எண்ணூர் - கத்திவாக்கம் நெடுஞ்சாலையில், கத்திவாக்கம் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, 2,000 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
எண்ணூர், கத்திவாக்கம் சுற்று வட்டாரத்தில், நடுநிலை பள்ளியில் படிப்பை முடிப்போர், கத்திவாக்கம் மேல்நிலைப் பள்ளியில் தான் சேர வேண்டும். இந்த பள்ளியை விட்டால் வேறு வழியில்லை. இந்த பள்ளியில், மாணவ, மாணவியரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதால், இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு, நபார்டு வங்கி நிதி உதவியோடு, 19 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், கழிவறைகள், குடிநீர் வசதி மற்றும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் ஆகியவை கட்ட, 2008 - 2009ம் ஆண்டு, இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
பொதுப்பணித்துறை மேற்பார்வையில், இந்த பணிகள் நடந்தன. மாணவ, மாணவியருக்கு தனித் தனியாக வகுப்புகள் நடத்த போதிய இடம் இல்லை என, பள்ளி நிர்வாகம், பொதுப்பணி துறையிடம் வற்புறுத்தியது. இதனால், பள்ளி கட்டடத்தை விரைந்து கட்டி, பள்ளி நிர்வாகத்திடம், 2011, டிசம்பர் மாதத்தில், பொதுப்பணி துறை ஒப்படைத்தது.
ஆனால், சுற்றுச்சுவர் மற்றும் கழிவறைகள் கட்டப்படவில்லை. புதிய பள்ளி கட்டடத்தை, கல்வி அமைச்சர் திறந்து வைப்பார் என, பொன்னேரி கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறியதால், பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது. இதனால், புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டடம் பயன்படுத்தப்படாமல், பாழடைந்து வருகிறது.
சுற்றுச்சுவர் இல்லாததால், புதிய கட்டடத்தில் உள்ள குடிநீர் குழாய் இணைப்புகள், ஜன்னல் கதவுகளை, சமூக விரோதிகள் உடைத்து நாசப்படுத்தி உள்ளனர். இதே நிலை தொடர்ந்தால், புதிய கட்டடம் யாருக்கும் பயன்படாமல், பாழடைந்த கட்டடமாக மாறிவிடும் என, பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள் வருந்துகின்றனர்.
இதுகுறித்து, பொதுப்பணி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய கட்டடம், பள்ளி நிர்வாகத்திடம் ஓராண்டுக்கு முன் ஒப்படைக்கப்பட்டு விட்டது. மாணவ, மாணவியருக்கு என, தனித்தனி கழிவறை மற்றும் பள்ளி சுற்றுச்சுவர் கட்டாமல், ஒப்பந்தாரர் மாயமாகி விட்டார்.
ஒப்பந்தாரரை நீக்கிவிட்டு, புதிதாக 22 லட்சம் ரூபாய்க்கு, வரும் ஜனவரி இரண்டாவது வாரம், மறு ஒப்பந்தம் கோரப்படுகிறது.
புதிய ஒப்பந்ததாரர், கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவரை கட்டி கொடுத்து விடுவார். எனவே, எங்களால் எந்த தாமதமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.