Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 14 ஜனவரி, 2013

பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் பார்வையற்ற தமிழாசிரியர்


விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்தவர், பால கணேசன், 26. பிறவிலே பார்வையில்லாத இவர், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, சிவகங்கை அரசு பார்வையற்றோர் பள்ளியிலும்; ஆறு முதல், பிளஸ் 2 வரை, மதுரை இந்திய பார்வையற்றோர் சங்கம் மேல்நிலை பள்ளியிலும் படித்து, தேர்ச்சி பெற்றார்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில், பி.ஏ., (தமிழ்)படிப்பையும், மதுரை காமராஜ் பல்கலையில், எம்.ஏ., படிப்பையும் முடித்தார். பின், குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரியில், பி.எட்., முடித்த பாலகணேசன் , மதுரை இந்திய பார்வையற்றோர் சங்கம் நடத்தும், "விழிச்சவால் பிரைய்ல்" மாத இதழில், பகுதிநேர இணை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

பார்வையில்லாத போதிலும் மனம் தளராத இவர், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றார். ஜன., 2 முதல்,விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலை பள்ளியின், முதுகலை தமிழாசிரியரான இவர், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கிறார்.

பாலகணேசன் கூறுகையில், "சக ஆசிரியர்கள், மாணவர்கள் நல்ல ஒத்துழைப்பு தருகின்றனர். எனக்கு பார்வையில்லை என்ற வருத்தமே இல்லை. பாடங்களை, "பிரெய்லி" முறையில் கற்று, சொல்லி தருகிறேன். மாணவர்கள் தங்கள் நோட்டில் எழுதும் பாடங்களை, துணைக்கு ஒருத்தரை வைத்து படிக்கச் சொல்லி, தவறுகளை திருத்துகிறேன், என்றார்.

ஆட்டிசம் பாதிப்பு குழந்தைகளுக்கு பேச்சுப்பயிற்சி கருவி கண்டுபிடிப்பு


பேச்சுத் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, ஆட்டிசம் பயிற்சி அளிப்பதற்கான கருவியை, சென்னை ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர் அஜித் நாராயணன் என்பவர் உருவாக்கி உள்ளார்.

ஆட்டிசம் பாதித்த குழந்தைகள், பிறந்து நான்கு வயது வரை சரியாக பேசாது; பார்வை நேரடியாக இருக்காது; பிடிவாதமாக இருக்கும்; எந்த பொருளை பார்த்தாலும் உடனே கேட்கும்; சில குழந்தைகளுக்கு, எச்சில் ஒழுகும்; அதிகம் பாதித்த குழந்தைகள், நிமிர்ந்து நடப்பதற்கே சிரமப்படும்.

சில குழந்தைகள் பேசியதையே திரும்ப திரும்ப பேசும்; எதற்கு எடுத்தாலும் கோபப்படும்; குழந்தைகளின், இது போன்ற நடவடிக்கைகளை வைத்தே, ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் என்று பெற்றோர்கள் தெரிந்து கொள்ளலாம். குழந்தைகளின் மூளை, சரியான வளர்ச்சி அடையாததால், இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

ஆட்டிசம் என்பது நோயல்ல, இதை சரிசெய்து விடலாம் என்று மூளை நரம்பியல் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மூளை நரம்புகளை தூண்டும் விதமான பயிற்சி அளித்து, இந்த குழந்தைகளின் குறைகளை சரிசெய்து விடலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.

தற்போது, ஆட்டிசம் பாதிப்பு ஏற்பட்டு, பேச்சு திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்காக, பேச்சுபயிற்சி கருவியை, சென்னை ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர் அஜித் நாராயணன் கண்டு பிடித்துள்ளார். இக்கருவி குறித்து, ஆட்டிசம் மற்றும் கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான, சிறப்பு பள்ளி - சங்கல்ப், இயக்குனர் சுலதா அஜித் கூறியதாவது:

சென்னை அண்ணா நகரில் இயங்கி வரும், எங்கள் பள்ளியில், ஆட்டிசம் மற்றும் கற்றலில் குறைபாடுள்ள, 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இவர்களில், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, சென்னை ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர் அஜித் நாராயணன் உருவாக்கி உள்ள, "அவாஸ்&' எனும், கருவியைக் கொண்டு, பேச்சு பயிற்சி அளிக்க உள்ளோம்.

இந்தியளவில், ஸ்பீச் தெரபி அளிக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ள நிலையில், இக்கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, 19ம் தேதி, சென்னை, சேத்துபட்டு, லேடி ஆண்டாள் பள்ளியில், கர்நாடக இசைக் கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீயின் இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளோம். இவ்வாறு சுலதா அஜித் கூறினார்.

காற்று இல்லாமலே மின்சாரம் தயாரிப்பு: கிராமத்து இளைஞர் கண்டுபிடிப்பு


 "காற்று இருந்தால்தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலையை இயக்கி மின்சாரம் தயாரிக்க முடியும்," என பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கிராமத்து இளைஞர் கூறுகிறார்.

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி விஸ்வநாதன், 38. இவர், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். காற்றாலையை, காற்று இல்லாமல் இயக்க முடியும் என்பதை, இவர், சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். தான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை கிண்டியில், மத்திய அரசுக்கு சொந்தமான காப்புரிமை நிறுவனத்தில் பதிவு செய்து, காற்றாலை செயல்படுவது குறித்து விளக்கமளித்துள்ளார். இதற்காக, இவர் காப்புரிமை பெற்றுள்ளார்.

இரண்டு ஆண்டாக இதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக கூறும் அவர், மேலும் கூறியதாவது: சேலம் மாவட்டம், மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு வரை படித்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக, மேலும் படிக்க முடியாமல், விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்.

தற்போது காற்றாலையை, காற்று இல்லாமலே இயக்க முடியும் என கண்டுபிடித்துள்ளேன். இரண்டு ஆண்டாக இதற்காக முயற்சி எடுத்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளேன். நாகர்கோவில், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

காற்று வீசும் காலத்தில் மட்டுமே, காற்றாலையில் இருந்து, மின்சாரம் பெற முடியும். மற்ற காலங்களில் காற்றாலையில் உள்ள இறக்கைகள் சுற்றாது. தற்போது, காற்றாலையில், மூன்று இறக்கைகள் உள்ளது. என்னுடைய தொழில்நுட்பப்படி, காற்றாலையில் நான்கு இறக்கைகள் பொருத்த வேண்டும். மேலும், கீழும் உள்ள இரண்டு இறக்கையின் நடுவில், ஹீலியம் வாயுவை நிரப்ப வேண்டும்.

காற்றாலையின் இரு பக்கமும் உள்ள இரண்டு இறக்கைகளின் அளவு ஒரே சீராக இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும். ஹீலியம் வாயு நிரப்பப்பட்டுள்ள ஒரு இறக்கையில் இருந்து, கீழுள்ள இறக்கைக்கு வாயு செலுத்தப்படும் போது, எடை தாங்காமல், கீழுள்ள இறக்கை மேல் நோக்கி தள்ளப்படும். இதனால், இறக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக சுழலத்தொடங்கும்.

ஹீலியம் வாயு, தானியங்கி சென்சார் மூலம், இரண்டு இறக்கைகளிலும் மாறி மாறி செலுத்தப்படுவதால், இறக்கைகள் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும். இதனால் காற்று இல்லாமலும், மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஹீலியம் வாயு ஆபத்து இல்லாதது.

நான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் காப்புரிமை நிறுவனத்தில், வரை படங்களின் மூலமும், எழுதியும் காண்பித்தேன். என் கண்டுபிடிப்புக்கு, மத்திய அரசு காப்புரிமை கொடுத்துள்ளது. ஓராண்டுக்குள், நான் அவர்களுக்கு செய்முறை பயிற்சி அளித்து காட்ட வேண்டும்.

நான் விசைத்தறி தொழிலாளியாக இருப்பதால், போதிய பணம் என்னிடம் இல்லை. காற்றாலை அதிபர்கள் என்னை நாடினால், காற்றாலையை காற்று இல்லாமல் இயக்கும் முறையை விளக்கிக் காட்டுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

நாடுமுழுவதும் 33 ஆயிரம் சிறுவர்கள் மீது 2011ம் ஆண்டில் வழக்குப்பதிவு


இந்தியாவில் கடந்த 2011ம் ஆண்டில் மட்டும் சுமார் 33 ஆயிரம் சிறுவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், சிறார்கள், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது, சமீபகாலமாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும், 2011ல், மட்டும், 16லிருந்து, 18 வயதுக்குட்பட்ட, 33 ஆயிரம் சிறார்கள் மீது, குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலானவை, கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்குகள். அதிகபட்சமாக, 1,419, பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தான், சிறார்கள் மீது, அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.