Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 27 மார்ச், 2013

பொள்ளாச்சி பகுதி கிராம மக்கள் கடும் அவதி: டீசல் விலை உயர்வால் அரசு பஸ்கள் "கட்'


பொள்ளாச்சியில் வசூல் குறைந்த கிராமங்களுக்கான, அரசு பஸ் சேவை குறைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கால்கடுக்க நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழகத்துக்குட்பட்டு, மூன்று கிளைகள் உள்ளன. இதன்மூலம் பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, கிணத்துக்கடவு சுற்றுப்பகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்களுக்கு, 200க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, கோவை, பழநி, திருப்பூர் வழித்தடங்களுக்கும் பொள்ளாச்சியில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கடந்த சில மாதங்களாக, பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில், கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் 60 சதவீத பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், காலை 10.00 மணிக்கு மேல் மாலை 3.00 மணி வரை கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ் சேவையை அரசு போக்குவரத்து கழகம் பாதியாக குறைத்துள்ளது. பல கிராமங்களில், அதிகாலையில் இயக்கப்படும் பஸ் சேவையை ரத்து செய்துள்ளதால், வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லும் மக்கள் சிரமப்படுகின்றனர். இது குறித்து அரசு போக்குவரத்து கழகத்துக்கு, பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: பொள்ளாச்சி தாலுகாவில், விவசாயம் பிரதானமாக உள்ளதால், கிராமங்களில் இருந்து விவசாய கூலி வேலைக்கு மக்கள் அதிகளவில் வெளியூர்களுக்கு செல்கின்றனர்.

அதுபோல், பள்ளிகளுக்கும் மாணவர்கள் பஸ்சையே நம்பியுள்ளனர். தற்போது பல கிராமங்களில், காலை 6.00 மணிக்கு இயக்கப்படும் பஸ் போக்குவரத்தை அதிகாரிகள் வசூல் குறைவு காரணமாக ரத்து செய்துள்ளனர். இதனால், காலை 8.00 மணிக்கு முன் வெளியிடங்களுக்கு செல்லும் மக்கள் மிகவும் தவிப்புக்குள்ளாகின்றனர். அதுபோல், இரவு 8.00 மணிக்கு பின்னர், கூட்டம் குறைவாக இருப்பதால், இந்த பஸ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவசர காலத்துக்கு வெளியிடங்களுக்கு செல்லும் மக்கள், சொந்தமாக வாகனத்தை தயார் செய்து செல்ல வேண்டியுள்ளது.

இதனால் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ரத்து செய்த பஸ் சேவையை மீண்டும் துவங்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், "டீசல் விலை அதிகரித்துள்ளது. உள்ளூர் பஸ்களில், பகல் நேரத்தில், வசூல் குறைவாக உள்ளது. அதிகபட்சமாக, 20 பயணிகள் வரை மட்டுமே பஸ்சை பயன்படுத்துகின்றனர். இதனால், வசூல் குறைவாக உள்ள பகுதிகளில், ஓரிரு "டிரிப்'களை குறைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதற்கேற்ப, சில கிராமங்களுக்கான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு உத்தரவு வந்தால், ரத்து செய்த சேவை மீண்டும் துவங்கப்படும்,' என்றனர்.

கலை அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு இலவசமாக படிக்க விண்ணப்பிக்கலாம் சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு


சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

சென்னை பல்கலைக்கழகம் மாணவர் இலவச கல்விதிட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த ஏழை மாணவ–மாணவிகள் இந்த திட்டத்தில் பயன் அடையலாம். ஆதரவற்றவர்கள், விவசாய கூலி வேலை செய்யும் பெற்றோரின் குழந்தைகள், முதல் தலைமுறை பட்டப்படிப்பு படிக்க உள்ள மாணவர்கள், கைம்பெண், கணவரால் கைவிடப்பட்ட பெண்ணின் பிள்ளைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பெற்றோர் வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை சென்னை பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். www.unom.ac.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை குறிப்பிட்டுள்ள சான்றுகளுடன் பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியிடப்பட்ட உடன் 10 நாட்களுக்குள் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் சமர்பிக்கவேண்டும்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் உள்ளது.

 இந்த திட்டத்தில் தேர்ந்து எடுக்கப்படுபவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

தனியார் பள்ளிகளின் இட பிரச்னையை ஆய்வு செய்ய வல்லுநர் குழு


தமிழக அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச இட வசதியை ஏற்படுத்தாத தனியார் பள்ளிகள் பிரச்னை குறித்து, ஆய்வு செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையில், வல்லுநர் குழுவை அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இக்குழு, மூன்று மாதங்களில், தமிழக அரசுக்கு, அறிக்கையை வழங்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது

தனியார் பள்ளிகளை துவங்கவும், ஏற்கனவே உள்ள பள்ளிகள், தொடர் அங்கீகாரம் பெறவும், குறைந்தபட்ச இடவசதியை கொண்டிருக்க வேண்டும் என, தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் துணைவேந்தர் சிட்டிபாபு தலைமையிலான குழு அறிக்கையின் அடிப்படையில், மாநகராட்சி பகுதியாக இருந்தால், ஆறு கிரவுண்டு இடமும், மாவட்ட தலைநகர பகுதியாக இருந்தால், எட்டு கிரவுண்டு இடமும், பள்ளிக்கு இருக்க வேண்டும். நகராட்சி பகுதியாக இருந்தால், 10 கிரவுண்டு இடமும், பேரூராட்சி பகுதியாக இருந்தால், ஒரு ஏக்கர் பரப்பளவும், ஊராட்சியாக இருந்தால், மூன்று ஏக்கர் பரப்பளவு இடமும் இருக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கூடுதலாக நிலம் வாங்க முடியாமல், 1,000த்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் தவித்து வருகின்றன. அதனால் முடிவு காண்பதில் இழுபறியானது. இந்நிலையில், இந்த பிரச்னை குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, வல்லுநர் குழு அமைக்கப்படும் என, கடந்த ஆண்டு பட்ஜெட்டில், அறிவிப்பு வெளியானது.

ஒரு ஆண்டுக்குப் பின், இப்போது தான், வல்லுநர் குழுவை அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 5ம் தேதியிட்ட அரசாணையில், பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையில், வல்லுநர் குழுவை அமைத்து, அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது.

அரசாணை விவரம்: குறைந்தபட்ச இட வசதியை, ஒரே இடத்தில் ஏற்படுத்தாமல், 858 பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகத்தின் கீழ் இயங்கி வருகின்றன என, அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கூடுதல் நிலம் வாங்குவதற்கு இயலாத நிலை இருப்பதாகவும், பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. இதேபோன்ற நிலை, தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக்கல்வி துறையிலும் உள்ளன. இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தின்படி, அனைத்துப் பள்ளிகளும், அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் செயல்படக் கூடாது.

இதனால், மாணவர்களின் கல்வி நலனை கருத்தில்கொண்டு, இந்த விவகாரத்தில், நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை, இயக்குனர் தெரிவித்து உள்ளார். இப்பிரச்னை குறித்து ஆய்வு செய்து, குறைந்தபட்ச இட வசதியை நிர்ணயம் செய்வது குறித்து முடிவெடுக்க, வல்லுநர் குழுவை அமைக்கலாம் எனவும், இயக்குனர் தெரிவித்திருந்தார்.

அதன்படி, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையில், வல்லுநர் குழுவை அமைத்து, அரசு உத்தரவிடுகிறது. இக்குழு, ஆய்வு செய்து, மூன்று மாதங்களுக்குள், அரசுக்கு அறிக்கை வழங்க வேண்டும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தனியார் பள்ளிகள் மாவட்ட சங்கங்களின் மாநில அமைப்பின் பொதுச்செயலர் இளங்கோவன் கூறியதாவது: கட்டாய கல்வி சட்டத்தில், ஒரு மாணவருக்கு, 10 சதுர அடி இடம் ஒதுக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. நாங்கள், ஆறு அல்லது ஏழு சதுர அடி என்ற அளவில் நிர்ணயம் செய்து, இருக்கின்ற இட வசதிக்கு ஏற்ப, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களை மட்டும் சேர்க்க அனுமதித்தால் போதும் என, தொடர்ந்து கேட்டு வந்தோம்.

தற்போது, இந்த பிரச்னையை ஆய்வு செய்ய, வல்லுநர் குழுவை அமைத்து, அரசு உத்தரவிட்டுள்ளது. எங்களது கோரிக்கையை, வல்லுநர் குழு, அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

அரசின் நடவடிக்கையை, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கமும் வரவேற்றுள்ளது