Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 27 நவம்பர், 2012

தொழில் முனைவோருக்கான புதிய திட்டம் :25 சதவீதம் அரசு மானியத்துடன் அமல்


தமிழகத்தில் 25 அரசு மானியத்துடன் தொழில் முனைவோருக்கு வரும் 1ம் தேதி முதல் புதிய திட்டத்தை அரசு அமல்படுத்த உள்ளது. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

 வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் செயலாக்கம் பெற உள்ள இத்திட்டத்தின் கீழ் பட்டப் படிப்பு, பட்டய படிப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்து தேர்ச்சி பெற்ற முதல் தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள், சொந்தமாக தொழில் துவங்கும் வகையில் மானியத்துடன் கூடிய தொழிற் கடன் உதவி வழங்கும் விதத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

வயது வரம்பு: பொது பிரிவினர் 21-35 வயதுக்கு உட்பட்டவர்கள், சிறப்பு பிரிவினர் 45 வயது வரை தகுதியானவர்கள். மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கையர், மாற்றுத் திறனாளிகள் சிறப்பு பிரிவில் அடங்குவர்.

தகுதிகள் :
பட்டப் படிப்பு, பட்டய படிப்பு, ஐ.டி.ஐ, அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழில் பயிற்சி தகுதியானவையாகும்.

விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் தொடர்ந்து 3 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

திட்ட மதிப்பீடு: 5 லட்சம் முதல் 100 லட்சமாக இருக்க வேண்டும். திட்ட மதிப்பீட்டில் பொது பிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் முதலீடு செய்ய வேண்டும்.

அரசு மானியம்:
திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சமாக 25 லட்சம் வரை அரசு மானியமாக வழங்கும். கடன் உதவி பெற பாங்கில் இருந்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட விண்ணப்பதாரர் ஒரு மாதம் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி கட்டாயமாக பெற வேண்டும். ஏற்கனவே அரசு துறைகள் மூலம் கடன் பெற்றவர்கள் இத்திட்டத்தில் கடன் பெற இயலாது. ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் முனைவோர் கூட்டாக சேர்ந்து பங்குதாரர் நிறுவனங்களாக அமையும் சூழ்நிலையில் அனைத்து பங்குதாரர்களுக்கும் தனித்தனியாக திட்டத்தில் கடன் பெற தகுதிகள் இருக்க வேண்டும்.

மாவட்ட கலெக்டர் தலைமையில் உள்ள மாவட்ட குழுவில் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். வரும் 1ம் தேதி முதல் இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். இத்திட்டம் குறித்து மேலும் விபரங்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை (டெலிபோன் - 0462 - 2572384) நேரில் தொடர்பு கொள்ள வேண்டும்,என்று திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் செல்வராஜ் தெரிவித்தார்.

தமிழக அரசு உத்தரவு :ஐகோர்ட் ரத்து


சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் உள்ள இடத்தை, மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு, தமிழக அரசு உத்தரவிட்டதை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. அந்த இடத்தில் இருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, ஆட்சேபணைகளை பெற்று, புதிய உத்தரவு பிறப்பிக்குமாறு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில், புகாரி ஓட்டல் மற்றும் கட்டடங்கள் அடங்கிய நிலம் உள்ளது. இந்த இடத்தை, ராஜா சர் ராமசாமி முதலியார் அறக்கட்டளைக்கு, 1888ம் ஆண்டு, தமிழக அரசு வழங்கியது. பின், அறக்கட்டளையை முறையாக நிர்வகிக்க, சொத்தாட்சியர் (அபிஷியல் டிரஸ்டி) வசம், சொத்துக்கள் கொண்டு வரப்பட்டது.அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்பட்ட இடத்தை, திரும்பப் பெறவும், அந்த இடத்தை, மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ஒப்படைக்கவும், கடந்த, மே மாதம், வருவாய் துறை உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, ஒரு மாதத்துக்குள் இடத்தை காலி செய்து ஒப்படைக்கும்படி, சொத்தாட்சியருக்கு, தாசில்தார் நோட்டீஸ் அனுப்பினார்.

இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், இஸ்மாயில், புகாரி சன்ஸ், ராம்பிரசாத் உள்ளிட்டோர், மனுக்கள் தாக்கல் செய்தனர். கட்டடங்களில் வாடகைக்கு, குத்தகைக்கு இருப்பவர்கள், இந்த மனுக்களை தாக்கல் செய்தனர்.மனுக்களை விசாரித்த, நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு:நிபந்தனைகளை மீறியதாக கூறி, இடத்தை திரும்பப் பெறுவதாக, காரணம் கூறப்பட்டுள்ளது. இந்தக் காரணம் தவறானது. நிலத்தில் கட்டடம் கட்டுவதற்கு, அரசும் அனுமதி வழங்கியுள்ளது. பொது காரியத்துக்காக, இடம் தேவைப்படுகிறது என்பதில் நியாயம் இருக்கலாம்.இடத்தை திரும்பப் பெறுவது என்றால், அதில், சட்டப்பூர்வமாக வாடகைக்கு இருப்பவர்கள் உள்ளிட்டவர்கள், மெட்ரோ ரயில் திட்டத்தில் கூறியுள்ளபடி, நஷ்டஈடு பெற உரிமையுள்ளது. அந்த இடத்தில் இருந்து வெளியேறவும், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு முன், அவர்கள் தரப்பு கருத்தை கேட்கவில்லை.நஷ்டஈட்டை நிர்ணயிக்க, அவர்களை வெளியேற்றுவதற்கு முன், அவர்கள் தரப்பை கேட்க வேண்டும். எனவே, அரசு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இடம், கட்டடங்களில் இருக்கும் மனுதாரர்கள், சொத்தாட்சியர், இணை அறங்காவலர், மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகியவற்றுக்கு, அரசு, நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
அவர்களின் ஆட்சேபணைகளை பரிசீலித்து, அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி, புதிய உத்தரவுகளை, அரசு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசில் சித்த மருத்துவப் பணி நியமனம்


தமிழ்நாடு அரசுப் பணி இடங்களை டி.என்.பி.எஸ்.சி., தக்க தேர்வு முறைகள் மூலமாக நிரப்பி வருவது நாம் அறிந்ததே. 1929லேயே மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் என்ற பெயரில் துவங்கப்பட்ட அமைப்புதான் பின்நாட்களில் டி.என்.பி.எஸ்.சி., என்று பெயர் மாற்றம் பெற்றது.

1970ல், இது தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனாக மாறியது. இந்த அமைப்பின் சார்பாக 83 சித்தா உதவி மருத்துவ அதிகாரிகள், 6 ஆயுர்வேத உதவி மருத்துவ அதிகாரிகள், 24 யுனானி உதவி மருத்துவ அதிகாரிகள் மற்றும் 14 ஹோமியோபதி உதவி மருத்துவ அதிகாரிகளைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தேவைகள்: தமிழக அரசின் உதவி மருத்துவ அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2012 அடிப்படையில் 18 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். சித்தா பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் எச்.பி.ஐ.எம்.,(சித்தா), ஜி.சி.ஐ.எம்.,(சித்தா), எம்.டி.,(சித்தா), பி.ஐ.எம்.,(சித்தா), எல்.ஐ.எம்.,(சித்தா) அல்லது பி.எஸ்.எம்.எஸ்., பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.

ஆயுர்வேத மற்றும் யுனானி உதவி மருத்துவ அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் மேலே குறிப்பிட்ட பிரிவுகளிலான படிப்பை ஆயுர்வேதம் அல்லது யுனானி பிரிவுகளில் முடித்திருக்க வேண்டும். பி.ஏ.எம்.எஸ்., மற்றும் பி.யு.எம்.எஸ்., பட்டப் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலம் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஹோமியோபதி பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் எப்.எப்.ஹோம்(லண்டன்), எம்.எப் ஹோம்(லண்டன்), டி.எப் ஹோம்(லண்டன்) மற்றும் மேற்கு வங்க நிறுவனங்களின் மூலமான ஏதாவது ஒரு டிப்ளமோ படிப்பை ஹோமியோபதியில் முடித்திருக்க வேண்டும்.

மற்றவை: உதவி மருத்துவ அதிகாரிகளுக்கான தேர்ச்சி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு கம்ப்யூட்டர் வாயிலான தேர்வாக இருக்கும். எழுத்துத் தேர்வை தமிழ் நாட்டில் சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூரில் எதிர்கொள்ள வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள மேற்கண்ட உதவி மருத்துவ அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.175/ஐக் கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களை பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.

ஆன்லைனில் பதிவு செய்ய இறுதி நாள்: 11.12.2012
கட்டணம் செலுத்த இறுதி நாள்: 13.12.2012. எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 06.01.2013 காலை 10 முதல் மதியம் 1 வரை.

இணையதள முகவரி: www.tnpsc.gov.in/notifications/48_not_eng_armo2k12.pdf