Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 25 ஜூலை, 2012

என் எண்ணங்களை பேச்சில் மட்டுமல்ல செயலிலும் காட்டுவேன் : ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

நாட்டின் 13வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். பார்லிமென்டின் மையப்பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி கபாடியா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, மத்திய அமைச்சர்கள், மாநில கவர்னர்கள் உள்ளிட்டோர் இப்பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்

தலைவரின் நினைவிடங்களில் பிரணாப் அஞ்சலி :நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னதாக, தனது இல்லத்திலிருந்து கிளம்பிய பிரணாப் முகர்ஜி, மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவிடம், முன்னாள் பிரதமர் ராஜிவின் நினைவிடமான வீர் பூமி, இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திராவின் நினைவிடத்திலும் அவர் அஞ்சலி செலுத்தினார்.

21 குண்டுகள் முழங்க பிரணாபுக்கு மரியாதை :நாட்டின் முதல் குடிமகன் எனும் உயரிய பொறுப்பான ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி இன்று பதவியேற்றுக்கொண்டார். புதிய ஜனாதிபதியாக பிரணாப் பதவியேற்றதும் அவருக்கு இந்திய ராணுவம் சார்பில் 21 குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்பட்டது.

ஜனாதிபதி பிரணாப் உரை : நாட்டின் புதிய ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பொறுப்பேற்ற பின், ஏற்புரை நிகழ்த்தினார். அதில் அவர் கூறியதாவது, மேற்குவங்க மாநிலத்தின் சிறிய கிராமத்தில் பிறந்த நான், நாட்டின் தலைமை பீடத்தில் அமர்ந்திருப்பது குறித்த மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.


 நாட்டு நலனிற்காக விருப்பு வெறுப்பின்றி பணியாற்றுவேன், அரசியல் சாசனத்தை காக்க உறுதி கொண்டுள்ளேன். நாட்டிலிருந்து வறுமையை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை, மக்களோடு இணைந்து மேற்கொள்வேன், நாட்டின் பாதுகாப்பிற்கு அரணாக இருப்பதே ஜனாதிபதி அலுவலகத்தின் நோக்கத்தை முழுமூச்சாக கொண்டு நிறைவேற்றுவேன். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வேன், ஏழைகளும் இந்நாட்டின் அங்கம் என்பதை உணர்ந்து அதன்படி செயலாற்றுவேன். 


மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர் கண்ட கனவை நனவாக்க பாடுபடுவேன். இனம், மதம் மற்றும் ‌மொழி அடிப்படையிலான வேறுபாடுகளை களைவேன், நாட்டின் இறையாண்மையை காப்பேன், எனது எண்ணங்களை பேச்சில் மட்டுமல்லாமல் செயலிலும் காட்டுவேன் என்று அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக