பள்ளிக்கல்வித்துறை சார்பில், கடந்த 2010-11 கல்வியாண்டு தரம் உயர்த்தப்பட்ட 284 நடுநிலைப்பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால், பள்ளி நிர்வாக பணி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக ஆரம்ப பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாகவும், நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.
கடந்த 2010-11 கல்வியாண்டு, பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழகம் முழுவதும் 284 பள்ளிகள் ஆரம்பப்பள்ளியிலிருந்து நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டன. இப்பள்ளிகளில் தற்போது வரை தலைமை ஆசியர்கள் நியமிக்கப்படவில்லை . பள்ளி ஆசிரியர்களே (பொறுப்பு) தலைமை ஆசிரியராக கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ளனர்.
ஆசிரியர் தகுதி தேர்வின் மூலம் 18 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மிகவும் குறுகிய காலத்தில, தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொது செயலாளர் முருக செல்வராஜ் கூறியதாவது:
தலைமை ஆசிரியர்கள் பதவி, பள்ளிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பள்ளிகல்வித்துறை சார்பில், நடைமுறைப்படுத்த வேண்டிய அனைத்து செயல்பாடுகளும், நலத்திட்டங்களுக்கும் தலைமை ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.
இதுபோன்ற சூழலில் தலைமை ஆசிரியர் பதவிகள் காலியாக இருப்பது ஏற்புடையதல்ல. மேலும் இப்பொறுப்பிற்கு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படவேண்டும்.
அவ்வாறு நிரப்பப்படும் போது ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடம் காலியாக அறிவிக்கப்பட்டு அந்த இடத்திற்கு பட்டதாரி ஆசியர்கள் பணிமூப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவ்வாறு பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களின் பணி இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு புதிய பணிநியமனத்திற்கு எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படும். தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இடம் நிரப்பப்படாமல் இருப்பதால் இதுபோன்ற நிர்வாக ரீதியாக பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.