தென்காசியில் 6வது பொருளாதார கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.
தென்காசி 9வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் புள்ளியியல் துறை சார்பில் 6வது பொருளாதார கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. நகராட்சி கமிஷனர் முஜிபூர் ரகுமான் தலைமை வகித்தார். தென்காசி வட்டார புள்ளியியல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.
கோட்ட புள்ளியியல் உதவி இயக்குனர் ஆலி செய்யது சிராஜூதின் பாபா, வாசுதேவநல்லூர் புள்ளியியல் ஆய்வாளர் சண்முகவேல் ஆகியோர் வகுப்பினை நடத்தினர்.
அதில், கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் கணக்கெடுப்பு பகுதிக்கு உட்பட்டவீடு, அமைப்பு, கட்டடம் போன்றவை விடுபடாமல் பூர்த்தி செய்ய வேண்டும். கணக்கெடுப்பு பகுதியில் உள்ள நிறுவனங்களின் விபரங்கள் பெறுவதில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். நிறுவனங்கள் செயல்படும் இடத்திற்கான கட்டமைப்பினை கணக்கில் கொண்டு வரவேண்டும். நிரந்தர கட்டமைப்பு இன்றி செயல்படும் நிறுவனங்கள்,அவர்களின் பெயர், வீடு முகவரிகளை பதிவு செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
பயிற்சி வகுப்பில் கவுன்சிலர்கள், கருப்பசாமி, சங்கர சுப்பிரமணியன், குணசேகரன், ராமதாஸ், ஜெயலட்சுமி,வேல்விழி உட்பட அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் 42 கணக்கெடுப்பாளர்கள், 21 மேற்பார்வையாளர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
செங்கோட்டை வட்டார புள்ளியியல் ஆய்வாளர் இசக்கி நன்றி கூறினார்.