திண்டுக்கல்லில் இளம் சிறார்களுக்கான நீதிக்குழுமம் நேற்று தொடங்கப்பட்டது. 18 வயதிற்குட்பட்ட சட்டவிரோதச் செயலில் சிக்கியுள்ள இளம் சிறார்கள் இதுவரை மதுரையில் உள்ள இளம் சிறார் நீதி குழுமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வந்தனர். இதைத் தவிர்க்கும் வகையில் தற்போது திண்டுக்கல்லில் இளம் சிறார்களுக்கான நீதிக்குழுமம் தொடங்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த தொடக்க விழாவில் சென்னை நீதிமன்ற நீதிபதி ராமசுப்பி ரமணியன் நீதி குழுமத்தைத் திறந்து வைத்தார். மாவட்ட செசன்ஸ் நீதிபதி பாலசுந்தரகுமார் வரவேற்றுப் பேசி னார். கலெக்டர் வெங்கடாசலம், எஸ்.பி. ஜெயச்சந்திரன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியம் பேசியதாவது: ஒரு குழந்தை தவறு செய்வது அவரது குடும்பச் சூழலின் காரணமாகத்தான். தற்போது தாய், தந்தையர்கள் குழந்தைகளைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். தொலைக்காட்சி, சினிமாக்களை பார்த்து கெட்டுப் போகின்ற சூழல் உள்ளது.
குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டியது பெற்றோரின் கடமை. காலச்சூழலைப் பொறுத் துதான் ஒரு குழந்தையின் வாழ்க்கை மாறுகிறது. புத்துயிர் தருவதில் கட்டாயத்தை உணர்த்துவதுதான் இந்தக் குழுமம். நாட்டின் 1.80 குழந்தைகள் தெருக்குழந்தைகளாக உள்ளனர். 100 மில்லியன் குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர்.
6 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். 6 முதல் 16 வயது வரை உள்ள 2 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆரம்ப கல்வியைக்கூட எட்ட முடியவில்லை. 2.70 கோடி குழந்தைகளில் ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் குழந்தைகள் முதல் பிறந்தநாளைக்கூட கொண்டாட முடிவதில்லை. 5 வயதிற்கு மேல் சுமார் 27 லட்சம் குழந்தைகள் வாழ முடியாமல் இறக்கின்றனர்.
இது வேதனையாக உள்ளது.குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறார்கள் விடியலைத் தேடித்தான் நம்மிடம் வருகிறார்கள். அவர்களுக்கு வாழ்வின் புதிய பரிமாணத்தை தரும் வகையில் காவல்த்துறை, நீதித்துறை, சமூகம் இவை அனைத்தும் ஒன்றிணைந்து உதவ வேண்டும்''என்று பேசினார்.