண்ணீர், ஹைட்ரஜனாக பிரிக்கப்படுகிறது. பின், ஹைட்ரஜன், வடிகட்டப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. பிறகு அது, சிலிண்டரில் அடைக்கப்படுகிறது. ஹைட்ரஜன், போராக்ஸ் திரவமாக மாறுகிறது. அதிலிருந்து ஹைட்ரஜன் வாயு தனியாக பிரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட ஹைட்ரஜன் வாயு, ஜெனரேட்டருக்கு சென்று மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது."ஒரு லிட்டர் சிறுநீரை பயன்படுத்தி, ஆறு மணி நேரத்திற்கு தேவையான மின்சாரம் தயாரிக்க முடியும்' என்பதை இந்த மாணவிகள் நிருபித்துள்ளனர்.

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு: மதிப்பெண் சலுகை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்


பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு, தகுதி தேர்வு மதிப்பெண்ணில் சலுகை வழங்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு, "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், அனங்கூரைச் சேர்ந்தவர் சங்கீதா. அருந்ததியின சமூகத்தைச் சேர்ந்த இவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: நான், பிஎஸ்சி, மற்றும் பிஎட், பட்டம் பெற்றுள்ளேன். ஆசிரியர் தகுதி தேர்வில், முதல் தாளில், 57.33 சதவீதம், இரண்டாம் தாளில், 57.33, சதவீதம் பெற்றேன். 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு கடிதம் அனுப்பப்பட்டது. எனக்கு அனுப்பப்படவில்லை.

இடைநிலை ஆசிரியர்கள், 7,000 பணியிடங்களுக்கு, முதல் தாளில், 10 ஆயிரத்து 397 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; ஆனால், பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, 20 ஆயிரம் இடங்கள் தேவைப்படுகின்றன. 8,849 பேர் தான் தேர்ச்சி பெற்றுள்ளனர். எனவே, பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப, பற்றாக்குறை உள்ளது.

இடஒதுக்கீட்டுப் பிரிவினரைப் பொறுத்தவரை, சலுகைகள் வழங்க, அரசுக்கு அதிகாரம் உள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களைப் பொறுத்தவரை, ஐந்து சதவீத மதிப்பெண் சலுகை வழங்கினால், அதாவது, 60 சதவீதத்துக்குப் பதில், 55 சதவீத மதிப்பெண் எடுத்தால் போதுமானது, என, இருக்க வேண்டும்.

எனவே, தகுதி மதிப்பெண்ணை, 55 சதவீதமாக நிர்ணயிக்கக் கோரி, அரசுக்கு மனு அனுப்பினேன். தகுதி மதிப்பெண்ணில், எனக்கு சலுகை வழங்கி, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு, நீதிபதி சந்துரு முன், விசாரணைக்கு வந்தது மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன் ஆஜரானார். மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆசிரியர் பணி காலியிட பட்டியல் வெளியிடப்படுமா?


ஜூலையில் நடந்த டிஇடி, தேர்வில், 2,448 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அக், 14ல் நடந்த, அடுத்த தேர்வில், 19 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், முதலில், 2,448 பேர், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். அடுத்ததாக, 19 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்படுவர். மேலும், 2,900 முதுகலை ஆசிரியரும், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பாட வாரியாக உள்ள மொத்த பணியிடங்களின் எண்ணிக்கையை, டிஆர்பி, வெளியிடாமல் உள்ளது. மேலும், மாவட்ட வாரியாக உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களின் பட்டியலை, தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை வெளியிடவில்லை.

காலியிடங்கள் விவரங்களை, இணையதளத்தில், இரு துறைகளும் வெளியிட்டால், இப்போதே, தங்களுக்கு ஏற்ற இடங்களை தேர்வு செய்ய வசதியாக இருக்கும் என, ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்றவர்கள் கருதுகின்றனர்.

இடைநிலை ஆசிரியர், பதிவுமூப்பு அடிப்படையிலும், இதர வகை ஆசிரியர்கள், மதிப்பெண் அடிப்படையிலும் நியமிக்கப்பட உள்ளனர். அதனால், காலியிட பட்டியலை வெளியிட்டால், தகுதி வரிசைப்படி, எந்த இடங்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பதை, இப்போதே தெரிந்துகொள்ள முடியும் எனவும், அவர்கள் தெரிவிக்கின்றனர்

வழக்கமாக, கலந்தாய்வு நடக்கும் இடத்தில், ஒரு மணி நேரம் முன்பு, காலி பட்டியல் வெளியிடப்படுகிறது. இதனால், பட்டியலை பார்ப்பதற்கு, தேர்வு பெற்றவர்கள், முட்டி மோதும் நிலை இருக்கிறது.

சமீபகாலமாக, "ஆன்-லைன்&' வழியாக, கலந்தாய்வு நடந்து வருவது, மேற்கண்ட பிரச்னையை தீர்க்கும் என்றாலும், காலியிட பட்டியலை, இப்போதே வெளியிட வேண்டும் என்பது, தேர்வு பெற்றவர்களின் கோரிக்கையாக உள்ளது

இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், "காலியிட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. முழுமையான விவரங்கள் கிடைத்ததும், இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தன.

மாவட்ட தலைநகரங்களில் ஆங்கிலப் பயிற்சி


மாணவர்களின் ஆங்கில அறிவை வளர்க்கும் வகையில், கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் தொழிற் நுட்ப கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நடப்பு கல்வி ஆண்டான, 2012-13ல், இப்பயிற்சி துவங்குகிறது.

முதல்கட்டமாக, தமிழகத்தில் உள்ள, 96 பிற்படுத்தப்படுத்தப்பட்டோர் நல விடுதிகள், 47 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள், 13 சீர்மரபினர் நல விடுதிகள், 5 சிறுபான்மையினர் நல விடுதி என, 161 கல்லூரி விடுதிகளின் மாணவர்கள், இதில் பயிற்சியை பெற உள்ளனர்.

ஒரு மாணவருக்கு, 2,800 ரூபாய் வீதம், 6,550 மாணவர்களுக்கு, 1.83 கோடி ரூபாய், மாநில அரசு சார்பில் செலவு செய்யப்பட உள்ளது. சென்னையில், 500 மாணவர்கள், திருச்சியில் 475, தஞ்சாவூரில் 475, காஞ்சிபுரத்தில் 250, திருவண்ணாமலையில் 150, திருவள்ளூரில் 100 மாணவர்கள் என, 32 மாவட்டங்களை சேர்ந்த, 6,550 மாணவர்கள், இந்தப் பயிற்சி மூலம், பயன் பெற உள்ளனர். 10 மாதங்கள் அளிக்கப்படும் இந்தப் பயிற்சி, அடுத்த மாதம் துவங்குகிறது.

ஒரு மணி நேரம் அளிக்கப்படும், இப்பயிற்சியில், பணிசார்ந்த மொழி கற்பித்தல், ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி, நடைமுறையில் பயன்படுத்தும் அடிப்படை சொற்கள், வாக்கியங்களை புரிந்து கொள்ளுதல், தகவல்களை தெளிவாக புரிந்து கொள்ளுதல், சரளமாகவும், தன்னிச்சையாகவும் ஆங்கிலம் பேசுதல், பிரபலமான தலைப்புகளிலிருந்து கருத்துகளை தெரிவித்தல், நிகழ்வுகள், அனுபவங்களை விவரித்தல் மற்றும் பேச்சு, இலக்கணம், உச்சரிப்பு உள்ளிட்டவைகளில் மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாணவர்களின் உயர் கல்விக்கும், படிப்பை முடித்து செல்லும் மாணவர்கள், வேலையில் சேர எதிர் கொள்ள கூடிய தகுதி தேர்வு, குழு உரையாடல் மற்றும் நேர்காணல் உள்ளிட்டவைகளை, எளிதில் சமாளித்து வெற்றி பெறுவதற்கும் இப்பயிற்சி உறுதுணையாக இருக்கும்.

முதல் கட்டமாக, விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் பயன் பெற்றவுடன், அடுத்த கட்டமாக, வட்ட, மாவட்ட தலைநகர்களில் பயிற்சி மையங்களை அமைக்க, டெண்டர் கோரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.