கடந்த சிலநாட்களாக விஸ்வரூபம் படப்பிரச்சினை தமிழகத்தில் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், இப்பிரச்சினை குறித்து சென்னை கோட்டையில் முதலமைச்சர் ஜெயலலிதா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த இரண்டு வாரங்களாக ‘விஸ்வரூபம்’ படம் சம்பந்தமாக பல்வேறு செய்திகள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகி வருகிறது. ஊடகங்களும், தனிநபர்களும் அரசு மீது பல்வேறு தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர்.
இப்படத்திற்கு 24 முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதுதவிர, தவ்கீத் ஜமாத் அமைப்பும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
விஸ்வரூபம் படம் வெளியாகியிருந்தால் தமிழ்நாட்டில் வன்முறை வெடிக்கும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. அரசு உளவுத்துறையை நம்பியே உள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை கவனிக்க வேண்டிய அரசு கடமையை யாரும் புரிந்து கொள்ளவில்லை. படத்தை தடை செய்ய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆனால், தமிழக அரசு அதை செய்யவில்லை.
இப்படம் 524 தியேட்டர்களில் வெளியிடுவதாக இருந்தது. இப்படத்திற்காக பாதுகாப்பு அளிப்பதற்கு 56,440 காவலர்கள் தேவை. போதுமான காவலர்கள் இல்லாததால் பாதுகாப்பு அளிப்பது சாத்தியமில்லை. பல்வேறு பணிகளுக்கிடையே காவலர்களால் போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது.
தனிப்பட்ட காரணங்களுக்காக இப்படத்திற்கு தடை விதித்தது என்பது தவறான கருத்து. ஒரு தனியார் தொலைக்காட்சி நலனுக்காக தடை விதிக்கப்பட்டது என்பதும் வெறும் புகார்தான்.
விஸ்வரூபம் பிரச்சினையில் கருணாநிதியின் குற்றச்சாட்டு அர்த்தமற்றது. ‘விக்ரம்’ பட விவகாரத்தில் எம்.ஜி.ஆருக்கும் நான் கடிதம் ஏதும் எழுதவில்லை. எம்.ஜி.ஆரை தினமும் சந்தித்த நான் எதற்கு கடிதம் கொடுக்க வேண்டும். எனவே, கருணாநிதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
வேட்டி கட்டிய ஒருவர் பிரதமராக வரவேண்டும் என்று கமலஹாசன் சொன்னது அவரது கருத்து சுதந்திரம். கமலஹாசன் பிரதமரை தேர்வு செய்யமுடியாது. இந்த பிரச்சினையால் கமல் மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் இல்லை. கமலஹாசன் பெரிய முதலீட்டில் படம் எடுத்ததற்கு தமிழக அரசு பொறுப்பாகாது.
இப்பிரச்சினையை இருதரப்பும் பேசி இப்பிரச்சினையை தீர்த்துக் கொண்டால் அதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக