அசாம் மாநிலம் கோக்ராஜ்கர், துப்ரி மாவட்டங்களில் 3 நாட்களுக்கு முன்பு, முஸ்லிம்களுக்கு எதிராக "போடோ" இனத்தவர்கள் நடத்திய திடீர் தாக்குதல், மிகப்பெரும் இனக்கலவரமாக மாறியது. இந்த வன்முறை கட்டுக்கடங்காமல் ஆகிவிட்டது. 32 பேர் உயிரிழந்தனர். ஆயிரக் கணக்கானோர் படுகாயமடைந்தனர். 21 மாவட்டங்களில் கலவரம் பரவி உள்ளது. வன்முறைக் கும்பல் வீடுகளை அடித்து நொறுக்கியும், தீ வைத்தும் கொளுத்தியும் வெறியாட்டம் நடத்தி வருவதால், பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட 1 லட்சம் பேர், 75 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வன்முறை தீவிரமடைந்ததால், வடகிழக்குப் பகுதிகளுக்குச் செல்லும் 31 ரயில்கள் இடையில் நிறுத்தப்பட்டன.
ரயில் போக்குவரத்து இன்றி வெளியூர் செல்லும் 30,000 பயணிகள் தவிக்கவிடப்பட்டுள்ளனர். போலீஸார், நேற்று (செவ்வாய்க்கிழமை) துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 4 பேர் உயிரிழந்தனர். வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்து அங்கு அமைதியை ஏற்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங், மாநில முதல்வர் தருண் கோகோய்க்கு உத்தரவிட்டுள்ளார். பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது.
வன்முறையில் ஈடுபடுபவர்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிகாங் பகுதியில் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது. வன்முறை பரவுவதை தொடர்ந்து, சிராங் மற்றும் துப்ரி மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த பகுதிகளில் ராணுவம் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது. மாநில வருவாய்த் துறை அமைச்சர் பிருத்வி மஜ்கி, விவசாயத் துறை அமைச்சர் நிலமோனி சென் தேகா ஆகியோரை வன்முறை பாதித்த பகுதிகளுக்கு முதல்வர் தருண் கோகோய் அனுப்பிவைத்துள்ளார்.
ஏற்கனவே, மாநில வனத்துறை அமைச்சர் ராக்கிஃபுல் ஹுசைன், உணவு வழங்கல் துறை அமைச்சர் ஹஸ்ருல் இஸ்லாம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் சதன் பிரம்மா ஆகியோர் கோக்ரஜார் மாவட்டத்தில் முகாமிட்டு மக்களை அமைதி காக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர். வன்முறை பாதித்த பகுதிகளை அசாம் மாநில காவல்துறை தலைவர் ஜெயந்தா நாராயண் சௌத்ரி, இன்று (புதன்கிழமை) பார்வையிடவுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக