Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 25 ஜூலை, 2012

சொந்த நாட்டிலேயே அகதிகளாகும் முஸ்லிம்கள்

அசாம் மாநிலம் கோக்ராஜ்கர், துப்ரி மாவட்டங்களில் 3 நாட்களுக்கு முன்பு, முஸ்லிம்களுக்கு எதிராக "போடோ" இனத்தவர்கள்  நடத்திய திடீர் தாக்குதல், மிகப்பெரும் இனக்கலவரமாக மாறியது. இந்த வன்முறை கட்டுக்கடங்காமல் ஆகிவிட்டது.  32 பேர் உயிரிழந்தனர். ஆயிரக் கணக்கானோர் படுகாயமடைந்தனர். 21 மாவட்டங்களில் கலவரம் பரவி உள்ளது.  வன்முறைக் கும்பல் வீடுகளை அடித்து நொறுக்கியும், தீ வைத்தும் கொளுத்தியும் வெறியாட்டம் நடத்தி வருவதால், பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட 1 லட்சம்  பேர், 75 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  வன்முறை தீவிரமடைந்ததால், வடகிழக்குப் பகுதிகளுக்குச் செல்லும் 31 ரயில்கள் இடையில் நிறுத்தப்பட்டன.   

ரயில் போக்குவரத்து இன்றி வெளியூர் செல்லும் 30,000 பயணிகள் தவிக்கவிடப்பட்டுள்ளனர்.   போலீஸார், நேற்று  (செவ்வாய்க்கிழமை)  துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 4 பேர் உயிரிழந்தனர்.  வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்து அங்கு அமைதியை ஏற்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங், மாநில முதல்வர் தருண் கோகோய்க்கு உத்தரவிட்டுள்ளார்.    பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. 

வன்முறையில் ஈடுபடுபவர்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிகாங் பகுதியில் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது. வன்முறை பரவுவதை தொடர்ந்து, சிராங் மற்றும் துப்ரி மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த பகுதிகளில் ராணுவம் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது.    மாநில வருவாய்த் துறை அமைச்சர் பிருத்வி மஜ்கி, விவசாயத் துறை அமைச்சர் நிலமோனி சென் தேகா ஆகியோரை வன்முறை பாதித்த பகுதிகளுக்கு முதல்வர் தருண் கோகோய் அனுப்பிவைத்துள்ளார். 

ஏற்கனவே, மாநில வனத்துறை அமைச்சர் ராக்கிஃபுல் ஹுசைன், உணவு வழங்கல் துறை அமைச்சர் ஹஸ்ருல் இஸ்லாம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் சதன் பிரம்மா ஆகியோர் கோக்ரஜார் மாவட்டத்தில் முகாமிட்டு மக்களை அமைதி காக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர். வன்முறை பாதித்த பகுதிகளை அசாம் மாநில காவல்துறை தலைவர் ஜெயந்தா நாராயண் சௌத்ரி, இன்று (புதன்கிழமை) பார்வையிடவுள்ளார்.

என் எண்ணங்களை பேச்சில் மட்டுமல்ல செயலிலும் காட்டுவேன் : ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

நாட்டின் 13வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். பார்லிமென்டின் மையப்பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி கபாடியா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, மத்திய அமைச்சர்கள், மாநில கவர்னர்கள் உள்ளிட்டோர் இப்பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்

தலைவரின் நினைவிடங்களில் பிரணாப் அஞ்சலி :நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னதாக, தனது இல்லத்திலிருந்து கிளம்பிய பிரணாப் முகர்ஜி, மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவிடம், முன்னாள் பிரதமர் ராஜிவின் நினைவிடமான வீர் பூமி, இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திராவின் நினைவிடத்திலும் அவர் அஞ்சலி செலுத்தினார்.

21 குண்டுகள் முழங்க பிரணாபுக்கு மரியாதை :நாட்டின் முதல் குடிமகன் எனும் உயரிய பொறுப்பான ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி இன்று பதவியேற்றுக்கொண்டார். புதிய ஜனாதிபதியாக பிரணாப் பதவியேற்றதும் அவருக்கு இந்திய ராணுவம் சார்பில் 21 குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்பட்டது.

ஜனாதிபதி பிரணாப் உரை : நாட்டின் புதிய ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பொறுப்பேற்ற பின், ஏற்புரை நிகழ்த்தினார். அதில் அவர் கூறியதாவது, மேற்குவங்க மாநிலத்தின் சிறிய கிராமத்தில் பிறந்த நான், நாட்டின் தலைமை பீடத்தில் அமர்ந்திருப்பது குறித்த மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.


 நாட்டு நலனிற்காக விருப்பு வெறுப்பின்றி பணியாற்றுவேன், அரசியல் சாசனத்தை காக்க உறுதி கொண்டுள்ளேன். நாட்டிலிருந்து வறுமையை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை, மக்களோடு இணைந்து மேற்கொள்வேன், நாட்டின் பாதுகாப்பிற்கு அரணாக இருப்பதே ஜனாதிபதி அலுவலகத்தின் நோக்கத்தை முழுமூச்சாக கொண்டு நிறைவேற்றுவேன். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வேன், ஏழைகளும் இந்நாட்டின் அங்கம் என்பதை உணர்ந்து அதன்படி செயலாற்றுவேன். 


மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர் கண்ட கனவை நனவாக்க பாடுபடுவேன். இனம், மதம் மற்றும் ‌மொழி அடிப்படையிலான வேறுபாடுகளை களைவேன், நாட்டின் இறையாண்மையை காப்பேன், எனது எண்ணங்களை பேச்சில் மட்டுமல்லாமல் செயலிலும் காட்டுவேன் என்று அவர் கூறினார்.