Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 26 நவம்பர், 2012

கல்லூரிகளில் பாஸ்போர்ட் மேளா ....!


 பாஸ்போர்ட் வழங்குவது விரைவுப்படுத்தப்படும் என, புதிதாக பொறுப்பேற்ற, மதுரை பாஸ்போர்ட் அதிகாரி மணீஸ்வர ராஜா தெரிவித்தார். கல்லூரிகளில் பாஸ்போர்ட் மேளாக்கள் நடத்தவும் திட்டம் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதிகாரி சுந்தரராமன் ஓய்வு பெற்றதால், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மணீஸ்வரராஜா, பாஸ்போர்ட் அதிகாரியாக நேற்று பொறுப்பேற்றார். 2002ல் "குஜராத் கேடர்&' ஐ.எப்.எஸ்., ஆக தேர்வு ஆன இவர், 7 ஆண்டுகள் கிர் காடுகள் வன அதிகாரியாக பணியாற்றினார்.

மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம், மாற்றுப்பணியாக (டெபுடேஷன்) இப்பொறுப்பை ஏற்றார். அவர் கூறியதாவது: பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மதுரை சேவா கேந்திரத்தில் தினமும் 700 பேரும், திருநெல்வேலி சேவா கேந்திரத்தில் தினமும் 550 பேரும் விண்ணப்பிக்கின்றனர்.

விண்ணப்பங்கள் மீது போலீஸ் "வெரிபிகேஷனை&' விரைவில் முடிக்க, மாவட்ட எஸ்.பி.,க்களை சந்தித்து ஆலோசிக்கஉள்ளேன். "பாஸ்போர்ட்&' வழங்குவதை விரைவுப்படுத்தவும், விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரிகளில் "பாஸ்போர்ட் மேளா&'க்கள் நடத்தவும் திட்டம் உள்ளது என்றார்.

செங்கோட்டை அருகே உள்ள 13 கண் பாலத்தை இடிக்க எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்


செங்கோட்டை-புனலூர் இடையே அகல ரெயில்ப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக செங்கோட்டை அருகே கேரள மாநிலத்தில் உள்ள பழமை வாய்ந்த கழுதுருட்டி 13 கண் பாலத்தை இடிக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்கு தமிழகம் மற்றும் கேரள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்காக பாதுகாப்பு கமிட்டியும் அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் அந்த பாலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி 13 கண் பாலம் அருகே நடந்தது.

மேலும் அந்த பாலம் குறித்து கட்டுரை, பேச்சு, கவிதை போட்டி நடந்தது. பொதுமக்கள் அளிக்கும் கருத்துகளை நாளை பாதுகாப்பு கமிட்டியை சேர்ந்த பிலிப், நாசர்கான், எடமன்ராஜ், முகமதுகான் ஆகியோர் டெல்லி சென்று பிரதமர் மற்றும் ரெயில்வே மந்திரியிடம் அளிக்கின்றனர்.

செல்போன் மூலம் வங்கி கணக்கை அறியும் வசதி: விரைவில் அறிமுகம்


வங்கி கணக்கை வீட்டில் இருந்தபடியோ, அலுவலகத்தில் இருந்தப்படியே ஆன்-லைன் மூலம் அறியவும் செயல்படுத்தும் வசதி தற்போது நடை முறையில் உள்ளது.

நெட் பேங்கிங் என்று சொல்லக்கூடிய இந்த வசதியை உலகின் எந்த மூலையில் இருந்தும் செயல்படுத்தலாம். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளில் தங்களது கணக்கில் உள்ள பணத்தை வேறு கணக்கிற்கு மாற்றம், வங்கி இருப்பு எவ்வளவு உள்ளது என்பதை அறிந்து கொள்ளவும் இந்த வசதி உதவுகிறது.

பஸ், ரெயில், விமான பயணத்தின்போது கூட வங்கி கணக்கை செயல்படுத்த முடியும். இண்டர்நெட் வசதி வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த வசதியை பெறமுடியும்.

இதன் மூலம் டெலிபோன், மின்சார கட்டணம், உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களையும் செலுத்தலாம். இனிமேல் செல்போன் மூலம் வங்கி கணக்கை செயல்படுத்தலாம். அதற்கான திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

நாடுமுழுவதும் உள்ள அனைத்து வங்கிகளிலும் ஜி.எஸ்.எம். வசதி பெற்ற செல்போன்களில் இந்த சேவையை பெறலாம். செல்போனில் #99 என்ற எண்ணில் பதிவு செய்தால்போதும் தங்கள் கணக்கில் என்ன சேவையை செயல்படுத்தவேண்டும் என்று கேட்டு பெறும். கணக்கில் உள்ள பணத்தை மாற்றம் செய்தல், கணக்கில் எவ்வளவு பணம் இருப்பு உள்ளது செக்புக் தேவை குறித்து தெரிவித்தல் உள்ளிட்ட பல செயல்பாடுகளை இதன் மூலம் பெறலாம். வங்கி சர்வர் வழியாக யு.எஸ்.எஸ்.டி. மூலமாக இந்த சேவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

சந்திரபாபுநாயுடுவை விரட்டியடியுங்கள்: சந்திரசேகரராவ் ஆவேசம்


ஆந்திராவில் தனி தெலுங்கானாவுக்காக மீண்டும் மிகப்பெரிய போராட்டம் நடத்த தெலுங்கானா ராஷ்ட்ரீய சமதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக தெலுங்கானா பகுதி மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். மெகபூப் நகர் அருகே உள்ள சூரியா பேட்டையில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் சந்திரசேகரராவ் பேசியதாவது:-

தனி தெலுங்கானாவுக்காக கட்சியை காங்கிரசுடன் இணைக்க தயாராக இருந்தேன். ஆனால் காங்கிரசார் ஏமாற்றிவிட்டனர். நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பதை தெரிந்து கொண்டேன். மிகப்பெரிய போராட்டம் மூலமாகத்தான் தெலுங்கானா உதயமாகும் இதற்கு யார் உதவியும் தேவையில்லை. நமது போராட்டம் மூலம் நாமே தெலுங்கானாவை உருவாக்குவோம்.

தனி தெலுங்கானாவுக்கு எதிராக இருந்த சந்திரபாபுநாயுடு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசை சேர்ந்த ஷர்மிளா ஆகியோர் இங்கு பாதயாத்திரை வருகிறார்கள். அவர்களை விரட்டி அடியுங்கள்
இவ்வாறு அவர் பேசினார்.

திருப்பூர் தொழிலாளர்களின் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு


திருப்பூரில், தொழில் பாதுகாப்பு குழு மற்றும் தொழில் கூட்டமைப்புகள் சார்பில் வரும், 28ல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள, லட்சம் பேர் பங்கேற்கும் பேரணிக்கு, போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்; ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள அறிவுரை வழங்கினர்.

தினமும், 18 மணி நேரம் வரை ஏற்பட்டு வரும், மின்தடையால் தொழில் துறையினர், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்னையை மத்திய, மாநில அரசுகளுக்கு உணர்த்தும் வகையில், வரும், 28ம் தேதி, லட்சம் பேர் பங்கேற்கும் பேரணி நடத்த, திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு மற்றும் தொழில் கூட்டமைப்புகள் திட்டமிட்டிருந்தன.

இந்நிலையில், தொழில் பாதுகாப்பு குழுவினர் மற்றம் தொழில் கூட்டமைப்பினர் பங்கேற்ற கூட்டம், எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், எஸ்.பி., அமித் குமார் சிங் பேசியதாவது:
மின்வெட்டு பிரச்னை தமிழகம் முழுவதும் உள்ளது. இதற்கு தீர்வு காண, முதல்வர் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளார். திருப்பூர் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வரும், 3, 4ம் தேதி நடக்கும், போலீஸ் மற்றும் கலெக்டர் மாநாட்டில், இதுபற்றி விவாதிக்கப்படும்.போலீசார் பற்றாக்குறையாக உள்ளனர்; கார்த்திகை தீப திருவிழாவும் வருவதால், ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் பேரணிக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது. பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாவர். உணர்வுகளை வெளிப்படுத்த ஆர்ப்பாட்டம் நடத்திக்கொள்ளுங்கள்.
இவ்வாறு, அவர் பேசினார்.பல்லடம், விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்புக்குட்டி பேசுகையில், ""அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இது வாழ்வாதார பிரச்னை; அனுமதி அளிக்க வேண்டும்,'' என்றார்.தொழில் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் கிஷோர் குமார் பேசுகையில், ""அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல; பிரச்னையை அரசுக்கு உணர்த்தவே போராட்டம்; திருப்பூருக்கு சிறப்பு சலுகை வழங்க வேண்டும் என்பதே கோரிக்கை,'' என்றார்.போலீசார் அனுமதி மறுத்ததால், பேரணிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது .இக்கூட்டத்தில், தொழில் அமைப்புகளை சேர்ந்த, 32 நிர்வாகிகள் பங்கேற்றனர்.