Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 30 நவம்பர், 2012

நெல்லையில் காய்கறிகளின் விலைகள் குறைவு!


நெல்லை டவுன் நயினார் குளம் மார்க்கெட்டில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மொத்த கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு ஆந்திரா, கர்நாடகா, விருதுநகர், சிவகாசி, ஒட்டன்சத்திரம், பொள்ளாச்சி, தேனி, கம்பம், ஓசூர் போன்ற வெளியூர்களில் இருந்து தக்காளி, கத்திரிக்காய், கோஸ், உருளைக் கிழங்கு, பல்லாரி, பீட்ரூட் போன்ற காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இதுபோல் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை, திருப்பணி கரிசல்குளம், திடியூர், செங்குளம், மானூர், ரஸ்தா போன்ற உள்ளூர் கிராமங்களில் இருந்து கத்தரி, பொடி உள்ளி, தக்காளி போன்ற காய்கறி வகைகளும் விற்பனைக்கு வருகின்றன. இந்த மார்க்கெட்டில் இருந்து தான் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால், தண்ணீர் இல்லாமல் விவசாயம் கடும் வறட்சியை சந்தித்துள்ளன. இதன் காரணமாக விளைச்சல் இல்லாமல் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

உள்ளூர் காய்கறிகளின் வரத்துகள் அதிகம் இல்லாததால் நெல்லை மார்க்கெட்டில் காய்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் ஏற்றமும், இறக்கமும் கண்டுவருகின்றன.

நெல்லை டவுன் மார்க்கெட்டில் நேற்றைய நிலவரப்படி, உருளைக் கிழங்கு கிலோ ரூ.24க்கும், தக்காளி ரூ.15க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கத்தரிக்காய் 15, வெண்டைக்காய் 18, கோஸ் 10, பீன்ஸ் 25, முருங்கைக்காய் 40, கேரட் 20, மிளகாய் 15, பல்லாரி 20, சேனைக்கிழங்கு 15, பொடி உள்ளி 15, பூசணி 8, பீட்ரூட் 12, புடலங்காய் 15, பாகற்காய் 15, அவரைக்காய் 30, கருணை கிழங்கு 18, எழுமிச்சை 40க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக கார்த்திகை மாதங்களில் காய்கறிகளின் விலைகள் அதிகரிப்பது வழக்கம். வழக்கத்திற்கு மாறாக நேற்று பெரும்பாலான காய்கறிகளின் விலைகள் வெகுவாக குறைந்துள்ளன.உள்ளூர்களில் இருந்து மொத்த கடைக்கு வரும் காய்கறிகளின் வரத்துகள் குறைந்த போதிலும், வெளியூர்களில் இருந்து காய்கறிகளின் வரத்துகள் அதிகமாக வந்துகொண்டிருக்கின்றன. இதனால் காய்கறிகளின் விலைகள் குறைந்துள்ளன. இன்னும் ஓரிரு நாட்கள் இதே நிலை நீடிக்கும் என மார்க்கெட் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் 1.21 கோடி மக்கள் ஏழைகள்

2009-10ம் ஆண்டு புள்ளிவிபரத்தின் அடிப்படையில் நாட்டில் உள்ள ஏழைகளின் எண்ணிக்கையை மாநில வாரியாக திட்டக் குழு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் உத்திர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் 7.37 கோடி ஏழை மக்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பீகாரில் 5.43 ‌கோடி ஏழைகளும், மகாராஷ்டிராவில் 2.7 கோடி ஏழைகளும் உள்ளனர்.

டெண்டுல்கர் கமிட்டி கொள்கையின்படி அளிக்கப்பட்ட இந்த பட்டியலை திட்டக்குழு நேற்று பார்லிமென்ட்டில் தாக்கல் செய்தது. சுகாதார, கல்வி, உண்ணும் உணவு ஆகியவற்றிற்காக செலவிடப்படும் தொகையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட புள்ளி விபரத்தின்படி மத்திய பிரதேசத்தில் 2.61 கோடி பேரும், மேற்கு வங்கத்தில் 2.4 கோடி பேரும், ஆந்திராவில் 1.76 கோடி பேரும், ராஜஸ்தானில் 1.67 கோடி பேரும், ஒடிசாவில் 1.53 கோடி பேரும், கர்நாடகாவில் 1.42 கோடி பேரும், குஜராத்தில் 1.36 கோடி பேரும், ஜார்க்கண்டில் 1.26 கோடி பேரும், தமிழகம் மற்றும் சட்டீஸ்கரில் 1.21 கோடி பேரும், அசாமில் 1.16 கோடி பேரும் உள்ளனர். மிகவும் குறைந்த அளவாக அரியானாவில் 49.96 லட்சம் ஏழை மக்கள் உள்ளனர். 

155 மாவட்டங்களில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்


கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இல்லாத, 155 மாவட்டங்களில், புதிதாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்கப்படும். இந்த பள்ளிகள், தனியார் பங்களிப்புடன் துவக்கப்படாது என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில், கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து, அமைச்சர் ராஜு, நேற்று கூறியதாவது: நடப்பு, 12வது, ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012 - 17), நாடு முழுவதும், 500, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்கப்படும். கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இல்லாத, 155 மாவட்டங்களில், இந்த பள்ளிகள் துவக்கப்படும்.

60 இடங்களில், பள்ளிகளுக்கான கட்டடங்கள் கட்டப்படுகின்றன. கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் கட்டுவதில், தனியாருடன் இணைந்து செயல்படலாம் என, இப்பள்ளி கவர்னர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. எனினும், அந்த முடிவு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

தனியாருடன் இணைந்து, கே.வி., பள்ளிகள் துவக்கப்பட மாட்டாது. பொதுத் துறை நிறுவனங்களும், உயர் கல்வி நிறுவனங்களும், கே.வி., பள்ளிகளுக்கு, இலவசமாக நிலம் கொடுத்து உதவலாம். இவ்வாறு, அமைச்சர் ராஜு கூறினார்.

யாசர் அரபாத்தின் போராட்டத்திற்கு வெற்றி ,பாலஸ்தீன் இறையாண்மை உள்ள சுதந்திர நாடு :ஐநா அங்கீகாரம்


பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து வழங்கும் தீர்மானம் ஐ.நா.வில் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதற்கு இந்தியா உள்பட 138 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.  யாசர் அராபத்தின் கடும் போராட்டத்துக்கு பிறகு பாலஸ்தீனம் தனி நாடானது. எனினும் ஐ.நா.வால் தனி நாடு அந்தஸ்து வழங்கப்படவில்லை. இதையடுத்து தனி நாடு அந்தஸ்து வழங்க கோரி தொடர்ந்து பாலஸ்தீன தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் ஐ.நா.வில் நேற்று கொண்டு வரப்பட்டது.

ஐ.நா.வில் மொத்தமுள்ள 193 உறுப்பு நாடுகளில், இந்தியா உள்பட 138 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தன. அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. மற்ற நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் ஒதுங்கி கொண்டன. இதையடுத்து தீர்மானம் வெற்றி பெற்றது. எனினும், உறுப்பு நாடுகள் பட்டியலில் சேராத ஐ.நா. கண்காணிப்பு நாடுகள் வரிசையில் பாலஸ்தீனம் இடம்பெறும். இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறுகையில், வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையாலும், அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டதாலும் தீர்மானம் நிறைவேறி உள்ளது, என்றார். ஓட்டெடுப்புக்கு முன்பு பாலஸ்தீன தலைவர் முகமது அப்பாஸ் பேசுகையில், ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேறினால், பாலஸ்தீனத்துக்கு பிறந்த நாள் சர்ட்டிபிகேட் வழங்கியது போல் இருக்கும் என்று தெரிவித்தார்.

ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், இன படுகொலை, போர் குற்றங்கள், மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கும் சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் பாலஸ்தீனம் வழக்கு தொடர்ந்து நீதி பெற முடியும். இதுகுறித்து இங்கிலாந்து கூறுகையில், இஸ்ரேல் தாக்குதல் குறித்து கிரிமினல் கோர்ட்டை பாலஸ்தீன தலைவர்கள் அணுக முடியும் என்று தெரிவித்துள்ளது