குமரிமாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் அடித்து வருகிறது. கோடை காலத்தில் தான் இது போன்ற உச்சி வெயில் மண்டையை பிளக்கும் அளவு வெயில் வறுத்து எடுக்கும். ஆனால் தற்போதே உச்சகட்ட வெப்பநிலை காணப்படுகிறது. முதியவர்கள் தலைசுற்றி கீழே விழும் அளவுக்கு வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. காற்று கூட அனல் காற்றாக வீசுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் பகலில் வெயிலும் இரவில் பனியும் பொழிந்து வந்தது. தற்போது இரவு நேரம் பொழிந்த பனியும் குறைந்துள்ளது.கடும் வெயிலால் விவசாய பயிர்களுக்கும் அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. குமரி மாவட்டத்தில் சில பகுதிகளில் நெற்பயிரிட்டுள்ள விவசாயிகள் அறுவடை பணிகளை துவங்கியுள்ள நிலையில், பல பகுதிகளில் கடைமடை தண்ணீர் சரியாக பயிர்களுக்கு கிடைக்காததால் நெல்மணிகள் கருகும் நிலை காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.பேச்சிப்பாறையில் தற்போது 4.55 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. அதே நேரம் விவசாய தேவைக்காக பேச்சிப்பாறையில் இருந்து விநாடிக்கு 281 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் அணைக்கு உள்வரத்தாக 61 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணியில் 32.25 அடி தண்ணீர் உள்ள நிலையில் அந்த அணையில் இருந்து விநாடிக்கு 103 கனஅடி தண்ணீர் வெளியேறிக்கொண்டிருக்கிறது. ஆனால் உள்வரவாக தண்ணீர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பேச்சிப்பாறையில் 25.10 அடியும், பெருஞ்சாணியில் 57.25 அடி தண்ணீரும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதுபோன்று சிற்றாறு 1ல் 5.25 அடியும், 2ல் 5.34 அடியும், பொய்கையில் 8அடியும், மாம்பழத்தாறில் 4.92 அடி தண்ணீரும் உள்ளது. கடந்த ஆண்டு பொய்கையில் 21.20 அடியும், மாம்பழத்தாறில் 54.12 அடியும் தண்ணீர் இருந்தது.தற்போது பருவமழை போதிய அளவு கைகொடுக்காததால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். குமரி மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்களில் ஓரளவு தண்ணீர் உள்ளது. இருப்பினும் சுட்டெரிக்கும் வெயிலால் தண்ணீர் வற்றி வருகிறது. கோடைக்காலமான மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு இன்னும் இரு மாதங்கள் உள்ள நிலையில் குறைவான அணை நீர்மட்டமும், அளவுக்கு அதிகமான வெயிலும் விவசாயிகள், பொதுமக்களை கவலையடையச் செய்துள்ளது. கடும் வெயிலைத் தொடர்ந்து நாகர்கோவில், பார்வதிபுரம், சுங்கான்கடை, வில்லுகுறி, கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி, பூதபாண்டி, மார்த்தாண்டம், ஆசாரிபள்ளம், குளச்சல், தக்கலை, திருவட்டார், குலசேகரம், திங்கள்சந்தை, களியக்காவிளை பகுதிகளில் இளநீர், நுங்கு, தர்பூசனி போன்ற இயற்கை குளிர்பான பொருட்களின் விற்பனையும், பழ சர்பத் வியாபாரமும் அமோகமாக நடந்து வருகிறது. குமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் ரோட்டோரங்களில் விற்கும் இளநீர், தர்பூசனி, நுங்குகளை ஆர்வத்துடன் வாங்கி பருகி வருகின்றனர்.
எப்போதும் விட குறைவான தேங்காய் கிடைத்தாலும், கொப்பரைக்கேற்ற தட்ப வெப்பம் நிலவுவதால் அந்த வியாபாரத்தில் அதிக பணத்தை தைரியமாக விவசாயிகள் முதலீடு செய்கின்றனர். மேலும் கீரிப்பாறை, திருவட்டார், குலசேகரம் போன்ற பகுதியில் வழக்கத்தை விட குறைவான அளவிலேயே ரப்பர் பால் கிடைக்கின்றன. கோடைகாலத்தில் ரப்பர்களில் பால்குறைவதை போல் தற்போதே சூழல் நிலவுகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கிலோ 180க்கு விற்பனை செய்யபட்ட ரப்பர் இந்த ஆண்டு ரூ142க்கு விற்பனை செய்யபட்டு வருகிறது. மேலும் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக கருத்தும் நிலவுகிறது. ரப்பர் பாலின் விலை குறைவது போன்று ரப்பரின் விலையும் குறைந்து வருவதால் ரப்பர் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.
செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு தற்போது சுட்டெரிக்கும் வெயில் கைகொடுத்து வருகிறது. பனி, மழை போன்றவற்றால் ஏற்படும் இழப்பீடு ஏதும் இல்லாததால் செங்கல்சூளை உரிமையாளர்களும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.குமரி மாவட்டத்தில் கோடை காலத்தில் வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து குஞ்சு பொரித்து பின்னர் தாய்நாட்டுக்கு திரும்புவது வழக்கம். அது போன்று வெளிமாவட்டங்களில் வசித்து வந்த பல வெளிநாட்டு பறவைகள் வெயிலின் தாக்கத்தால் குமரி மாவட்டத்தின் நீர்நிலை உள்ள பகுதியான இறச்சக்குளம், சுசீந்திரம், சுங்கான்கடை, கீரிப்பாறை உள்பட பல்வேறு இடங்களில் முகாமிட்டுள்ளன.குமரி மாவட்டத்தில் தற்போதைய தட்பவெப்பத்தால் பல்வேறு பகுதிகளில் வைரஸ் காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் வகையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீரை காய்ச்சி குடிக்குமாறு சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
கோடை கால நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க வழிமுறை :சுட்டெரிக்கும் வெயிலினால் ஏற்படும் உடல் உபாதைகள், அவதி போன்றவற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள டாக்டர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.உடலை இறுக்கிப்பிடிக்கும் ஆடைகளை அணிவதை தவிர்க்கவேண்டும். பெரும்பாலும் வேனல் காலங்களில் பருத்தி ஆடைகளையும், லூசான ஆடைகளையும் உடுப்பதே சிறந்தது. பொது இடங்களில் தும்மும்போது மற்றவர்கள் மேல் படாமல் தவிர்க்கவேண்டும். தும்மல் வரும்போது கர்ச்சீப்பால் முகத்தை பிடித்துக்கொள்ளவேண்டும். உணவு பழக்க முறையில் கவனம் செலுத்த வேண்டும். காய், கறிகள், பழவகைகள், வெள்ளரிபிஞ்சு அதிகமாக உண்பது நல்லது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இளநீர், தயிர், மோர் போன்ற இயற்கை பானங்களை அருந்துவது உடலுக்கு நல்லது.வெயில் காலத்தில் தினமும் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும். தினமும் இரண்டு நேரம் குளிக்க வேண்டும். குழந்தைகளையும் இரு நேரம் குளிப்பாட்டவேண்டும். குழந்தைகளுக்கும் லூசான காட்டன் துணிகளை உடுத்தல் வேண்டும். மண்ணில் விளையாடாமல் கவனித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.வெயிலால் தற்போதே பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்னும் மூன்று மாதங்கள் தாக்குபிடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.