Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 14 மார்ச், 2013

தொழில்நுட்ப துறையில் விஷுவல் எபெக்ட்ஸ்


இளைஞர்கள் மத்தியில், தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கு என்றுமே ஈர்ப்பு அதிகம், அந்த வகையில் தற்போது அரசியல் விழா முதல் திரைப்படம் வரை, விஷுவல் எபெக்ட்ஸ் தொழில் நுட்பம் புரட்சி செய்து வருகிறது. இத்துறை சார்ந்த படிப்புகளுக்கு தற்போது மவுசு அதிகம்

மூன்று ஆண்டு இளநிலை படிப்பு,
1 ஆண்டு டிப்ளமோ படிப்பு மற்றும் முதுநிலை படிப்பு என பல்வேறு பிரிவுகளில் கீழ்கண்ட கல்வி நிறுவனங்களில் விஷுவல் எபெக்ட்ஸ் தொடர்பான படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விஷுவல் எபெக்ட்ஸ் படிப்பு வழங்கும் கல்வி நிறுவனங்கள்:
இமேஜ் காலேஜ் ஆப் ஆர்ட் அனிமேஷன் மற்றும் டெக்னாலஜி (ஐ.சி.ஏ.டி), சென்னை -(www.icat.ac.in)

சிரிஷ்டி ஸ்கூல் ஆப் ஆர்ட், அனிமேஷன் மற்றும் டெக்னாலஜி, பெங்களூரு - http://srishti.ac.in/

பிக்காஸோ அனிமேஷன் காலேஜ், டில்லி மற்றும் நொய்டா - www.picasso.co.in

இந்தியாவில் இது வேகமாக வளரும் துறை, வெளிநாட்டில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. இப்படிப்பை வெற்றிகரமாக முடித்தவர்கள் டிஜிட்டல் ஆர்டிஸ்ட், கம்போசிடர், டிஜிட்டல் எபெக்ட்ஸ் அனிமேட்டர், டிஜிட்டல் எபெக்ட்ஸ் பெயின்டர், மாடலர், ப்ரீவிஷீவலை சேசன்ஸ் ஆர்டிஸ்ட், டெக்னிக்கல் டைரக்டர் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் சூப்பர் வைசர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணிபுரியலாம்.

கிராமப்புற ஏழைகளுக்கு இலவச பண்ணை வீடு: காங்கிரசின் அடுத்த திட்டம்


2011ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட தேசிய உணவு பாதுகாப்பு மசோதா‌, பார்லிமென்ட்டில் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் வீடு அமைக்கும் உரிமை மசோதா தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த இரண்டு மசோதாக்களுமே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் ஓட்டுக்களை குறிவைக்கும் நோக்கத்துடன் காங்கிரஸ் அமைத்து வருகிறது. வீடு அமைக்கும் மசோதா குறித்து தற்போது அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஆலோசனை முடிந்த பிறகு மசோதா தொடர்பான சுற்றறிக்கை மற்ற துறைகளை சார்ந்த அமைச்சர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் மார்ச் 18ம் தேதி அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஆக்ராவைச் சேர்ந்த ஏக்தா பரிஷித் என்ற அமைப்பு கடந்த ஆண்டு ‌முன் வைத்த கோரிக்கையை தொடர்ந்து கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ஆக்ரா ஒப்பந்த அடிப்படையில் முக்கிய தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.
கிராம வளர்ச்சித்துறை அமைச்சகம் தகவல் :

சொந்த நிலம் இல்லாத மற்றும் வீடு இல்லாத கிராமப்புற ஏழைகளுக்கு 0.1 ஏக்கர் அல்லது 4356 சதுரடி நிலம் வழங்கப்படும் என மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் உறுதி அளித்துள்ளது. இதே போன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒவ்வொறு கிராமப்புற வாசிகளுக்கும் 100 நாட்கள் வேலை வழங்கப்படும் எனவும் உறுதி அளித்திருந்தது. தற்போது வீடு வழங்கும் இந்த புதிய மசோதா பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரின் ‌போது தாக்கல் செய்யப்படும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சலுகை பெற தகுதியானவர்கள்:
சொந்த விவசாய நிலமோ அல்லது வீடோ இல்லாதவர்களுக்கு 10 சென்ட்க்கும் குறையாமல் நிலம் வழங்கப்பட உள்ளது. மேலும் வசிக்கும் இடத்தில் இல்லாமல் நாட்டின் பிற பகுதியில் சொந்த நிலம் வைத்திருந்து அதற்காக வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் மற்றும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருமானம் பெறும் தனியார் நிறுவன ஊழியர்கள் ஆகியோரும் இந்த புதிய மசோதாவின் கீழ் சலுகை பெற முடியும். 11வது திட்ட அறிக்கையின்படி 13 முதல் 18 மில்லியன் கிராமப்புற குடும்பங்கள் நிலம் இல்லாமலும், 8 மில்லியன் பேர் வீடு இல்லாமலும் உள்ளனர். மேலும் பெண்கள் நிர்வாகம் செய்யும் குடும்பங்களுக்கும் இந்த சலுகை வழங்கப்பட உள்ளது.

மசோதா அடிப்படையில் பங்கீடு :
75:25 என்ற பங்கீட்டில் மத்திய மற்றம் மாநில அரசுகள் இணைந்து இந்த திட்டத்தை நிறைவேற்ற உள்ளது. தொழில்துறைக்கு பயன்படுத்தப்படாத நிலங்கள், மேலும் குத்தகை முடிந்து காலாவரியான நிலங்கள் உள்ளிட்ட நிலங்களை மாநில அரசு இந்த திட்டத்திற்காக பயன்படுத்தலாம். கிராம சபை மூலம் வீடுஇல்லாத ஏழை குடும்பங்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

டி.என்.பி.எஸ்.சி., தேர்விலும் தமிழ் மொழிக்கு பின்னடைவு


சிவில் சர்வீஸ் தேர்வைத் தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்விலும், தமிழ் மொழி பாடத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது. இது, கிராமப்புற தேர்வர்களுக்கு, பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கு, மத்திய அரசு நடத்தும், சிவில் சர்வீஸ் பிரதான தேர்வுகளில் (மெயின் தேர்வு), சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதில், பிராந்திய மொழிகளில் தேர்வெழுத, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

அதன்படி, குறிப்பிட்ட பிராந்திய மொழியில், பிரதான தேர்வை எழுத வேண்டும் எனில், குறைந்தபட்சம், 25 பேர், அதற்கு முந்தைய தேர்வான, முதல் நிலைத் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு குறைவானவர்கள், முதல்நிலைத் தேர்வில், தேர்ச்சி பெற்றிருந்தால், அவர்கள், தங்கள் தாய்மொழியில், பிரதான தேர்வை எழுத முடியாது.

தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே, இந்த பாடத்தை, விருப்ப பாடமாக எடுக்க முடியும். மேலும், தமிழ் வழியில், பட்டப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே, தமிழ் வழியில் தேர்வை எழுத முடியும். இது, கிராமப்புற மாணவர்களுக்கு, பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி.,யும், தமிழ் மொழி பாடத்திற்கான முக்கியத்துவத்தை குறைத்து, புதிய பாடத்திட்டத்தில் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. பல லட்சக்கணக்கான தேர்வர்கள் பங்கேற்கும், குரூப்-4 தேர்வில், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் என, இரு பிரிவுகளின் கீழ், 100 கேள்விகளும், பொது அறிவுக்கு, 100 கேள்விகளும் தரப்படும்.

இதில், பெரும்பான்மையான தேர்வர்கள், பொதுத்தமிழ் பிரிவில், விடை அளிப்பர். ஒவ்வொரு கேள்விக்கும், தலா ஒன்றரை மதிப்பெண்கள் வீதம், 300 மதிப்பெண்களுக்கு, தேர்வு நடத்தப்படுகிறது. புதிய பாடத் திட்டத்தின்படி, மொழிப்பாடங்களுக்கான கேள்விகள், 100ல் இருந்து, 50 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மீதியுள்ள, 150 கேள்விகளும், பொது அறிவு பகுதியில் இடம்பெறும். குறைக்கப்பட்ட 50 கேள்விகளும், சிந்தித்து விடை அளிக்கும் வகையில், புதிய பகுதி கேள்விகளாக, பொது அறிவு கேள்விகளுடன் இணைக்கப்பட்டு உள்ளன. தமிழ் மொழி பகுதியில் இருந்து, 50 கேள்விகள் குறைக்கப்பட்டுள்ளதன் மூலம், 75 மதிப்பெண்கள், தேர்வர்களுக்கு பறிபோய் உள்ளது.