பொது நூலகங்களில், நான்காண்டுகளாக புதிய நூல்கள் வாங்காத நிலை உள்ளதால், வாசகர்களின் வருகை வெகுவாகக் குறைந்துள்ளது.
கிராமப்புற நூலகங்கள், கிளை நூலகங்கள், வட்டார நூலகங்கள், மாவட்ட மைய நூலங்கள் என, தமிழகத்தில், 4,500க்கும் மேற்பட்ட பொது நூலகங்கள் உள்ளன. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, கிராம ஊராட்சிகளிலும் நூலகங்கள் துவங்கப்பட்டுள்ளன. இந்நூலகங்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் நூல்கள், அடுத்தாண்டின் துவக்கத்தில் வாங்கப்படுவது வழக்கம்.
ஆனால், 2009ம் ஆண்டிலிருந்து, வெளிவந்த எந்த புதிய நூல்களும், நூலகங்களுக்கு வாங்கப்படவில்லை. 2009ம் ஆண்டிலிருந்து வெளிவந்த நூல்களின் பட்டியல்களை, பரிசீலனைக்காக அரசு வாங்கி கொண்ட நிலையில், அவற்றை வாங்க, எந்த ஆணையையும் பிறப்பிக்கவில்லை.
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட, கிராம நூலகங்களில், பெரும்பாலனவை செயல்படவில்லை. இயங்கும் சில நூல்களிலும், நூல்கள் வாங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குழு அமைக்கப்படவில்லை: வழக்கமாக, நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்க, தேர்வு செய்ய குழு அமைக்கப்படும். இக்குழுக்கள், விதிமுறைப்படி புத்தகங்களை தேர்வு செய்து, வாங்க வேண்டி நூல்களின், பட்டியல்களை அரசுக்கு சமர்ப்பிக்கும். அதனடிப்படையில், நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கப்படும். ஆனால், நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்க, தேர்வு செய்யப்படும் குழு, நான்கு ஆண்டுகளாக அமைக்கப்படவில்லை.
இதுகுறித்து, தமிழ்நாடு நூலக சங்க பொது செயலர், முத்துசாமி கூறியதாவது: ராஜாராம் மோகன்ராய் அறக்கட்டளையிலிருந்து, ஆண்டிற்கு, 5 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் நூலக வரியாக, ஆண்டுக்கு, 200 கோடி ரூபாயும், சென்னைக்கு மட்டும், 5 கோடி ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. தி.மு.க., ஆட்சியில், உருவாக்கப்பட அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்காக, இந்நிதியிலிருந்து, 80 கோடி ரூபாயை அரசு செலவு செய்தது. இதனால், புதிய நூல்கள் வாங்குவது ஓராண்டுக்கு, நிறுத்தி வைக்கப்பட்டது.
நிறுத்தியது ஏன்?: ஆனால், அதைத் தொடர்ந்து நூல்கள் வாங்குவது ஏன் நிறுத்தப்பட்டது என்பதற்கு, எவ்வித காரணமும் தெரிவிக்கப்படவில்லை. பொது நூலகங்களை நம்பியே, நூலக பதிப்பு தொழிலும் உள்ளதால், அத்தொழில் நசியும் நிலை ஏற்பட்டுள்ளது. பணி சுமை அதிகமுள்ள பள்ளி கல்வி துறையில் இருந்து, நூலக துறையை விடுவித்து, நூலக துறையை தனியே உருவாக்க வேண்டும். அப்போதுதான், நூலகங்களை அழிவிலிருந்து காக்க முடியும்.
அத்துடன் வாசிப்பு தரம் மிக்க நூல்கள் அதிகரித்து தமிழ் வளர்ச்சிக்கு உதவும். கல்வி துறைக்கு ஒதுக்கும் நிதியில், நூலக வளர்ச்சிக்காக ஒரு சதவீதம் நிதி ஒதுக்கீட்டு செய்ய வேண்டும். இதுவே, வருங்கால நூலக வளர்ச்சிக்கு உதவும். இவ்வாறு முத்துசாமி கூறினார்.
இதுகுறித்து, பொது நூலக துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் கூறுகையில், "2009ம் ஆண்டிற்கு வாங்க வேண்டிய நூல்கள் குறித்து தகவல் சேகரிக்கப்பட்டு, நூல்கள் வாங்கப்பட உள்ளன. 2011, 2012ம் ஆண்டிற்கு வாங்க வேண்டிய நூல்கள் குறித்து விவரம் சேகரிப்பு பணி நடந்து வருகிறது, என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக