கர்நாடக சட்டசபைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பெரியபட்டினம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் மரணம் அடைந்ததால் 223 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. தேர்தலில் 71.29 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், பாரதீய ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா தளம், எடியூரப்பாவின் கர்நாடகா ஜனதா கட்சி ஆகிய 4 கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் வெளியான பல்வேறு கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி 110 முதல் 132 இடங்கள் வரை வென்று ஆட்சி அமைக்கும் என்று தகவல்கள் வெளியானது.
இதையடுத்து மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.
பிறகு மின்னணு எந்திரங்களில் உள்ள சீல் அகற்றப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டது. காலை 8.30 மணிக்கு கட்சிகளின் முன்னிலை விவரம் தொடங்கியது. தொடக்கத்தில் காங்கிரசும், பாரதீய ஜனதாவும் சம அளவில் முன்னிலை பெற்றன.
ஆனால் அடுத்த 30 நிமிடங்களில் அதாவது 9 மணி அளவில் காங்கிரஸ் கட்சி மளமளவென பா.ஜ.க.வையும், மதசார்பற்ற ஜனதா தளத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அதிக தொகுதிகளில் முன்னிலை பெறத் தொடங்கியது.
பா.ஜ.க.வில் இருந்து பிரிந்து கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கி மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய எடியூரப்பாவுக்கு 9 இடங்களில் மட்டுமே வெற்றி வாய்ப்பு இருந்தது. எடியூரப்பா கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பிரித்து இருப்பதை ஓட்டு எண்ணிக்கையில் காணமுடிந்தது.
பாரதீய ஜனதா வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவுவதற்கும் காங்கிரஸ் கட்சி மிக எளிதாக வெற்றி பெறுவதற்கும் எடியூரப்பாக கட்சியினர் பிரித்த ஓட்டுக்கள் உதவியாக இருந்தன.
10 மணியளவில் 200 தொகுதிகளில் முன்னிலை நிலவரம் வெளியானது. அப்போது காங்கிரஸ் கட்சி 94 தொகுதிகளில் முன்னிலை பெற்று வலுவான நிலையை எட்டியது. ஆனால் பாரதீய ஜனதா மிகப்பெரும் சறுக்கலை சந்தித்தது.
10 மணி வரை 2-வது இடத்தில் இருந்த பா.ஜ.க., குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு அடுத்தப்படியாக 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 223 தொகுதிகளிலும் முன்னிலை நிலவரம் தெரிந்தபோது காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கப் போவது உறுதியானது.
கர்நாடகாவில் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் 113 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 223 தொகுதிகளில்தான் தேர்தல் நடந்திருப்பதால் 112 இடங்களை பெற்றாலே தனித்து ஆட்சி அமைத்து விடலாம்.
காங்கிரஸ் கட்சி இந்த மேஜிக் நம்பரை மிக எளிதாக எட்டியது. மதியம் 1 மணி நிலவரப்படி காங்கிரசுக்கு 119 இடங்கள் கிடைத்துள்ளன. இதனால் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைக்கிறது. 7 ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது.
இதையடுத்து முதல்-மந்திரி பதவியை பிடிக்க காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருப்பது குமாரசாமியின் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சிதான். காங்கிரசுக்கு அடுத்தப்படியாக 42 இடங்களில் வெற்றி பெற்று அந்த கட்சி 2-வது இடத்தை பிடித்துள்ளது.
இதன்மூலம் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு கர்நாடகாவில் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. அந்த கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி எதிர்க்கட்சித் தலைவர் ஆகிறார்.
கர்நாடகாவில் சுமார் 2 1/2 ஆண்டுகள் பா.ஜ.க. உதவியுடன் முதல்வராக இருந்த குமாரசாமி தன் ஆட்சிக் காலத்தில் ஊழலற்ற ஆட்சியை நடத்தியதாக மக்களிடம் நல்லபெயர் வாங்கினார்.
விவசாயத் துறையும், நகர்ப்புற மேம்பாட்டுத் துறையும் குமாரசாமி முதல்வராக இருந்தபோது அபரிதமான வளர்ச்சியைப் பெற்றன. இதனால் முதல்வர் பதவிக்கு சிறந்தவராக யாரை கருதுகிறார்கள் என்று கருத்துக்கணிப்பு நடந்தபோது பெரும்பாலானவர்கள் குமாரசாமியை தேர்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
குமாரசாமிக்கு கர்நாடக மக்களிடம் இருந்த இந்த நல்ல பெயரும், எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி பிரித்த ஓட்டுக்களும் பாரதீய ஜனதா கட்சிக்கு பலத்த அடியை கொடுத்து சாய்த்து விட்டது.
இதற்கிடையே பெல்லாரி மண்டலத்தில் ரெட்டி சகோதரர்கள் ஆதரவுடன் ஸ்ரீராமுலு தொடங்கிய தனிக்கட்சியும் பா.ஜ.க.வுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளை தடுத்து விட்டது. இப்படி பல முனைகளிலும் ஓட்டுக்களை இழந்த பா.ஜ.க. பரிதாபமான சூழ்நிலையில் 35 இடங்களில் மட்டுமே வென்று 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது. அந்த கட்சியில் முக்கிய தலைவர்களை தவிர அனைவருமே தோற்று விட்டனர்.
பாரதீய ஜனதா கட்சிக்கு இப்படி ஒரு சம்மட்டி அடியை கொடுக்க வேண்டும் என்றுதான் எடியூரப்பா ஆசைப்பட்டார். தேர்தல் முடிவுகள் அவரது ஆசையை நிறைவேற்றி உள்ளன.
2008-ம் ஆண்டு நடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸ் கட்சிக்கு 40 இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கும் கூடுதலாக 15 இடங்கள் கிடைத்துள்ளன. ஆனால் பா.ஜ.க. படுதோல்வியை சந்தித்துள்ளது. அந்த கட்சியிடம் இருந்து 75 தொகுதிகள் கைநழுவி போய்விட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக