Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

விவேகானந்தர் பார்வையில் இஸ்லாம்


சுவாமி விவேகானந்தர் ஒரு உண்மையான ஆன்மீகவாதி. உலகின் அனைத்து மதங்களின் உன்னதங்களையும், போற்றிப் பாராட்டியவர். ஆனால் இன்று மதவெறியைக் கிளறி நாட்டை சுடுகாடாக்க முயலும் இயக்கத்தினர் தனது பிரச்சாரத்திற்கு விவேகானந்தரை பயன்படுத்திக் கொள்கிறது. இது விவேகானந்தரை இழிவுபடுத்துவது ஆகும்.
 இஸ்லாம் மதம் குறித்தும், முகலாய மன்னர்களின் ஆட்சி குறித்தும் அவர்கள் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். ஆனால் விவேகானந்தர் இஸ்லாம் மதம் குறித்து மிக உயரிய எண்ணம் கொண்டு இருந்தார்.
 ”சமத்துவத்தைப் பற்றி ஏதேனும் ஒரு மதம் பாராட்டத்தக்க முறையில் சொல்லியிருந்தால் அது இஸ்லாம் மட்டுமே என்பது தான் எனது அனுபவம்.”
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள் ஆகிய மூவரும் தான் எங்கள் பிரதான எதிரிகள் என்று கூறும் அவர்கள் விவேகானந்தர் பெயரை உச்சரிக்கக் கூட தகுதியற்றவர்கள் என்பதை இதன் மூலம் உணரலாம்.
 இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களைச் சித்ரவதை செய்து பலவந்தமாக மதம் மாற்றினர் என்ற பொய்யை வாய் வலிக்காமல் சொல்லி வருகின்றார்கள். ஆனால் விவேகானந்தர்..,
”பாமர மக்களுக்கு இஸ்லாம் ஒரு செய்தியாக வந்தது. முதல் செய்தி சமத்தவம், ஒரே மதம் தான் உள்ளது.., அது அன்பு, வம்சம், நிறம்.. அல்லது வேறு எதுபற்றியும் எந்தக் கேள்வியும் கிடையாது” என்று கூறினார்.
 ஜாதியக் கொடுமைகளின் வெப்பம் தாங்காமல் தான் பெரும்பகுதி மக்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினார்கள் என்பதை விவேகானந்தர் இதயப்பூர்வமாக ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதையே இது காட்டுகின்றது.
 கேரள மாநிலம் மலபார் பகுதியைச் சேர்ந்த ஏராளமாக தலித் மக்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவினார்கள். இதைக் கண்ட சனாதனவாதிகள் எதிர்ப்பு கிளப்பிய போது விவேகானந்தர் அவர்களுக்கு அமைதியாகப் பதில் சொன்னார்..,
 மலபார் பகுதியில் நடந்தது என்ன? ஏழை, எளிய தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி இந்துக்கள் வசிக்கும் தெருக்களின் வழியாக நடக்கக் கூட முடியவில்லை. அவர்களது வீடுகள் அகதிகள் முகாம்களைப் போல ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் கோயில்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் விழுந்தால் கூட நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். இவ்வளவுக்கும் காரணம் உங்களது கேடுகெட்ட ஜாதி முறைதான். அவர்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து ஒரு ஆங்கிலப் பெயரைச் சூட்டிக் கொண்டாலோ அல்லது இஸ்லாத்தைத் தழுவி ஒரு முஸ்லிம் பெயரைச் சூட்டிக் கொண்டாலோ அவர்களுக்குப் புதிய மரியாதை கிடைக்கிறது. நிலமை இப்படி இருக்கும் போது, நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டியது உங்கள் மதத்தினுடைய பழமையான பழக்க வழக்கங்களையும், ஜாதி முறையையும் தானே தவிர நிச்சயமாக முஸ்லிம்களை எதிர்த்து அல்ல.”
 இதுவல்லவா தெளிவான சிந்தனை! தீர்க்கமான அறிவு..! நோயின் மூலத்தைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்று விரும்பியவர் சுவாமி விவேகானந்தர், அவர் மேலும் பேசுகிறார் ..
”இந்தியாவை முகமதியர்கள் வென்றது ஏழை எளியவர்களுக்கு ஒரு விடுதலை வாய்ப்பாக அமைந்தது. எனவே தான் நமது மக்களின் ஐந்தில் ஒரு பகுதியினர் முகமதியர்களானார்கள்” இன்றுள்ள நிலைகளுக்கு விவேகானந்தர் அன்றைக்கே அளித்துள்ள தெளிவான விடை இது.
இந்துக்கள் புத்தமதத்திற்கு மாறியதற்கும் அடிப்படைக் காரணம் ஜாதிய ஒடுக்குமுறைதான் என்பதையும் விவேகானந்தர் தெளிவாக கூறியுள்ளார். அவர் கேட்கிறார்..
”புத்தப் புரட்சி இல்லாமல் செல்வாக்கு மிகுந்த மேல் ஜாதியினரின் கொடுங்கோன்மையிலிருந்து அவதிக்குள்ளாயிருக்கும் லட்சக் கணக்கான கீழ்ஜாதி மக்களுக்கு வேறு எது விடுதலை அளித்திருக்கும்.”
என்று விவேகானந்தர் வினா தொடுத்தார். ஜாதியக் கொடுமையின் காரணமாக இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி பாபா சாகேப் அம்பேத்கரே பின்னாளில் தனது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தை தழுவினார் என்பது மனங் கொள்ளத்தக்கது.
பசுக்கள் புனிதமானது. ஆனால் இஸ்லாமியர்கள் பசு மாமிசத்தைப் புசிக்கிறார்கள். எனவே அவர்கள் நமது எதிரிகள் என்று கூறினர். அரியானா மாநிலத்தில் இறந்து போன பசுமாட்டின் தோலை உரித்ததற்காக ஐந்து தலித்துக்கள் அடித்துக் கொல்லப்பட்ட கொடுமை நடந்தேறியுள்ளது. ”இறந்து போன பசுமாடு, உயிருள்ள தலித்துகளை விட புனிதமானது..?” என்று கூறுகிறார் ஒருவர்! ஆனால் விவேகானந்தர் பார்வை வித்தியாசமானது.
ஒருமுறை பசுபாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சுவாமி விவேகானந்தரைச் சந்திக்க வந்தார்கள். இந்து மதத்தின் புனித சின்னமான பசுக்களை பாதுகாக்க உங்களால் இயன்ற நன்கொடையைத் தாருங்கள்..! என்று வந்தவர்கள் கேட்டார்கள்.
அப்பொழுது நாட்டின் பல பகுதிகளில் பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் பட்டினியால் சுருண்டு விடுந்து செத்துக் கொண்டிருந்தார்கள். சுவாமிஜி வந்தவர்களைப் பார்த்துக் கேட்டார். ‘பட்டினியால் சாகும் மனிதர்களைக் காப்பாற்ற நீங்கள் ஏதாவது செய்வீர்களா?
வந்தவர்கள் பதில் சொல்லும் போது ”மனிதர்கள் பட்டினியால் சாவது அவர்களது கர்மப்பலன். அவர்களை நாங்கள் காப்பாற்ற முடியாது, பசுக்களைக் காப்பாற்றுவது தான் எங்கள் கடமை” என்றார்கள்.
வெகுண்டெழுந்த விவேகானந்தர் அவர்களைப் பார்த்துச் சொன்னார். ”மனிதர்கள் பட்டினியால் சாவது அவர்களது கர்மப் பலன் என்றால், பசுக்கள் சாவதும் அதன் கர்மப்பலனாகத் தான் இருக்க வேண்டும். மனிதர்களைப் பற்றிக் கவலைப்படாத உங்களுக்கு பசுக்களைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது” என்று கூறி அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டார்.
அமெரிக்காவில் நடந்த உலக சமய மாநாட்டில் ‘சகோதரர், சகோதரிகளே..!” என்று அவர் அழைத்தது வெறும் உதட்டு வார்த்தை அல்ல. உள்ளத்தில் இருந்து வந்த உண்மை வார்த்தை ஆகும்.
இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு, சிறுபான்மை மக்கள் அவர்களுக்கு அடங்கி நடத்த வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.
ஆனால் விவேகானந்தரின் ஆன்ம உள்ளம் கண்ட கனவு வேறு.
”என்னுடைய மனக்கண்ணில் எதிர்காலம் குற்றம் குறையற்ற முழுமையானதாக இருக்கும். கஷ்டங்கள் மற்றும் குழப்பங்களிலிருந்து மீண்டு விடும். வேதாந்த மூளையும் இஸ்லாமிய உடலும் கொண்ட ஒளிமயமான, யாராலும் அடக்க முடியாத இந்தியாவாகத் திகழும்.”
இந்தியா என்ற மதச்சார்பற்ற நாடு அனைத்து மதங்களையும் பண்பாட்டையும், இனங்களையும், மொழிகளையும் கொண்ட பல வண்ண மலர்த்தோட்டமாக இருக்க வேண்டும் என்பதே விவேகானந்தரின் கனா..!
விவேகானந்தரைப் பொறுத்தவரை இஸ்லாம் என்ற மார்க்கம் சமத்துவம் மற்றும் அன்பு மயமானது. அது ஆக்கிரமிப்பு மதம் அல்ல

நன்றி : மதுக்கூர் இராமலிங்கம்,நேசமுடன் இஸ்லாம்

நோன்புப் பெருநாள் தர்மம்

நம்மிடையே ஏழைகள், செல்வந்தர்கள், நடுத்தர வர்க்கத்தினர் எனும் ஏற்றத்தாழ்வு வாழ்க்கை அமைப்பில் இருந்தாலும், இஸ்லாம் இந்த வேறுபாடான மக்களை ஒன்று சேர்க்கும் விதமாக சில வணக்கங்களை விஷேசமான முறையில் ஏற்படுத்தித் தந்துள்ளது. அதில் ஒன்றுதான்'ஸதக்க‌துல் ஃபித்ர்' அல்லது 'ஜகாத்துல் ஃபித்ர்' என்று சொல்லப்படும் தர்மமாகும். இஸ்லாம் கூறும் இந்த ஃபித்ரா தர்மத்தின் முக்கியத்துவத்தையும் அதன் சட்டங்களையும் இப்போது பார்ப்போம்.

யார் யாரெல்லாம் நோன்புப் பெருநாள் தர்மம் கொடுக்கவேண்டும்?
பொருளாதாரக் கடமையான 'ஜகாத்' எவ்வாறு பொருள் வளத்தைத் தூய்மைப்படுத்தி இஸ்லாமிய சமூகத்தின் பொருளாதாரத் தேவையில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்கின்றதோ, அதேபான்று இந்த 'ஜகாத்துல் ஃபித்ரு'ம் ஏழைகளின் சந்தோஷத்தில் பெரும் பங்காற்றுகிறது. பொருள்கள் மீதான கட்டாயக் கடமையான 'ஜகாத்' குறிப்பிட்ட செல்வ வளமுள்ள‌ முஸ்லிம்களில் யார் அதற்குரிய 'நிஸாப்' எனும் எல்லை அளவையை எட்டுகின்றனரோ அவர்கள் மீது மட்டுமே கடமையாகின்றது. ஆனால் இந்த ஜகாத்துல் ஃபித்ர் அவ்வாறல்ல! நோன்பாளிகள், நோன்பு நோற்க இயலாமல் இருந்தவர்கள், வசதியில் குறைந்தவர்கள் யாராக இருந்தாலும், தன் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேர் சார்பாகவும் கட்டாயம் கொடுக்க‌ப்பட வேண்டிய ஒன்றாகிவிடுகின்றது. எனவே த‌ன் குடும்பத்தின் பெருநாள் செலவு போக இதைக் கொடுக்கச் சக்தியுள்ள அனைத்து முஸ்லிம்களும் இந்த தர்மத்தை கொடுக்க வேண்டும். பெரும் செல்வந்தர்கள் தான் கொடுக்க வேண்டும் என்பது இதில் கிடையாது.

-:பெருநாள் தர்மம் கொடுப்பதின் நோக்கம்:-
ரமலானைத் தொடர்ந்து வரும் ஈகைத் திருநாள் எனும் இஸ்லாமிய பண்டிகையின்போது எந்தவொரு முஸ்லிமும் அப்பண்டிகை நாளின் மகிழ்ச்சியிலிருந்து தூரமாகி நிற்கக்கூடாது எனும் பரந்த நோக்கமும் இந்த தர்மத்தின் மூலம் வியாபித்து நிற்கின்றது! இதனால் நோன்பு நோற்றவர்களில் பணக்காரர்கள் ஏழைகளுடனும், ஏழைகள் அவர்களைவிட வறிய‌ ஏழைகளுடனும் நேரடியாக தொடர்புகொண்டு பெருநாளின் சந்தோஷத்தை பகிர்ந்துக்கொள்ள முடிகிறது. இதனால் அவர்களிடையே மகிழ்ச்சியின் தாத்பர்ய அம்சம் சகோதரத்துவ வாஞ்சையுடன் மிளிர்கின்றது.

இந்த நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கிய நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள், ஏழை மக்கள் பெருநாள் பொழுதை மகிழ்வுடன் கழிப்பதற்காகவும், நோன்பு வைத்திருக்கும்போது நோன்பாளி ஏதாவது வீணான காரியங்களில் ஈடுபட்டிருந்தால் அதற்கு பரிகாரமாகவும் இந்த தர்மம் அமைவதாக‌ கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கி,"இன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக்குங்கள்"என்றும் கூறினார்கள்.
அறிவிப்பாளர்:இப்னு உமர்(ரலி); நூல்கள்:பைஹகீ,தாரகுத்னீ

ஸதக்க‌துல் ஃபித்ர் என்பது நோன்பு வைத்திருக்கும்போது நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளின் (அன்றைய உணவுக்கு வழியாக இருப்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி); நூல்கள்:அபூதாவூத்,இப்னுமாஜா,தாரகுத்னீ,பைஹகீ

பெருநாள் தர்மம்(ஸதக்க‌துல் ஃபித்ர்) எப்போது வழங்க வேண்டும்...?
இந்த தர்மமானது புனித ரமலானின் முடிவில், ஈகைத் திருநாள் தொழுகைக்கு முன்பே வழங்கப்படுவதாகும். ஒவ்வொரு முஸ்லிமான ஆண்-பெண்கள், அன்று பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவரின் சார்பாகவும் வழங்கப்படவேண்டும்.

ஃபித்ர் ஜகாத்தை பெருநாள் தொழுகைக்கு மக்கள் புறப்படும் முன்பே வழங்கிவிடவேண்டுமென நபி(ஸல்)அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பாளர்:இப்னு உமர்(ரலி); நூல்கள்:புகாரி,முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ

நபித்தோழர்கள் பெருநாளைக்கு ஒருநாள் முன்பாக அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பாக பெருநாள் தர்மத்தை வழங்குபவர்களாக இருந்தனர்.
அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி); நூல்:புகாரி

எனவே பெருநாள் தர்மத்தினைப் பெறக்கூடிய மக்கள் பெருநாளைக்கான‌ உணவுகளை தயார்படுத்திக்கொள்ள‌ வசதியாக ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் முன்னதாக கொடுத்துவிடவேண்டும்.

-:பெருநாள் தர்மத்தின் அளவு:-
முஸ்லிமான ஆண்கள் பெண்கள், பெரியவர் சிறியவர், அடிமை, சுதந்திரமானவர் ஆகிய அனைவருக்கும் பேரீத்தம்பழம் அல்லது கோதுமை ஆகியவற்றிலிருந்து பெருநாள் தர்மம் தலா ஒரு 'ஸாவு' என்று நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தனர்.
அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி); நூல்கள்:புகாரி,முஸ்லிம்,அஹ்மத்,நஸயீ,அபூதாவுத்,திர்மிதீ,இப்னுமாஜா

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் உணவுப் பொருட்களில் ஒரு 'ஸாவு' ஃபித்ர் தர்மம் வழங்குவோம். அன்றையதினம் எங்களின் உணவாக கோதுமையும் உலர்ந்த திராட்சையும் இருந்தது.
அறிவிப்பாளர்: அபூஸயீத்(ரலி); நூல்:புகாரி

குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்காகவும் ஒரு "ஸாவு" அளவுக்கு கொடுக்கவேண்டும் என்று இந்த ஹதீஸ்க‌ள் கூறுகின்றன.

(குறிப்பு:- இரு கை கொள்ளளவின் நான்கு மடங்கே ஒரு "ஸாவு" என்பதாகும். அதாவது இருகைகளையும் ஒன்று சேர்த்து ஒரு பொருளிலிருந்து நான்கு முறை அள்ளி அளந்து போடுவதே ஒரு 'ஸாவு' என்பதன் அளவாகும். கிராம் கணக்கில் சொல்வதாக இருந்தால் சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.)

ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும். உதாரணமாக, நமது பராமரிப்பில் 3 நபர்கள் இருந்தால் தன்னையும் சேர்த்து தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் (4 x 2.5 கிலோ) 10 கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா தர்மத்தின் அளவாகும்.

எதைக் கொடுக்கலாம்......? 
நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் காலத்தில் பெருநாளின் ஃபித்ரா தர்மமாக உணவுப் பொருள்கள்தான் திரட்டி விநியோகிக்கப்பட்டது. அவர்கள் காலத்தில் தங்கக் காசுகள், வெள்ளிக் காசுகள் புழக்கத்தில் இருந்தாலும் நோன்புப் பெருநாள் தர்மமாக காசுகள் கொடுக்கப்பட்டதில்லை. உணவுப் பொருட்கள் தான் கொடுக்கப்பட்டன. நபித்தோழர்களின் அன்றைய உணவாக இருந்த பேரீத்தம்பழம், தீட்டப்படாத கோதுமை (தோல் நீக்கப்படாதது) ஆகியவற்றைத் தான் கொடுத்து வந்தனர். ஆனால் நபி(ஸல்) காலத்தில் கோதுமை, பேரீத்தம்பழங்கள் பெருநாள் தர்மமாக கொடுக்கப்பட்டதால் நாமும் அதையே கொடுக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. இன்றைக்கு நம்முடைய உணவு முறை எதுவாக இருக்கிறதோ அதைதான் தர்மமாக கொடுக்க வேண்டும். ஏழைகளுக்குப் பயன்படும் விதத்தில் எந்த ஒரு உணவுப் பொருளையும் கொடுக்கலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் உணவில் தீட்டப்படாத கோதுமையில் ஒரு "ஸாவு', பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாவு, பாலாடைக் கட்டியில் ஒரு 'ஸாவு', உலர்ந்த திராட்சை(கிஸ்மிஸ்)யில் ஒரு 'ஸாவு' என்று நாங்கள் நோன்புப் பெருநாள் ஸகாத்தை வழங்கி வந்தோம்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி(ரலி); நூல்: புகாரி 1506

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஒரு "ஸாவு' உணவை நோன்புப் பெருநாளில் வழங்கி வந்தோம். எங்களின் அன்றைய உணவு, தீட்டப்படாத கோதுமை, உலர்ந்த திராட்சை, பாலாடைக் கட்டி, பேரீச்சம் பழம் ஆகியவை தான்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி (ரலி); நூல்: புகாரி 1510

ஆக, மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களிலிருந்தும் பொதுவாக உணவுப் பொருட்கள் வழங்குவதுதான் முக்கியம் என்றும் அன்றைக்கு எது உணவாக இருந்ததோ அதைதான் வழங்கினார்கள் என்றும் புரிந்து கொள்ளலாம். எனவே நமது உணவாக எது இருக்கின்றதோ அதை பெருநாள் தர்மமாக கொடுக்க வேண்டும். ஏழைகளுக்கு உணவாக இருப்பதை நபியவர்கள் காரணம் காட்டியுள்ளதால் அந்தந்தப் பகுதிகளில் எது மக்களுக்கு உணவாக அமைந்துள்ளதோ அவற்றைக் கொடுக்கலாம். அப்போது தான் இந்த நோக்கம் நிறைவேறும். நமது உணவுப் பழக்கத்தில் முதன்மையானதாக‌ அரிசி இருப்ப‌தால் அதை ஒரு 'ஸாவு' அளவு கொடுக்கவேண்டும். இதர உணவுப் பொருள்களுக்கும் இது பொருந்தும்.

ஆனால், வெறும் அரிசியைப் பெற்றுக் கொள்பவர்களின் தேவைப் பூர்த்தியாகிவிட்டது என்று நம்மால் சொல்ல முடியாது. ஏனெனில் அரிசி சோறு சாப்பிட வேண்டுமானால் குழம்பு போன்றவை தேவைப்படுகிறது. அப்போதுதான் உணவு என்ற அந்தத் தேவைப் பூர்த்தியாகும். அன்றைய மக்கள் பேரீத்த‌ம் பழத்தை மட்டுமே உணவாக உட்கொண்டார்கள். ஆனால் வெறும் அரிசியை மட்டும் உணவாகச் சாப்பிட முடியாது. அதனால் அரிசியையும், உணவிற்கு தேவையான இதர பொருட்களையும் அதனுடன் சேர்த்து கொடுக்கலாம். அதே சமயம்,

அரிசிக்குப் பதிலாக அதற்கான பணத்தைக் கொடுக்கலாமா? என்றால்,
தாராளமாக கொடுக்கலாம். அன்றைக்குப் பண்டமாற்று முறை நடைமுறையில் இருந்ததால் உபரியாக உள்ள பேரீத்த‌ம் பழத்தைக் கொடுத்துவிட்டு கோதுமையை வாங்கிக்கொள்ள முடிந்தது. அதுபோல் உபரியாக கிடைக்கும் எந்த பொருளையும் கொடுத்து தேவையான மற்ற எந்த பொருட்களையும் வாங்கிக்கொள்ள முடியும். இன்றைக்கு நம்மிடம் உள்ள அரிசியைக் கொடுத்து விட்டு தேவையானதை எந்தக் கடையிலும் வாங்க முடியாது.

'அன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக்குங்கள்' என்பது நபிமொழி. எல்லோரும் அரிசியை தர்மமாக வழங்கும்போது அன்றைய தினம் ஏழைகள் வீட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடில்லாமலிருக்கும். அன்றைக்கு துணைத் தேவையே அதிகரித்து நிற்கும் என்பதால் பணமாக கொடுப்பது ஹதீஸுக்கு மாற்றமானதல்ல என்பதை நாம் புரிந்துக் கொள்ளலாம். எனவே தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்வதற்குரிய‌ மொத்த‌ பணமாக கொடுக்கலாம். பணமாகக் கொடுத்தால்தான், தன் குடும்பத்திற்கு தேவையான அளவுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கிக் கொள்ளவும் மக்களுக்கு வசதியாக இருக்கும். எனவே ஏழைகள் மகிழ்வோடு அந்த நாளைக் கொண்டாட அரிசியைவிடப் பணமே சிறந்ததாகும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆக, பணமாகக் கொடுத்தாலும் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் என்பதால் ரூபாயாகக் கொடுப்பதைத் தடுக்க எந்த நியாயமும் இல்லை. அப்படி பணமாகக் கொடுக்கும்போது நாம் எதைப் பிரதான‌ உணவாக உட்கொள்கிறோமோ அந்த அரிசியின் விலையைதான் அளவுகோலாகக் கொண்டு, மேலே சொன்ன அளவில் கொடுக்கவேண்டும். அல்லது அரிசியும் அதனுடன் சேர்த்து தேவையான மற்ற பொருட்களையும் கொடுக்கலாம்.

அப்படி கொடுக்கும்போது அன்றாடம் நாம் எந்த வகையான தரத்தில் உணவைப் பயன்படுத்துகிறோமோ, அந்த தரத்திலிருந்து குறைந்துவிடாமல் தரமானதாக கொடுக்கவேண்டும். சிலர், தான் மட்டும் உயர்தர அரிசியை பயன்படுத்திவிட்டு இதுபோன்ற ஸதகாவுக்காக விலை மலிவான, தரம் குறைந்த அரிசியை வாங்கி விநியோகிப்பார்கள். இது கண்டிப்பாக தவிர்க்கப்படவேண்டியதாகும். இஸ்லாம் (நாம் முந்திய பதிவில் பார்த்தபடி) இதுபோன்ற தர்மங்களை அங்கீகரிக்கவில்லை, சிறந்தவற்றையே கொடுக்கச் சொல்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

எனவே பரிவுடன் ஏழைகளுக்கு உதவுவது, குறைந்த பட்சம் அவர்களைப் பெருநாளன்று பிறரிடம் கையேந்திக் கேட்காதிருக்கச் செய்வது போன்ற உன்னத மனிதம் கலந்திருக்கும் இந்த உயரிய நோன்புப் பெருநாள் தர்மத்தின் தத்துவத்தை உணர்ந்து, உரிய நேரத்தில் அலட்சியமின்றி அனைவரும் இந்த பெருநாள் தர்மத்தை ஈந்து, நாம் நோற்ற‌ நோன்பைத் தூய்மைப்படுத்திக் கொள்வோம்! அதன்மூலம் நாம் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் இந்த‌ பண்டிகை நாளில், வறண்ட பாலையிலிருந்து ஏழை எளிய மக்களை வெளியேற்றி சோலைவன சுகந்தத்தை ந‌ம்முடன் பகிர்ந்திடச் செய்வோம்!இறைவனின் முழு திருப்பொருத்தத்தையும் நாம் அடைவோம், இன்ஷா அல்லாஹ்!