Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 18 ஜனவரி, 2013

ஏழை மக்களின் சாபத்தை வாங்காதீர்கள்: மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை


 டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளும் முடிவு தவறானது என தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மேலும், மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தினால், ஏழை மக்களின் சாபத்திலிருந்து மத்திய அரசு தப்பிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

டில்லியில் நேற்று பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இது போல, மானிய விலையில் வழங்கப்படும் சமையல் காஸ் எண்ணிக்கையை 6லிருந்து 9 ஆக உயர்த்தவும் அனுமதி வழங்கப்பட்டது. டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்க அனுமதியளிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எண்ணெய் நிறுவனங்கள் தங்களது இஷ்டம் போல் டீசல் விலையை ஏற்ற இம்முடிவு வகை செய்யும் என பா.ஜ., கம்யூனிஸ்ட், அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சமாஜ்வாடி, பகுஜன் உள்ளிட்ட மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை உண்மையாக்கும் விதமாக, நேற்றே டீசல் லிட்டர் ஒன்றிற்கு 50 பைசா உயர்த்தப்பட்டது.


இந்நிலையில், இது தொடர்பாக தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளும் உரிமையை அளிக்கும் மத்திய அரசின் முடிவு தவறானது என்று தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ. 5.63 உயர்த்தப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர், மாதம் தோறும் டீசல் விலை 40 முதல் 50 பைசா வரை அதிகரிக்கும் என்ற எண்ணெய் நிறுவனங்களின் முடிவு பணவீக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அது ஏழை மக்களை மிகவும் பாதிக்கும் என்றும் கூறியுள்ளார்.


இதே போல், மானிய விலையில் வழங்கப்படும் சமையல் காஸ் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயனடைந்து வருவதாகவும், தற்போது 6லிருந்து 9 ஆக உயர்த்தப்பட்டுள்ள சிலிண்டர்களின் எண்ணிக்கையை, மாதம் ஒன்று வீதம் 12 ஆக உயர்த்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்படும் அதிகப்படியான சுமையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என கூறியுள்ள அவர், இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சாபத்திலிருந்து மத்திய அரசு தப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக