Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 18 ஜனவரி, 2013

ஆங்கிலத்தில் பேசி அசத்தும் கிராமத்து பள்ளி மாணவர்கள்


சிவகங்கை அருகே மரக்காத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசி அசத்துவது, அப்பகுதியினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம், மரக்காத்தூரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு மரக்காத்தூர், நற்கனி, புலியூரணி, மணியன்குடி, சிவந்தரேந்தல், அந்தரேந்தல், குருமனேந்தல் கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர் பெஞ்சமின், 38, முயற்சியால், மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசி, அசத்துகின்றனர். இவர், தமது சொந்த முயற்சியால், 5 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு , காலை 8.30 முதல் 9.15 மணி வரை, ஆங்கிலத்தில் படித்தல், பேசுதல், இலக்கண பயிற்சி அளிக்கிறார். இப்பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரும் சுயநடையில், ஐந்து வரிக்கு மிகாமல், பிழையின்றி ஆங்கிலம் எழுதுவர். இது தவிர வாசிப்பு, இலக்கண பயிற்சியும் அளிக்கிறார். பள்ளி விழாக்களின் போதும், மாணவர்களுக்கு ஆங்கில உரையாடல் மூலம் பட்டிமன்றம், நாடகம், பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகின்றன.

அதில் பங்கேற்று, சரளமாக ஆங்கிலம் பேசுவது, அப்பகுதியினரை வியப்பில் ஆழ்த்துகிறது. மாணவர்கள் அனைவரும், பாட நேரங்கள் தவிர்த்து, பள்ளி வளாகத்தில் ஆங்கிலத்தில் உரையாடுவது தான் சிறப்பு. மேலும், "நண்பர்கள் குழு' மூலம் விடுமுறை நாட்களில் கிராமங்களுக்கு சென்று, சுகாதாரம், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர்.

எட்டாம் வகுப்பு மாணவன் மணிகண்டன் கூறுகையில், ""ஆரம்பத்தில் ஆங்கிலம் சற்று கடினமாக தான் இருந்தது. ஆசிரியர் தந்த ஊக்கத்தால், ஆங்கிலம் கற்பது, பேசுவது எளிமையானது, '' என்றார்.

ஆசிரியர் பெஞ்சமின் கூறுகையில்,""அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் வார்த்தைகள், சின்ன வாக்கியங்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வந்தேன். தினமும் மாணவர்களுக்கு வாசிப்பு திறன், எழுத்து, இலக்கண பயிற்சி தருகிறேன். ஆங்கிலம் அந்நியமொழி என்ற எண்ணம் வரக்கூடாது. தயக்கமில்லாமல் பேசவேண்டும், தவறாக பேசுகிறோம் என கூச்சப்படவேண்டாம் என வலியுறுத்துவேன்,'' என்றார்.

தமிழகத்தில் பொது நூலகங்கள் பாதுகாக்கப்படுமா?


பொது நூலகங்களில், நான்காண்டுகளாக புதிய நூல்கள் வாங்காத நிலை உள்ளதால், வாசகர்களின் வருகை வெகுவாகக் குறைந்துள்ளது.

கிராமப்புற நூலகங்கள், கிளை நூலகங்கள், வட்டார நூலகங்கள், மாவட்ட மைய நூலங்கள் என, தமிழகத்தில், 4,500க்கும் மேற்பட்ட பொது நூலகங்கள் உள்ளன. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, கிராம ஊராட்சிகளிலும் நூலகங்கள் துவங்கப்பட்டுள்ளன. இந்நூலகங்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் நூல்கள், அடுத்தாண்டின் துவக்கத்தில் வாங்கப்படுவது வழக்கம்.

ஆனால், 2009ம் ஆண்டிலிருந்து, வெளிவந்த எந்த புதிய நூல்களும், நூலகங்களுக்கு வாங்கப்படவில்லை. 2009ம் ஆண்டிலிருந்து வெளிவந்த நூல்களின் பட்டியல்களை, பரிசீலனைக்காக அரசு வாங்கி கொண்ட நிலையில், அவற்றை வாங்க, எந்த ஆணையையும் பிறப்பிக்கவில்லை.

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட, கிராம நூலகங்களில், பெரும்பாலனவை செயல்படவில்லை. இயங்கும் சில நூல்களிலும், நூல்கள் வாங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குழு அமைக்கப்படவில்லை: வழக்கமாக, நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்க, தேர்வு செய்ய குழு அமைக்கப்படும். இக்குழுக்கள், விதிமுறைப்படி புத்தகங்களை தேர்வு செய்து, வாங்க வேண்டி நூல்களின், பட்டியல்களை அரசுக்கு சமர்ப்பிக்கும். அதனடிப்படையில், நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கப்படும். ஆனால், நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்க, தேர்வு செய்யப்படும் குழு, நான்கு ஆண்டுகளாக அமைக்கப்படவில்லை.

இதுகுறித்து, தமிழ்நாடு நூலக சங்க பொது செயலர், முத்துசாமி கூறியதாவது: ராஜாராம் மோகன்ராய் அறக்கட்டளையிலிருந்து, ஆண்டிற்கு, 5 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் நூலக வரியாக, ஆண்டுக்கு, 200 கோடி ரூபாயும், சென்னைக்கு மட்டும், 5 கோடி ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. தி.மு.க., ஆட்சியில், உருவாக்கப்பட அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்காக, இந்நிதியிலிருந்து, 80 கோடி ரூபாயை அரசு செலவு செய்தது. இதனால், புதிய நூல்கள் வாங்குவது ஓராண்டுக்கு, நிறுத்தி வைக்கப்பட்டது.

நிறுத்தியது ஏன்?: ஆனால், அதைத் தொடர்ந்து நூல்கள் வாங்குவது ஏன் நிறுத்தப்பட்டது என்பதற்கு, எவ்வித காரணமும் தெரிவிக்கப்படவில்லை. பொது நூலகங்களை நம்பியே, நூலக பதிப்பு தொழிலும் உள்ளதால், அத்தொழில் நசியும் நிலை ஏற்பட்டுள்ளது. பணி சுமை அதிகமுள்ள பள்ளி கல்வி துறையில் இருந்து, நூலக துறையை விடுவித்து, நூலக துறையை தனியே உருவாக்க வேண்டும். அப்போதுதான், நூலகங்களை அழிவிலிருந்து காக்க முடியும்.

அத்துடன் வாசிப்பு தரம் மிக்க நூல்கள் அதிகரித்து தமிழ் வளர்ச்சிக்கு உதவும். கல்வி துறைக்கு ஒதுக்கும் நிதியில், நூலக வளர்ச்சிக்காக ஒரு சதவீதம் நிதி ஒதுக்கீட்டு செய்ய வேண்டும். இதுவே, வருங்கால நூலக வளர்ச்சிக்கு உதவும். இவ்வாறு முத்துசாமி கூறினார்.

இதுகுறித்து, பொது நூலக துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் கூறுகையில், "2009ம் ஆண்டிற்கு வாங்க வேண்டிய நூல்கள் குறித்து தகவல் சேகரிக்கப்பட்டு, நூல்கள் வாங்கப்பட உள்ளன. 2011, 2012ம் ஆண்டிற்கு வாங்க வேண்டிய நூல்கள் குறித்து விவரம் சேகரிப்பு பணி நடந்து வருகிறது, என்றார்.

தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவக்கல்லூரிகள்


தன்னுடன் இணைப்பு பெற்றுள்ள மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலை, தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம், மாணவர்களும், பெற்றோர்களும் விழிப்புணர்வுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு பெறாத மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, எந்தப் பதிவும், எந்தத் தேர்வும் நடத்தப்படாது. www.tnmgrmu.ac.in என்ற பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று, இணைப்பு பெற்ற கல்லூரிகளின் பட்டியலைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள கல்லூரிகளின் பெயர்கள்

* தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள்
கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் - வேலூர்
* பி.எஸ்.ஜி இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் - கோவை
* ஐ.ஆர்.டி பெருந்துறை மெடிக்கல் காலேஜ் - பெருந்துறை
* ஸ்ரீ மூகாம்பிகா இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் - கன்யாகுமரி
* மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் - மேல்மருவத்தூர்
* கற்பக வினாயகா இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் சென்டர் - காஞ்சிபுரம்
* சென்னை மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் சென்டர் - திருச்சி
* ஸ்ரீ முத்துக்குமரன் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் - மாங்குடி(அருகில்).
* தனலட்சுமி சீனிவாசன் மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல் - பெரம்பலூர்
* அன்னபூர்ணா மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல் - சென்னை
* கற்பகம் பேகல்டி ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் - கோயம்புத்தூர்.

ஏழை மக்களின் சாபத்தை வாங்காதீர்கள்: மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை


 டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளும் முடிவு தவறானது என தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மேலும், மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தினால், ஏழை மக்களின் சாபத்திலிருந்து மத்திய அரசு தப்பிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

டில்லியில் நேற்று பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இது போல, மானிய விலையில் வழங்கப்படும் சமையல் காஸ் எண்ணிக்கையை 6லிருந்து 9 ஆக உயர்த்தவும் அனுமதி வழங்கப்பட்டது. டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்க அனுமதியளிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எண்ணெய் நிறுவனங்கள் தங்களது இஷ்டம் போல் டீசல் விலையை ஏற்ற இம்முடிவு வகை செய்யும் என பா.ஜ., கம்யூனிஸ்ட், அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சமாஜ்வாடி, பகுஜன் உள்ளிட்ட மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை உண்மையாக்கும் விதமாக, நேற்றே டீசல் லிட்டர் ஒன்றிற்கு 50 பைசா உயர்த்தப்பட்டது.


இந்நிலையில், இது தொடர்பாக தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளும் உரிமையை அளிக்கும் மத்திய அரசின் முடிவு தவறானது என்று தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ. 5.63 உயர்த்தப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர், மாதம் தோறும் டீசல் விலை 40 முதல் 50 பைசா வரை அதிகரிக்கும் என்ற எண்ணெய் நிறுவனங்களின் முடிவு பணவீக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அது ஏழை மக்களை மிகவும் பாதிக்கும் என்றும் கூறியுள்ளார்.


இதே போல், மானிய விலையில் வழங்கப்படும் சமையல் காஸ் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயனடைந்து வருவதாகவும், தற்போது 6லிருந்து 9 ஆக உயர்த்தப்பட்டுள்ள சிலிண்டர்களின் எண்ணிக்கையை, மாதம் ஒன்று வீதம் 12 ஆக உயர்த்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்படும் அதிகப்படியான சுமையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என கூறியுள்ள அவர், இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சாபத்திலிருந்து மத்திய அரசு தப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.