"ஆக்கிரமிப்பில் உள்ள பல்கலை கழகங்களின் நிலங்களை, மாவட்ட கலெக்டர்கள் துணையுடன், உடனடியாக மீட்க, துணைவேந்தர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, பல்கலைகளின் வேந்தரும், கவர்னருமான ரோசையா, கண்டிப்புடன் கூறினார்.
பல்கலைகளின் வேந்தராக, கவர்னர் உள்ளார். பெரும்பாலும், உயர்கல்வி செயல்பாடுகளை, சம்பந்தபட்ட உயர்கல்வி அமைச்சர் மற்றும் செயலர், உயர்கல்வி மன்ற துணைத்தலைவர் ஆகியோர், துணைவேந்தர்கள் கூட்டத்தை கூட்டி, அவ்வப்போது விவாதிப்பர். பல்கலை பட்டமளிப்பு விழாவில், வேந்தராக உள்ள கவர்னர் பங்கேற்பார். பல்கலைகளுக்கு, துணைவேந்தர்களை நியமிக்கும் பணியிலும், கவர்னர் ஈடுபடுகிறார்.
தமிழக வரலாற்றில், முதல் முறையாக, கவர்னர் ரோசையா, நேற்று அனைத்து பல்கலைகளின் இணைவேந்தர்களாக இருக்கும் அமைச்சர்கள், சம்பந்தபட்ட துறை முதன்மை செயலர்கள் மற்றும் பல்கலைகளின் துணைவேந்தர்கள் அடங்கிய கூட்டு கூட்டத்தை, ராஜ்பவனில், நேற்று கூட்டினார்.
இதில், பல்வேறு பல்கலைகளின் இணைவேந்தர்களாக இருக்கும் அமைச்சர்கள், துறை செயலர்கள் மற்றும் துணைவேந்தர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், கவர்னர் ரோசையா பேசியதாவது:
தமிழ்நாடு ஆசிரியர் பல்கலை, திருவள்ளுவர் பல்கலை ஆகியவை, அதற்கான சட்டங்கள் எதுவும் இன்றி, இயங்கி வருகின்றன. ஒவ்வொரு பல்கலைக்கும், அதற்கென தனி சட்டங்களை உருவாக்கி, அமல்படுத்த வேண்டும். ஆனால், இந்த இரு பல்கலைகளும், சட்டங்கள் இல்லாமல் இயங்கி வருகின்றன.
இந்த பல்கலைகளுடன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை மற்றும் விளையாட்டு பல்கலை ஆகிய நான்கு பல்கலைகளுக்கும், "12பி" அந்தஸ்து இல்லை. பல்கலைகளின் அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து, பல்கலைக்கழக மானியக்குழு, இந்த 12-பி அங்கீகாரத்தை வழங்குகிறது.
இந்த அங்கீகாரத்தை பெற்றால் தான், மானியக்குழு மற்றும் இதர அமைப்புகளின், நிதி உதவிகளை பெற முடியும். பல்கலைகளுக்கு சொந்தமாக, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில், அதிக நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் எல்லாம், ஆக்கிரமிப்பாளர்களிடம் உள்ளன.
வரும் காலங்களில், பல்கலைகளின் நிர்வாகத்தை விரிவு செய்ய வேண்டும் எனில், என்ன செய்வீர்கள்? எனவே, ஆக்கிரமிப்பில் உள்ள பல்கலைகளின் நிலங்கள் அனைத்தையும் மீட்பதற்கு, துணைவேந்தர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட கலெக்டர்களை அணுகி, அவர்கள் உதவியுடன், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும்.
மாவட்ட அளவில், ராகிங் தடுப்புக் குழு உள்ளது. இந்த குழுவின் அறிக்கைகள், முறையாக எனக்கு வருவது இல்லை. இந்த குழுக்கள் என்ன செய்கின்றன என்று தெரியவில்லை. வரும், 2025ல், உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை, 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் என, தமிழக முதல்வர் கூறியுள்ளார்.
இதனை எட்ட வேண்டும் எனில், உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும். சிறந்த பாடத்திட்டங்களை வகுத்து, தொழிற்துறைக்கு தேவையான மாணவர்களை, உயர்கல்வியின் மூலம் உருவாக்க வேண்டும். இதை எதையுமே நீங்கள் செய்யவில்லை எனில், இலக்கை எட்ட முடியாது. இவ்வாறு கவர்னர் ரோசையா பேசினார்.
கூட்டத்தில், அமைச்சர்கள் முனுசாமி, பழனியப்பன், தாமோதரன், சின்னையா, ஜெயபால், வைகைச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு, தங்கள் துறை சார்ந்து இயங்கும் பல்கலைகளின் செயல்பாடுகள் குறித்தும், திட்டங்கள் குறித்தும் பேசினர்.