Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 13 ஏப்ரல், 2013

தமிழக அரசு சமூக நலத் துறைக்கு உயர்நீதிமன்றம் "நோட்டீஸ்"


நாமக்கல் மாவட்டம், என்.புதுப்பட்டியில் உள்ள, "த்ரீ ஸ்டார்' கோழிப்பண்ணை நிறுவனம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனு: நாங்கள் உற்பத்தி செய்யும் முட்டைகள், தரமானவை. முட்டைகள் அழிந்து போகும் தன்மை உடையதால், மாவட்ட அளவில், கொள்முதல் செய்யப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும், மாதம் தோறும், முட்டை கொள்முதல் செய்யும் வழக்கம் இருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு, அக்டோபரில், சமூகநலத் துறை, ஒரு அரசாணையை வெளியிட்டது. அதில், "மாவட்ட வாரியாக கொள்முதலுக்குப் பதில், ஒரே டெண்டர் மூலம், மாநிலம் முழுவதற்கும், முட்டை கொள்முதல் செய்யப்படும்; ஓராண்டுக்கு என, டெண்டர் வெளியிடப்படும்' என, கூறப்பட்டுள்ளது. டெண்டர் நிபந்தனைகள், சென்னையைச் சேர்ந்த, இரண்டு நிறுவனங்களுக்கு பொருந்தும் விதத்தில் உள்ளது.

டெண்டரை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. அதையடுத்து, கடந்த ஆண்டு, அக்டோபரில், புதிதாக டெண்டர் வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும், ஒரு நாளைக்கு, 60 லட்சம், முட்டைகள் "சப்ளை' செய்ய வேண்டும். ஒரே "கான்ட்ராக்ட்' மூலம், இவ்வளவு முட்டைகளை சப்ளை செய்ய முடியாது. முட்டை விலை, ஏதாவது ஒரு மாதத்தில் குறைந்தால், ஓராண்டு அடிப்படையிலான டெண்டரால், அரசுக்கு தான் இழப்பு ஏற்படும். எனவே, டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி என்.பால்வசந்தகுமார் அடங்கிய "முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் கே.துரைசாமி ஆஜரானார். மனுவுக்குப் பதிலளிக்கும்படி, சமூக நலத் துறைக்கு "நோட்டீஸ்' அனுப்ப, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

அரசு பொதுத்துறை நிறுவனத்திற்கு உதவி என்ஜினீயர் பதவிக்கு பதிவுமூப்பு பட்டியல் மாநில வேலைவாய்ப்பு அலுவலகம் அறிவிப்பு


சென்னை சாந்தோமில் உள்ள மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் வே.கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

அரசு பொதுத்துறை நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ள உதவி என்ஜினீயர் (மெக்கானிக்கல்) பணி காலி இடங்களுக்கு வேலைவாய்ப்பு பதிவுமூப்பு பட்டியல் அனுப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு பி.இ. மெக்கானிக்கல் அல்லது ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் படித்து ஓராண்டு அப்ரண்டீஸ் பயிற்சி முடித்து பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு 1.7.2012 அன்றுள்ளபடி எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 40. எம்.பி.சி., பி.சி. பிரிவினருக்கு 35. பொதுப்பிரிவினருக்கு (ஓ.சி.) 30 ஆகும். மேற்காணும் கல்வித்தகுதி மற்றும் வயது வரம்புக்குள் உள்ளவர்கள் மட்டும் தங்கள் பெயர் பதிவுமூப்பு பரிந்துரை பட்டியலில் இடம் பெற்று இருக்கிறதா? என்பதை வருகிற 22–ந்தேதிக்குள் சாந்தோமில் உள்ள மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சரிபார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கருணாகரன் கூறி உள்ளார்.


பொறியியல் மாணவருக்கு கல்விக்கடன்: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு


மதுரை புதூரை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவருக்கு, கல்விக்கடன் வழங்க, இந்தியன் வங்கி கிளை மேலாளர் பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

புதூர் ராமவர்மா நகர் முனியசாமி தாக்கல் செய்த மனு: எனது மகன் பார்த்தசாரதி. இவர், காஞ்சிபுரம் அருகே அறுபடை வீடு பொறியியல் கல்லூரியில், நிர்வாக ஒதுக்கீட்டில் பி.இ., படிக்கிறார். கல்விக்கடன் 6 லட்சத்து 900 ரூபாய் வழங்கக்கோரி, மதுரை புதூர் இந்தியன் வங்கி கிளையில் விண்ணப்பித்தோம். நடவடிக்கை இல்லை. கல்விக்கடன் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் வி.சீனிவாசன் ஆஜரானார். நீதிபதி: இந்திய வங்கிகள் சங்கம், கல்விக்கடனுக்கான வழிகாட்டுதல்களை மாற்றியமைத்துள்ளது.

புதிய கல்விக்கடன் திட்டத்தின்படி, அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கு, வேறுபாடின்றி கடன் வழங்க வேண்டும். மாற்றியமைக்கப்பட்ட கல்விக்கடன் திட்டத்தின்படி, மனுதாரரின் விண்ணப்பத்தை தகுதி அடிப்படையில், கிளை மேலாளர் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என உத்தரவிட்டார்.

கிராமப்புற மேலாண்மைக்கான கல்வி நிறுவனம்


கிராமப்புற மேலாண்மைக்கான கல்வி நிறுவனம், கடந்த 1979ம் ஆண்டு, குஜராத் மாநிலத்தின் ஆனந்த் என்ற இடத்தில் தோற்றுவிக்கப்பட்டது. கூட்டுறவு மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அமைப்புகளுக்கு, மேலாண்மை கல்வி, பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை உதவி ஆகியவற்றை வழங்குவது இக்கல்வி நிறுவனத்தின் நோக்கம்.

நிர்வாக மேம்பாட்டு பயிற்சிகள்
கிராமப்புற மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டிருக்கும் நிபுணர்களுக்காக, பலவிதமான மேலாண்மைத் துறைகளில், 1 நாள் காலஅளவு தொடங்கி, 4 வாரங்கள் காலஅளவு வரையிலான நிர்வாக மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் Workshop -களை நடத்துகிறது.

கூட்டுறவு சங்கங்கள், லாபநோக்கமற்ற அமைப்புகள், கிராமப்புற மேம்பாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அரசு மற்றும் quasi - government அமைப்புகளில் பணிபுரியும் நிபுணர்களுக்கு மேற்கூறிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதுவரை, 675க்கும் மேற்பட்ட பயிற்சிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில், 14,500க்கும் மேற்பட்ட நிபுணர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றுள்ளனர்.

உள்கட்டமைப்பு வசதி

இக்கல்வி நிறுவன வளாகத்தில், பல்லாயிரக்கணக்கான புத்தகங்களையும், பல நவீன வசதிகளையும் கொண்ட நூலகம், சிறப்பான கணினி மையம், மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்ட விடுதிகள், பிரமாண்ட கலையரங்கம் மற்றும் பல்வேறு விளையாட்டுக்களுக்கான மைதான வசதிகள் போன்றவை உள்ளன.

இக்கல்வி நிறுவனம் வழங்கும் படிப்புகள்

* கிராமப்புற மேலாண்மைக்கான முதுநிலை டிப்ளமோ

இது 2 வருட முழுநேர ரெசிடென்ஷியல் படிப்பாகும். இப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பிற்கு சமமாக, இந்திய பல்கலைகள் அசோசியேஷனால்(AIU) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலும் இப்படிப்பை அங்கீகரித்துள்ளது.

இப்படிப்பை மேற்கொள்வோர், உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேசிய கூட்டுறவு அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மேம்பாட்டு அமைப்புகள் மற்றும் நிதி வழங்கும் அமைப்புகள் ஆகியவற்றில் நல்ல பணி வாய்ப்புகளை, கேம்பஸ் இண்டர்வியூ மூலமாக பெறுவார்கள்.

* கிராமப்புற மேம்பாட்டில் பெல்லோ ப்ரோகிராம்

இது ஒரு டாக்டோரல் படிப்பு. குறைந்தபட்சம் 3 வருடங்களைக் கொண்ட இப்படிப்பு, அதிகபட்சம் 6 வருடங்கள் வரை நீளும். ஆராய்ச்சி, கற்பித்தல் மற்றும் கிராமப்புற மேலாண்மை கல்வி நிறுவனங்களில், குறிப்பிட்ட அறிவுசார் துறையின் பணியை எதிர்பார்ப்போர் ஆகியோருக்கு, இப்படிப்பு ஏற்றது.

ஒரு வலுவான கோர்ஸ்ஒர்க்(coursework) மற்றும் டாக்டோரல் தீசிஸ்(thesis) ஆகிய இரண்டும்தான் இப்படிப்பின் இரண்டு முக்கிய அம்சங்கள். இந்த டாக்டோரல் படிப்பை முடிக்க ஒருவர், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள், கல்வி நிறுவன வளாகத்தில் தங்கியிருக்க வேண்டும். கோர்ஸ்ஒர்க் முடிந்தபிறகு, ஒவ்வொருவரும், ஒரு விரிவான தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும். அத்தேர்வானது, தீசிஸ் ஆராய்ச்சிக்கு முந்தையது. கூடுதலாக, ஒவ்வொரு ஆராய்ச்சியாளரும், குறிப்பிட்ட காலஅளவிற்கு, கற்பித்தல், ஆராய்ச்சி அல்லது எடிட்டோரியல் உதவியாளர் போன்ற பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

மாணவர் சேர்க்கை
மேற்கூறிய 2 படிப்புகளிலும், மாணவர் சேர்க்கை மற்றும் இதர விஷயங்களை அறிந்துகெள்ள https://www.irma.ac.in/admissions/admissions.php என்ற வலைத்தளம் செல்க.

பழைய மாணவர் அமைப்பு
இக்கல்வி நிறுவனம், வலுவான பழைய மாணவர் அமைப்பினை பெற்றுள்ளது. இரண்டாண்டு படிப்பில் பட்டம் பெற்றவர்கள், தங்களுக்கென அமைப்பினை வைத்துள்ளனர். மேலும், பழைய மாணவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும், இக்கல்வி நிறுவனத்துடன் தொடர்பில் இருக்கவும், Institute of Rural Management Alumni Association என்ற பெயரில் ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, பதிவுசெய்யப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்தமாக, இக்கல்வி நிறுவனம் பற்றி அனைத்து அம்சங்களையும் அறிந்துகொள்ள https://www.irma.ac.in என்ற இணையதளம் செல்லவும்.