Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 8 மே, 2013

அறிவியல் படிப்புகளுக்கான உதவித் தொகைகள்


KVPY என்று சுருக்கமாக அழைக்கப்படும் "கிஷோர் வைக்யானிக் ப்ரோட்சஹான் யோஜனா" உதவித்தொகை வருடாவருடம் அறிவியல் மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகும். 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படிப்பவர்களும், இளநிலை அறிவியல் பட்டப்படிப்பில் முதல் அல்லது இரண்டாம் வருடம் படிப்பவர்களும், M.B.B.S. படிப்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த உதவித்தொகை 4000 முதல் 7000௦௦௦ டாலர்கள் வரை மதிப்புடையது. மாணவர் தகுதிக்கேற்ப தொகை வேறுபாடும்.

இந்த உதவித்தொகை திட்டத்தின் பல்வேறு வகைகளை நாம் இங்கே விரிவாக வழங்கியுள்ளோம்.

அடிப்படை அறிவியல்கள்: (Basic Sciences)

Stream SA :

11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் இந்த வகையில் சேருகிறார். அதேசமயம் அவர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் குறைந்தது 75 % மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

Stream SB +2 :

தற்போது 12 ஆம் வகுப்பு படித்துக்கொண்டு, இளநிலை அடிப்படை அறிவியல் படிப்புகளில் சேர ஆர்வமாக இருக்கும் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் இந்த உதவித்தொகையை பெற, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் குறைந்தபட்சம் 75 % மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

Stream  SB:

இளநிலை அடிப்படை அறிவியல் படிப்புகளை படிக்கும் மாணவர்கள் அனைவரும் இதற்கு தகுதி பெற்றவர்கள். அதேசமயம் அவர்கள் 12  ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அறிவியல் பாடங்களில் குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

Stream  SP: (மருத்துவம்)

ப்ராஜெக்ட் செய்ய விரும்பும் MBBS மாணவர்கள் இதற்கு தகுதியுடையவர்கள். அவர்கள் முதல் அல்லது இரண்டாம் வருடம் படிப்பவர்களாக இருக்க வேண்டும்.

மேலும் அவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் பாடங்களில் குறைந்தது 75% மதிப்பெண் பெற்றவராகவோ, முதல் வருட MBBS  படிப்பில் குறைந்தது 60% மதிப்பெண் பெற்றவராகவோ இருத்தல் வேண்டும். மேலும் பயோமெடிக்கல் ஆராய்ச்சி ப்ராஜெக்ட் நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

Stream  SP : (அடிப்படை அறிவியல்கள்)

ப்ராஜெக்ட் செய்ய விரும்புபவர்கள், 11 மற்றும் 12  ஆம் வகுப்பு படிப்பவர்கள், அடிப்படை அறிவியலில் B.sc /BS /Int M.sc போன்ற படிப்புகளில் முதல் அல்லது இரண்டாம் வருடம் படிப்பவர்கள் மற்றும் BE/B.Tech/BArch போன்ற படிப்புகளில் முதல் அல்லது இரண்டாம் வருடம் படிக்க வேண்டும்.

மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும் மாணவர்கள், முதல் வருட படிப்பில் குறைந்தது 60 % மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேற்கூறிய அனைத்து பிரிவுகளிலும் SC /ST  பிரிவை சேர்ந்தவர்கள் 10% மதிப்பெண் விலக்கு பெற தகுதியானவர்கள்.

தேர்ந்தெடுக்கும் முறை:
இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொரு மாணவரும், தமது ப்ராஜெக்ட் அறிக்கையை (இந்த விண்ணப்பத்திற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் செய்து முடிக்கப்பட்ட) விண்ணப்பத்துடன் சமர்பிக்க வேண்டும். பிறருடன் இணைந்து செய்த ப்ரொஜெக்ட்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. ப்ராஜெக்ட் மற்றும் விண்ணப்பத்தை ஆய்வு செய்தபிறகு, தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த நேர்முகத் தேர்வே, தேர்ந்தேடுத்தளுக்கான கடைசி கட்டமாகும்.

அடிப்படை அறிவியல் பாடங்கள்:
விண்ணப்பங்களை சரிபார்த்தல் மற்றும் பள்ளித்தேர்வில் எடுத்த மதிப்பெண்களை அளவிடுதல் ஆகியவை முடிந்த பின்னர், அனைத்து தகுதியான மாணவர்களும், ஆங்கிலம் மற்றும் ஆகிய மொழிகளில்(ஏதேனும் ஒன்றில் எழுதலாம்) நடத்தப்படும் திறனாய்வு தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வானது, நாட்டின் பல்வேறு மையங்களில் நடத்தப்படும். தேர்வு பற்றிய விவரங்கள் KVPY  வலைதளத்தில் வெளியிடப்படும்.

இதைப்பற்றிய மேலும் விவரங்களுக்கு,    www.kvpy.org.in   என்ற  வலைதளத்தை அணுகவும் அல்லது application@kvpy.org.in  என்ற முகவரிக்கு  மின்னஞ்சல் அனுப்பவும்.

கர்நாடக தேர்தல்: தனி மெஜாரிட்டியுடன் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது, பா.ஜ.க. படுதோல்வி


கர்நாடக சட்டசபைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பெரியபட்டினம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் மரணம் அடைந்ததால் 223 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. தேர்தலில் 71.29 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், பாரதீய ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா தளம், எடியூரப்பாவின் கர்நாடகா ஜனதா கட்சி ஆகிய 4 கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் வெளியான பல்வேறு கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி 110 முதல் 132 இடங்கள் வரை வென்று ஆட்சி அமைக்கும் என்று தகவல்கள் வெளியானது.

இதையடுத்து மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.

பிறகு மின்னணு எந்திரங்களில் உள்ள சீல் அகற்றப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டது. காலை 8.30 மணிக்கு கட்சிகளின் முன்னிலை விவரம் தொடங்கியது. தொடக்கத்தில் காங்கிரசும், பாரதீய ஜனதாவும் சம அளவில் முன்னிலை பெற்றன.

ஆனால் அடுத்த 30 நிமிடங்களில் அதாவது 9 மணி அளவில் காங்கிரஸ் கட்சி மளமளவென பா.ஜ.க.வையும், மதசார்பற்ற ஜனதா தளத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அதிக தொகுதிகளில் முன்னிலை பெறத் தொடங்கியது.

பா.ஜ.க.வில் இருந்து பிரிந்து கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கி மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய எடியூரப்பாவுக்கு 9 இடங்களில் மட்டுமே வெற்றி வாய்ப்பு இருந்தது. எடியூரப்பா கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பிரித்து இருப்பதை ஓட்டு எண்ணிக்கையில் காணமுடிந்தது.

பாரதீய ஜனதா வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவுவதற்கும் காங்கிரஸ் கட்சி மிக எளிதாக வெற்றி பெறுவதற்கும் எடியூரப்பாக கட்சியினர் பிரித்த ஓட்டுக்கள் உதவியாக இருந்தன.

10 மணியளவில் 200 தொகுதிகளில் முன்னிலை நிலவரம் வெளியானது. அப்போது காங்கிரஸ் கட்சி 94 தொகுதிகளில் முன்னிலை பெற்று வலுவான நிலையை எட்டியது. ஆனால் பாரதீய ஜனதா மிகப்பெரும் சறுக்கலை சந்தித்தது.

10 மணி வரை 2-வது இடத்தில் இருந்த பா.ஜ.க., குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு அடுத்தப்படியாக 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 223 தொகுதிகளிலும் முன்னிலை நிலவரம் தெரிந்தபோது காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கப் போவது உறுதியானது.

கர்நாடகாவில் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் 113 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 223 தொகுதிகளில்தான் தேர்தல் நடந்திருப்பதால் 112 இடங்களை பெற்றாலே தனித்து ஆட்சி அமைத்து விடலாம்.

காங்கிரஸ் கட்சி இந்த மேஜிக் நம்பரை மிக எளிதாக எட்டியது. மதியம் 1 மணி நிலவரப்படி காங்கிரசுக்கு 119 இடங்கள் கிடைத்துள்ளன. இதனால் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைக்கிறது. 7 ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது.

இதையடுத்து முதல்-மந்திரி பதவியை பிடிக்க காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருப்பது குமாரசாமியின் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சிதான். காங்கிரசுக்கு அடுத்தப்படியாக 42 இடங்களில் வெற்றி பெற்று அந்த கட்சி 2-வது இடத்தை பிடித்துள்ளது.

இதன்மூலம் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு கர்நாடகாவில் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. அந்த கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி எதிர்க்கட்சித் தலைவர் ஆகிறார்.

கர்நாடகாவில் சுமார் 2 1/2 ஆண்டுகள் பா.ஜ.க. உதவியுடன் முதல்வராக இருந்த குமாரசாமி தன் ஆட்சிக் காலத்தில் ஊழலற்ற ஆட்சியை நடத்தியதாக மக்களிடம் நல்லபெயர் வாங்கினார்.

விவசாயத் துறையும், நகர்ப்புற மேம்பாட்டுத் துறையும் குமாரசாமி முதல்வராக இருந்தபோது அபரிதமான வளர்ச்சியைப் பெற்றன. இதனால் முதல்வர் பதவிக்கு சிறந்தவராக யாரை கருதுகிறார்கள் என்று கருத்துக்கணிப்பு நடந்தபோது பெரும்பாலானவர்கள் குமாரசாமியை தேர்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குமாரசாமிக்கு கர்நாடக மக்களிடம் இருந்த இந்த நல்ல பெயரும், எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி பிரித்த ஓட்டுக்களும் பாரதீய ஜனதா கட்சிக்கு பலத்த அடியை கொடுத்து சாய்த்து விட்டது.

இதற்கிடையே பெல்லாரி மண்டலத்தில் ரெட்டி சகோதரர்கள் ஆதரவுடன் ஸ்ரீராமுலு தொடங்கிய தனிக்கட்சியும் பா.ஜ.க.வுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளை தடுத்து விட்டது. இப்படி பல முனைகளிலும் ஓட்டுக்களை இழந்த பா.ஜ.க. பரிதாபமான சூழ்நிலையில் 35 இடங்களில் மட்டுமே வென்று 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது. அந்த கட்சியில் முக்கிய தலைவர்களை தவிர அனைவருமே தோற்று விட்டனர்.

பாரதீய ஜனதா கட்சிக்கு இப்படி ஒரு சம்மட்டி அடியை கொடுக்க வேண்டும் என்றுதான் எடியூரப்பா ஆசைப்பட்டார். தேர்தல் முடிவுகள் அவரது ஆசையை நிறைவேற்றி உள்ளன.

2008-ம் ஆண்டு நடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸ் கட்சிக்கு 40 இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கும் கூடுதலாக 15 இடங்கள் கிடைத்துள்ளன. ஆனால் பா.ஜ.க. படுதோல்வியை சந்தித்துள்ளது. அந்த கட்சியிடம் இருந்து 75 தொகுதிகள் கைநழுவி போய்விட்டன.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி மறுப்பு


தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கடந்த மாதம் 23-ந் தேதி கந்தக டை ஆக்சைடு வெளியேறியது. இதையடுத்து கடந்த 30-ந்தேதி ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்வதற்கு சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் சாய் தலைமையிலான நிபுணர் குழுவை பசுமை தீர்ப்பாயம் அமைத்தது.

இந்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்தது. அறிக்கை தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில், இவ்வழக்கு டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிபுணர் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை ஆராய்ந்த நீதிபதி, சுதந்திர குமார், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்க மறுத்துவிட்டார். மேலும் அந்த அறிக்கையின் பிரதிகளை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இவ்வழக்கின் விசாரணை வரும் 14-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இன்றைய வாதத்தின்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆஜராகி வாதாடினார்.

தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைகழகத்தில் சேர்க்கை அறிவிப்பு


தமிழ்நாடு உடற்கல்வியியல் (பிசிகல் எஜூகேஷன்) மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் பல்வேறு முதுநிலை மற்றும் இளங்கலை படிப்புகளுக்கு சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் விளையாட்டுத்துறைக்காக, முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலை சென்னை நுங்கம்பாக்கத்தில் 2005 முதல் செயல்படுகிறது.

வழங்கப்படும் படிப்புகள்:

* பி.பி.எட்.,(1 ஆண்டு), படிப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள், ஏதேனும் ஒரு இளங்கலை பட்டத்துடன், கல்லூரி அளவில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

* எம்.பி.எட்.,( 2 ஆண்டு), படிப்பிற்கு பட்டப்படிப்புடன் பி.பி.எட் / பி.பி.இ., தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

* எம்.எஸ்சி.,( 2 ஆண்டு) பிரிவில் எக்ஸர்சைஸ் பிசியாலஜி அண்டு நியூட்ரிசியன், ஸ்போர்ட்ஸ் பயோமெக்கானிக்ஸ் போன்ற படிப்புகளில் சேர்வதற்கு அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது உடற்கல்வியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

* எம்.எஸ்சி., (2 ஆண்டு)பிரிவில், யோகா, ஸ்போர்ட்ஸ் பிசியாலஜி அண்டு சோசியாலஜி, ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் போன்ற படிப்புகளில் சேர்வதற்கு ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

* எம்.பி.ஏ.,(2 ஆண்டு) பிரிவில் , ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் போன்ற படிப்புகளில் சேர்வதற்கு ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

* எம்.டெக்.,( 2 ஆண்டு) ஸ்போர்ட்ஸ் டெக்னாலஜி படிப்பில் சேர்வதற்கு , ஏதேனும் ஒரு இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

* எம்.எஸ்சி., (2 ஆண்டு)ஸ்போர்ட்ஸ் கோச்சிங் படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் அத்துடன் டிப்ளமோ, முதுகலை டிப்ளமோவில் ஸ்போர்ட்ஸ் கோச்சிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* இது தவிர முதுகலை டிப்ளமோவில் ஸ்போர்ட்ஸ் கோச்சிங், எம்.பில் பிரிவில் பல்வேறு படிப்புகளுக்கு சேர்க்கை நடக்கிறது.

* பி.எஸ்சி.,( 3  ஆண்டு) பிரிவில் எக்ஸர்சைஸ் பிசியாலஜி அண்டு நியூட்ரிசியன், ஸ்போர்ட்ஸ் கோச்சிங் போன்ற படிப்புகளில் விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் 2 தேர்ச்சியோடு, விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பல்கலையில், நேரிலோ தபாலிலே அல்லது இணையதளத்திலோ பெற்று விண்ணப்பிக்கலாம்.

கட்டணமாக( எஸ்.சி / எஸ்.டி.,  250, மற்றவர்  500) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. "டிடி" யை The Registrar, Tamil Nadu Physical Education and Sports University என்ற பெயரில், சென்னையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து அத்துடன் கல்விச்சான்றுகளின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் வழங்கும் கடைசி நாள் மே 20.

விண்ணப்பிக்க கடைசி நாள் மே 27.

விவரங்களுக்கு www.tnpesu.org