சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அவர் ஆற்றிய சுதந்திர தின உரையில் கூறியதாவது:
நாட்டில் பசி, நோய் மற்றும் வறுமையை விரட்ட 2-வது சுதந்திரப் போராட்டத்தை நடத்தவேண்டும். நவீன இந்தியாவின் அகராதியிலிருந்து வறுமையை விரட்டி, ஏழைகளை உயர்த்தவேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.
இந்திய பொருளாதார வளர்ச்சியானது இளைஞர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதாக அமையவேண்டும். நாட்டின் வளர்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கி செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. உலக அளவில் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்தபோதிலும் நாடு வளர்ச்சி கண்டுள்ளது. பொருளாதாரம் முன் எப்போதையும்விட சிறப்பாக உள்ளது. நாட்டின் வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக உள்ளது.
நாடாளுமன்றம் நாட்டு மக்களின் ஆன்மாவாக திகழ்கிறது. அதன் மீது யாரும் தாக்குதல் தொடுக்கக்கூடாது. ஊழலுக்கு எதிரான போர் என்ற பெயரில் ஜனநாயகத்தின் மீது தாக்குவதை ஏற்க முடியாது.
அசாமில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் வருத்தம் அளிக்கின்றன. அமைதியே நமது தாரக மந்திரமாக இருக்க வேண்டும். தீவிரவாதத்தை எந்த வடிவிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.