Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 10 மே, 2013

வீடுகளில் சூரிய சக்தி மின் உற்பத்தி: தமிழகத்தில் விழிப்புணர்வு இல்லை


வீடுகளில் சூரிய சக்தி மின் உற்பத்தி குறித்து, தமிழகத்தில் போதிய விழிப்புணர்வு இல்லை' என, தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை தலைவர் சுதீப் ஜெயின் பேசினார்.

மரபு சாரா எரிசக்தி குறித்த, சர்வதேச கண்காட்சி மற்றும் கருத்தரங்கை, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (டெடா), ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.

இந்தாண்டுக்கான, "ரினர்ஜி-2013' என்ற மூன்று நாள் சர்வதேச கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, நேற்று துவங்கியது.கருத்தரங்கில், சூரிய சக்தி மின் உற்பத்தியில் எதிர்கொள்ளும் சவால்கள், நவீன தொழில்நுட்பம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில், பசுமை வீடுகள் திட்டம் செயல்படுத்தும் முறை மற்றும் சவால்கள், வீடுகளில் சூரிய சக்தி மின் உற்பத்திக்கான கட்டமைப்பு நிறுவுதல் ஆகியவை குறித்தும், பயிலரங்கம் நடைபெற்றது.நிகழ்ச்சியில் "டெடா' தலைவர் சுதீப் ஜெயின் பேசியதாவது:வீடுகளில், சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளன.இருப்பினும், நகர் மற்றும் கிராமப்புறங்களில், வீடுகளில் சூரிய சக்தி மின் உற்பத்தி செய்வது குறித்து, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு குறைவாக காணப்படுகிறது.சூரிய சக்தி மின் உற்பத்தியில், குஜராத் மாநிலம் முன்னிலை வகிக்கிறது. இங்கு, அதிகளவு வீடுகளில், "சோலார்' கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.இதை போல, தமிழகத்திலும், மூன்று ஆண்டுகளில், வீடுகளில் சூரிய சக்தியின் பயன்பாட்டை அதிகரிக்க, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.மூன்று நாட்கள் நடைபெறும் கருத்தரங்கில், சூரிய சக்தி மின் உற்பத்தியில் ஈடுபடும், 200 நிறுவனங்கள், தங்களின் தயாரிப்புகளை கண்காட்சியில் வைத்துள்ளனர். கேரளா, ஆந்திரா, குஜராத், மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் சர்வதேச நாடுகளில் இருந்தும், சூரிய மின் உற்பத்தியில் ஈடுபடும் வல்லுநர்கள் பங்கேற்கின்றனர்.

பிளஸ் 2 தேர்வில் திருநெல்வேலி மாவட்டத்தில் 67 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன

பிளஸ் 2 தேர்வில் திருநெல்வேலி மாவட்டத்தில் 67 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

 அவ்வகையில் 8 அரசுப் பள்ளிகள், 12 தனியார் பள்ளிகள், 1 நகராட்சிப் பள்ளி, 1 அரசு ஆதிதிராவிடப் பள்ளி, 1 சமூக நலத் துறைப் பள்ளி, 44 மெட்ரிக் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.

100% தேர்ச்சி பெற்ற 8 அரசுப் பள்ளிகள்: வெள்ளங்குளி, பத்தமடை, சுந்தரபாண்டியபுரம், ஊர்மேலழகியான், சாம்பவர்வடகரை, காசிதர்மம், வீராணம், பாலாமடை.  கடந்த ஆண்டு இம் மாவட்டத்தில் 7 அரசுப் பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி பெற்றன. மேலப்பாளையத்திலுள்ள காயிதே மில்லத் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி அரசு சேவை இல்லம் ஆகிய பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

கல்வி மாவட்ட அளவில் தேர்ச்சி விவரம்: திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 3 கல்வி மாவட்டங்கள் வாரியாக தேர்ச்சி சதவீதம் வெளியிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி கல்வி மாவட்டத்தில் தேர்வெழுதிய 12,477 மாணவர்- மாணவிகளில் 11,835 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 94.85.

 சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் தேர்வெழுதிய 11,022 மாணவர்-மாணவிகளில் 10,398 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 94.59.

 தென்காசி கல்வி மாவட்டத்தில் தேர்வெழுதிய 11,146 மாணவர்- மாணவிகளில் 10,544 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 94.59.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வழங்கும் கல்வி உதவித் தொகை


இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடட் ஆண்டு தோறும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்குகிறது.

பொறியியல், மருத்துவம், எம்.பி.ஏ. முதல் ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கும், ஐ.டி.ஐ. மாணவர்களுக்கும் மிகச் சிறந்த முறையில் கல்வி உதவித் தொகை வழங்குகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 2600 மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.

இதில் 2000 ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000மும், 300 பொறியியல் மாணவர்களுக்கும், 200 மருத்துவ மாணவர்களுக்கும் (4 ஆண்டுகளுக்கு), 100 எம்.பி.ஏ. மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கும் மாதந்தோறும் ரூ.2000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

மேலும், பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், மாணவிகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு www.iocl.com இணையதளத்தை காணவும்.