Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 3 நவம்பர், 2012

கதை அல்ல நிஜம் :பேசும் யானை


ரஷ்யா மற்றும் கசகஸ்தான் மிருகக் காட்சி சாலையில் உள்ள யானைகள், அந்நாட்டு மொழியில் பேசியதாகக் கூறப் பட் டது. ஆனால், இவையெல்லாம், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.தென் கொரியாவின், "எவர்லேண்ட்' மிருகக் காட்சி சாலையில் உள்ள, "கோஷிக்' என்ற யானை, கொரிய மொழியில் பேசுவது தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த மிருகக் காட்சி சாலையில், பல ஆண்டுகளாக இந்த ஒரு யானை மட்டுமே பராமரிக்கப்பட்டு வருகிறது. பாகன் பேசும் ஒரு சில வார்த்தைகளை, கவனத்தில் கொண்டு, அதை திரும்பவும் உச்சரித்து வருகிறது. துதிக்கை வழியாகத் தான், ஐந்து வார்த்தைகளை திரும்ப திரும்ப கூறி வருகிறது. இதற்கான அர்த்தம் அதற்கு புரிந்ததாக தெரியவில்லை.

அனியாங் (ஹலோ), அஞ்சா (உட்கார்), அனியா (இல்லை), நுவோ (படுத்து கொள்), சோயா (நல்லது) ஆகிய வார்த்தை களை, கொரிய மொழியில் இந்த யானை பேசுவதை, கொரிய மொழி தெரிந்தவர்களால், புரிந்து கொள்ள முடிகிறது .ஆசிய மற்றும் ஆப்ரிக்க யானைகள் பொதுவாக, லாரிகளின் இன்ஜின் சத்தத்தை, "மிமிக்ரி' செய்வதாக பலரும் தெரிவித் துள்ளனர்.

அமெரிக்காவில் கடும் பெட்ரோல் தட்டுப்பாடு


அமெரிக்காவில், புயல் பாதித்த பகுதிகளில், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவில், கடந்த வாரம் மையம் கொண்ட, "சாண்டி' புயல், 15 மாகாணங்களை தாக்கியது. இந்த புயலால், 80க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். விமானப் போக்குவரத்து மட்டும் தான் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது.

சாலைகள் மற்றும் சுரங்க ரயில்பாதைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், முழு வீச்சில் போக்குவரத்து துவங்கவில்லை.நியூயார்க் மற்றும் நியூஜெர்சி உள்ளிட்ட பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாலைகளில் விழுந்து கிடப்பதால், அத்தியாவசிய பொருட்களின் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்னும் பல நகரங்கள் இருளில் தான் மூழ்கியுள்ளன. அமெரிக்காவின் பல நகரங்களில் 40 லட்சம் பேர், மின்சாரம் இன்றி அவதிக்குள்ளாகியுள்ளனர். மன்ஹாட்டன் நகரில், மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், இப்பகுதியில் மின்சாரம் தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் நிலையங்கள் உள்பட, அலுவலகங்களும், வர்த்தக நிறுவனங்களும், ப்ருக்ளின் நகரில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.மின்சாரம் துண்டிக்கப்பட்டு, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், போதிய ஆட்கள் நடமாட்டம் இல்லாததால், கடைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக நியூயார்க் போலீசார், 19 பேரை கைது செய்துள்ளனர்.சாலைகள் பழுது பட்டுள்ளதால், நியூயார்க் மற்றும் நியூஜெர்சி உள்ளிட்ட இடங்களுக்கு, கடந்த சில நாட்களாக, பெட்ரோல் சப்ளை செய்யப்படவில்லை.இதனால், இந்த பகுதிகளில், கடும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்ரோல் நிலையங்களிலும், 1கி.மீ.,தூரத்துக்கு மக்கள் வரிசையில் காத்திருந்து, கேன்களில் பெட்ரோல் வாங்கி செல்கின்றனர்.சில இடங்களில், இது தொடர்பாக சண்டை மூண்டதால், அங்கெல்லாம், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாணவன் போலீசில் புகார் :அரசு பள்ளியில் ஆசிரியர்கள் இல்லை


அரசு பள்ளியில் ஆசிரியர்கள் இல்லை என மாணவன் போலீசில் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகாவிலுள்ள பல அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டு வருகிறது. உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கணக்குப் பதிவியல், வணிகவியல் பாட பிரிவுகளுக்கு ஆசிரியர் இல்லை.

இதுகுறித்து மாணவர்கள் ஆசிரியர்களிடம் முறையிட்டுள்ளனர்.இதனால், எந்த பலனும் கிடைக்காததால், செங்குறிச்சியைச் சேர்ந்த சிவக்குமார் என்ற மாணவன், நேற்று உளுந்தூர்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரில், எங்கள் பள்ளியில் கணக்குபதிவியல், வணிகவியல் பாட பிரிவுக்கு ஆசிரியர் இல்லை, உடனே ஆசிரியரை நியமக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். புகாரை பெற்ற போலீசார், கல்வித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் 4000 சுகாதாரப்பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்


தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில், விதி, 110ன் கீழ், வெளியிட்ட அறிக்கை:
கிராம சுகாதார செவிலியர்கள் பணி மேம்பாடு அடையும் வகையில், அவர்களுக்கு, இலவச லேப்-டாப் வழங்கப்படும். இதற்கென, 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்ட மருத்துவமனைகள், மருத்துவ அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் என்ற பெயரில், பணியாளர்களை நியமிக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது.இந்த வகையில், ஒப்பந்த அடிப்படையில், 4,000 பேர் பணி நியமனம் செய்யப்படுவர். 200 படுக்கைகளுக்கு, குறைவான மருத்துவமனைகளில், சுகாதார பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களாக, இவர்கள் நியமனம் செய்யப்படுவர்.மருத்துவமனைகளில், பாதுகாப்பை செம்மைப்படுத்தும் வகையில், 2,176 காவல் பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.

மருத்துவமனைகளில் தொய்வின்றி, சேவை மேற்கொள்வதற்காக, உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்க, கூடுதலாக, 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், 1.64 லட்சம் பயனாளிகளுக்கு, 384 கோடி ரூபாய், காப்பீட்டு நிறுவனத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் காது நுண் எலும்பு கருவி பொருத்தும் சிகிச்சை, ஸ்டெம் செல் மாற்று சிகிச்சைகளை மேற்கொள்ள, 1.50 லட்சம் ரூபாய்க்கு மேலாக செலவு ஆகிறது. இந்த கூடுதல் செலவினத்தையும் அரசே ஏற்கும் வகையில், சிறப்பு தொகுப்பு நிதி ஒன்று உருவாக்கப்படும்.

அதற்கு, 10 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும். வரும் காலங்களில், அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் காப்பீட்டு தொகையிலிருந்து, இந்த சிறப்பு தொகுப்பு நிதிக்காக, ஆண்டுக்கு, 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சட்டசபையில் முதல்வரின் அறிவிப்பால், கிராம சுகாதார செவிலியர்கள், 11 ஆயிரம் பேருக்கு, இலவச லேப்-டாப் வழங்கப்படும் என, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.