பொள்ளாச்சியில் வசூல் குறைந்த கிராமங்களுக்கான, அரசு பஸ் சேவை குறைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கால்கடுக்க நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழகத்துக்குட்பட்டு, மூன்று கிளைகள் உள்ளன. இதன்மூலம் பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, கிணத்துக்கடவு சுற்றுப்பகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்களுக்கு, 200க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, கோவை, பழநி, திருப்பூர் வழித்தடங்களுக்கும் பொள்ளாச்சியில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கடந்த சில மாதங்களாக, பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில், கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் 60 சதவீத பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், காலை 10.00 மணிக்கு மேல் மாலை 3.00 மணி வரை கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ் சேவையை அரசு போக்குவரத்து கழகம் பாதியாக குறைத்துள்ளது. பல கிராமங்களில், அதிகாலையில் இயக்கப்படும் பஸ் சேவையை ரத்து செய்துள்ளதால், வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லும் மக்கள் சிரமப்படுகின்றனர். இது குறித்து அரசு போக்குவரத்து கழகத்துக்கு, பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: பொள்ளாச்சி தாலுகாவில், விவசாயம் பிரதானமாக உள்ளதால், கிராமங்களில் இருந்து விவசாய கூலி வேலைக்கு மக்கள் அதிகளவில் வெளியூர்களுக்கு செல்கின்றனர்.
அதுபோல், பள்ளிகளுக்கும் மாணவர்கள் பஸ்சையே நம்பியுள்ளனர். தற்போது பல கிராமங்களில், காலை 6.00 மணிக்கு இயக்கப்படும் பஸ் போக்குவரத்தை அதிகாரிகள் வசூல் குறைவு காரணமாக ரத்து செய்துள்ளனர். இதனால், காலை 8.00 மணிக்கு முன் வெளியிடங்களுக்கு செல்லும் மக்கள் மிகவும் தவிப்புக்குள்ளாகின்றனர். அதுபோல், இரவு 8.00 மணிக்கு பின்னர், கூட்டம் குறைவாக இருப்பதால், இந்த பஸ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவசர காலத்துக்கு வெளியிடங்களுக்கு செல்லும் மக்கள், சொந்தமாக வாகனத்தை தயார் செய்து செல்ல வேண்டியுள்ளது.
இதனால் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ரத்து செய்த பஸ் சேவையை மீண்டும் துவங்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், "டீசல் விலை அதிகரித்துள்ளது. உள்ளூர் பஸ்களில், பகல் நேரத்தில், வசூல் குறைவாக உள்ளது. அதிகபட்சமாக, 20 பயணிகள் வரை மட்டுமே பஸ்சை பயன்படுத்துகின்றனர். இதனால், வசூல் குறைவாக உள்ள பகுதிகளில், ஓரிரு "டிரிப்'களை குறைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதற்கேற்ப, சில கிராமங்களுக்கான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு உத்தரவு வந்தால், ரத்து செய்த சேவை மீண்டும் துவங்கப்படும்,' என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக