Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 24 மார்ச், 2013

உரிமையைக் கோரிட உடன்பிறப்பே ஓரணி திரள்வோம்!


தாய்ச்சபை உம்மை அழைக்கிறது
தீன்குல மாணவக் கண்மணி வா!
உரிமையைக் கோரிட உடன்பிறப்பே
ஓரணி திரள்வோம் வாகுடன் வா!

மதியைக் கெடுக்கும் மதுஒழிக்க
மாவட்டத் தலைநகர் மீதினிலே
கவனம் ஈர்த்திடும் பேரணிக்கு
கண்ணே மணியே களிப்புடன் வா!

தேசிய தமிழக இடஒதுக்கீட்டை
துணிவுடன் கேட்போம் துடிப்பே வா!
பிறப் புரிமைதனை வென்றெடுக்க
பிறைக்கொடி ஏந்திய புயலே வா!

வன்சிறை வாடும் சோதரனின்
விடுதலை கோரிட வனப்பே வா!
எட்டுத் திக்கிலும் நம்கரங்கள்
ஏப்ரல் இரண்டில் இணைப்போம் வா!



---------கே.வி.டி.ஹபீப் முஹம்மது
தலைவர் ,காயிதே மில்லத் பேரவை -கத்தார்

ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்யக் கோரி பாளை.யில் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற நிதி உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாளை.யில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற நிதி உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் சார்பில் ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாளை.யில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

உண்ணாவிரதத்திற்கு மாநில பொது செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். மாநில உதவி பொதுசெயலாளர் தாயப்பன் வரவேற்றார். சி.எஸ்.ஐ., நெல்லை திருமண்டல மேல்நிலைப்பள்ளி மேலாளர் வேதநாயகம் , இரட்சண்யசேனை பள்ளிகள் செயலாளர் ஆல்பர்ட் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்து பேசினர்.

போராட்டத்தில் நெல்லை முஸ்லிம் அனாதை நிலைய செயலாளர் செய்யது அகமது கபீர், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் பொது செயலாளர் போத்திலிங்கம், சி.எம்.எஸ்., எவாஞ்செலிக்கல் பள்ளிகள் செயலாளர் டேவிட் ஸ்டீபன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், நிர்வாகிகள் சிவஞானம், ஆரோக்கியராஜ், பாலசுந்தர், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சுடலைமணி, தலைவர் ராஜ்குமார், மாநில செயலாளர் முருகேசன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் மனோகரன், உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் பஸ்லுக் ஹக், இடைநிலை ஆசிரியர் சங்க பொது செயலாளர் இசக்கியப்பன், கைத்தொழில் ஆசிரியர் சங்க மாநில கவுரவ தலைவர் சுவாமிநாதன், டி.டி.டி.ஏ., துவக்கப்பள்ளி மேலாளர் சுவாமிதாஸ், தமிழக ஆசிரியர் கூட்டணி சாம்மாணிக்கராஜ் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

போராட்டத்தில் சங்க மாநில பொருளாளர் டேவிட் அய்யாத்துரை, மாநில துணை தலைவர்கள் கணேசன், ஜேபஸ் பொன்னையா, சண்முகநாதன், சண்முகவேல், மாநில துணை செயலாளர்கள் விவேகானந்தன், பத்பநாபன், கோவிந்தன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற நிதி உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகிகள், மேலாளர்கள், ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மூட்டா மாநில பொருளாளர் சுப்பாராஜ் உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார். சங்க மாவட்ட தலைவர் கணேஷ்குமார் நன்றி கூறினார். 

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் தேர்வு முறைகேடு அதிகம்: கல்வியில் பின்தங்கிய நிலை காரணமா?


 பிளஸ் 2 தேர்வில், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, 18 மாவட்டங்களில் இருந்து, 289 மாணவர்கள், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டுள்ளனர். கல்வியில் மிகவும் பின் தங்கியுள்ள, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் போன்ற, வட மாவட்டங்களில், தேர்வு முறைகேடுகள் அதிகம் நடந்துள்ளன.

கடந்த 1ம் தேதியில் இருந்து, பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வருகின்றன. இதுவரை, தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், கணக்குப் பதிவியல், வணிகவியல், பொருளியல், விலங்கியல், உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம் ஆகிய தேர்வுகள் நடந்துள்ளன. நாளை, 25ம் தேதி, உயிர் வேதியியல் தேர்வும், கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வும் நடக்கின்றன.

வரும் 27ம் தேதி, புள்ளியியல் மற்றும் அரசியல் அறிவியல் தேர்வுகளுடன், பிளஸ் 2 தேர்வுகள், முடிவுக்கு வருகின்றன. கடந்த 18ம் தேதி வரையிலான தேர்வுகளில், "பிட்" வைத்திருந்தது, விடைத்தாள் துண்டுகளைப் பார்த்து, விடை எழுதியது, பக்கத்து மாணவரைப் பார்த்து எழுதியது, விடைத்தாள்களை பரிமாறியபடி, விடைகளை எழுதியது உள்ளிட்ட, பல்வேறு தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, 289 மாணவர்கள், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டுள்ளனர்.

கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருவள்ளூர், தருமபுரி, வேலூர் உள்ளிட்ட, 18 மாவட்டங்களில் தான், தேர்வு முறைகேடுகள் அதிகம் நடந்துள்ளன. திருப்பூர், கன்னியாகுமரி, தேனி, மதுரை உள்ளிட்ட, 14 மாவட்டங்கள், தேர்வு முறைகேடு பட்டியலில் இடம் பெறவில்லை.

தேர்வு முறைகேடுகளில், கல்வியில் பின்தங்கியுள்ள வட மாவட்டங்கள் தான், அதிகம் இடம் பெற்றுள்ளன. அதிகபட்சமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில், 130 மாணவர்கள், தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர், 27 மாணவர்களுடன், இரண்டாம் இடத்திலும்; விழுப்புரம், 22 பேருடன், மூன்றாம் இடத்திலும் உள்ளன. கல்வி தரத்திற்கு பெயர் பெற்ற சென்னை மாவட்டமும், 19 மாணவர்களுடன், நான்காம் இடத்தில் இடம் பெற்றுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில், 14 மாணவர்கள், "பிட்" அடித்ததால், ஐந்தாம் இடத்தில் உள்ளது. மிகக் குறைவாக, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில், தலா ஒரு மாணவர் மட்டுமே, தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். பொது தேர்வுகளில், ஆண்டுதோறும் முதலிடத்தை வகிக்கும், விருதுநகர் மாவட்டத்திலும், இரு மாணவர்கள் பிடிபட்டுள்ளனர்.

வட மாவட்டங்கள், தொடர்ந்து கல்வியில் பின் தங்கியிருப்பதை, இந்த தேர்வு முறைகேடுகள், எடுத்துக் காட்டுகின்றன. ஆண்டு முழுவதும் படித்த ஒரு பாடத்தில் இருந்து, தேர்ச்சிக்குரிய, 70 மதிப்பெண்களைக் கூட பெற முடியாது என்ற நம்பிக்கையின்மை ஏற்பட்டு, எப்படியாவது தேர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன், மாணவர்கள், முறைகேட்டில் ஈடுபடுகின்றனர்.

பள்ளி கல்விக்காக, ஆண்டுதோறும், பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், கல்வியில் பின் தங்கியுள்ள மாவட்டங்களை முன்னேற்றுவதற்கு, கல்வித்துறை, உருப்படியாக, எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்பதையே, முறைகேடு புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

முந்தைய தி.மு.க., ஆட்சியில், வட மாவட்டங்களில், கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த நிதியில் எந்த திட்டங்களை செய்தனர், அதனால், என்ன முன்னேற்றம் ஏற்பட்டது என்பது, அதிகாரிகளுக்கே வெளிச்சம்.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேர்வு முறைகேடுகளை, வெறும் எண்ணிக்கையாக பார்க்காமல், இதன் பின்னணிக்கான காரணங்களை, முழுவதுமாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில், மாணவர்களை மட்டும், மட்டம் தட்டக்கூடாது.

கற்பித்தலில், செயல்படுத்தப்படும் கல்வி திட்டங்களில், ஆசிரியர் செயல்பாடுகளில் உள்ள ஓட்டைகளை கண்டறிந்து, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வட மாவட்ட பள்ளிகளில், எப்போதுமே, ஆசிரியர் காலி பணியிடங்கள், அதிகம் இருப்பதும், தரம் குறைவதற்கு ஒரு முக்கிய காரணம்.

கல்வியில் முன்னேறியுள்ள தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தான், ஆசிரியர் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுகின்றனர். இதனால், இவர்களை, வட மாவட்டங்களில், பணி நியமனம் செய்ததும், சில ஆண்டுகளுக்குப்பின், மீண்டும், தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு சென்று விடுகின்றனர்.

இதனால், தொடர்ந்து, வட மாவட்டங்களில், ஆசிரியர் பணியிடங்கள் காத்தாடுகின்றன. இந்நிலை மாற, வட மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரிகளும், அதிக எண்ணிக்கையில், ஆசிரியர் தேர்வுகளில், தேர்வு பெற வேண்டும். இதற்கு, முதலில், பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதுடன், இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், உயர்கல்வி பெறுவதையும், அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த இரண்டையும் செய்தால், கல்வியில், வட மாவட்டங்கள், வெகுவாக முன்னேறும். இந்த நிலை உருவானால், சமூக, பொருளாதார நிலையிலும், வட மாவட்டங்கள் முன்னேற்ற நிலையை அடையும். இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.

கல்வி, வேலைவாய்ப்பு அளிக்க தனி இணையதள வசதி: யு.ஜி.சி.


கல்வித் துறைகளில், ஆசிரியர் பணி, ஆராய்ச்சிப் பணிகள் உள்ளிட்ட, பல்வேறு வேலைவாய்ப்புகளை, இணையதளம் வழியாக பெறுவதற்கு, யு.ஜி.சி., ஏற்பாடு செய்துள்ளது. இதற்கென, தனி இணையதளத்தை துவக்கி உள்ளது.

இதில், வேலை எதிர்பார்ப்போர், வேலை தரும் கல்வி நிறுவனங்கள் என, இரு பிரிவினரும், பதிவு செய்து கொள்ள வேண்டும் என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது. "நெட், செட்" மற்றும் பி.எச்டி., முடித்தவர்கள், கல்லூரி மற்றும் பல்கலைகளில், வேலைவாய்ப்புகளை பெறுவதற்காக, www.ugc.ac.in என்ற தனி இணையதளம் வழியாக, புது இணையதள வசதியை, யு.ஜி.சி., ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி, மேற்படி கல்வி தகுதியைக் கொண்டவர்கள், தங்களைப் பற்றிய விவரங்களை, பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.தாங்கள் எதிர்பார்க்கும் வேலைகளை, அதில் குறிப்பிடலாம்.

அதேபோல், வேலைவாய்ப்புகளை அளிக்க விரும்பும் கல்வி நிறுவனங்களும், தங்கள் நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்பு விவரங்களை, இந்த இணையதளத்தில் வெளியிடலாம். இரு தரப்பினரையும், சந்திக்க வைப்பதன் மூலம், நிறைய பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என, யு.ஜி.சி., நம்புகிறது.

கல்லூரிகளில், ஆசிரியர், முதல்வர் உள்ளிட்ட, பணிகளை எதிர்பார்த்து, இதுவரை, 27 ஆயிரத்து 276 பேர், பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கோடையின் தொடக்கமே சதத்தை தாண்டியது !


கோடை காலம் தொடங்கியதை அடுத்து மாநிலம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை லட்சத்தீவு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது.

இதன் காரணமாக தென்தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால் காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழந்ததால் தமிழகத்தில் தற்போது மழை பெய்ய வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:

லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டியுள்ள கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தற்போது வலுவிழந்து வருகிறது.

இருப்பினும் இதன் காரணமாக கேரளத்தின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தைப் பொருத்தவரை வறண்ட வானிலையே காணப்படும் என்றனர்.

சனிக்கிழமை பதிவான வெயில் அளவு (டிகிரி ஃபாரன்ஹீட்டில்):

திருச்சி - 103

கரூர் - 102

மதுரை, சேலம் - 101

தருமபுரி - 100

கோவை - 99

சென்னை - 97

வேலூர் - 95

கன்னியாகுமரி, கடலூர் - 92

தூத்துக்குடி - 91

நாகப்பட்டினம் - 89

குன்னூர் - 74

கொடைக்கானல் - 69