குஜராத் சட்டசபை தேர்தல் வருகிற 13, 17-ந்தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது.ஆட்சியை தக்கவைத்துகொள்ள பாரதீய ஜனதாவும், எப்படியாவது பாரதீய ஜனதாவை வீழ்த்தவேண்டும் என்று காங்கிரசும் இங்கு முழு வேகத்தில் பிரசாரம் செய்து வருகின்றன. இதில் இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் சராமாரியாக குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் குஜராத் சானந்த் என்னும் இடத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
குஜராத்தில் ஏழை மற்றும் நசுக்கப்பட்ட மக்களின் குரலை அரசு கேட்கப்பதில்லை. நரேந்திர மோடியும் அதை கேட்க விரும்புவதில்லை. அவர் கனவு காண்கிறார். அந்த கனவை பற்றியே அவர் நினைக்கிறார். அதையே அவரது குரலில் கேட்கவும் விரும்புகிறார். காந்திஜி, நேருஜி போன்ற உண்மையான தலைவர்கள் மக்களின் கனவையே நிறைவேற்றவே விரும்பினார்கள்.
ஆனால் மோடி, குஜராத்தின் முன்னேற்றம் குறித்து அனைத்து வழிகளிலும் பொய்யாக விளம்பரம் செய்யும் வியாபாரி போன்று தவறாக பிரசாரம் செய்து வருகிறார். அவரது ஆட்சியில் கட்டுக்கடங்காத லஞ்சம்தான் தலைவிரித்து ஆடுகிறது. அனைத்து துறைகளிலும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது. ஆனால் இந்த வியபாரி குஜராத் பிரகாசமாக இருக்கிறது என்று கூறுகிறார்.
மக்கள் எத்தனை மணிநேரம் தண்ணீரை பெறுகிறார்கள் என்று என்னிடம் சொல்லட்டும். மூன்று நாட்களில் வெறும் 25 நிமிடங்கள் மட்டுமே மக்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் ஓட்டுக்காக அந்த வியபாரி குஜராத் ஜொலிக்கிறது என்கிறார். 10 லட்சம் பேர் வேலையின்றி தவிக்கிறபோது எப்படி குஜராத் பிரகாசிக்கும்?.
வருடத்திற்கு 25 நாட்களுக்கு மட்டுமே சட்டசபை கூடுகிறது. இங்கு மக்கள் பிரதிநிதிகளின் குரல் ஒலிப்பதில்லை. அப்படி பேசுபவர்களும் வலுக்கட்டாயமாக அடிக்கடி வெளியேற்றப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.