Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

கல்வித்துறையில் கருணை அடிப்படையில் பணி: 900 பேர் காத்திருப்பு


பள்ளி கல்வித்துறையில், கருணை அடிப்படையில் பணி பெற, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, 900 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். பணி ஒதுக்கீடு செய்த, 541 பேர், பணி நியமன உத்தரவு கிடைக்காமல், பல மாதங்களாக தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள், பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஊழியர்கள், பணி காலத்தில் இறந்தால், அவர்களின் வாரிசுகளில் ஒருவருக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும். இவர்களுக்கு, இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவியிடங்கள் ஒதுக்கப்படுகின்றன. 1997ம் ஆண்டு வரை, இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு, வேலை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன் பின், வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இவ்வரிசையில், இதுவரை, 1,300க்கும் மேற்பட்டோர் பேர், காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்களில், 541 பேருக்கு, தற்போது பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன், புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இதில், கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கும் பணி நியமன உத்தரவு வழங்குவதாக இருந்தது; ஆனால்,வழங்கப்படவில்லை.

பள்ளி கல்வித்துறையில், காலியாகவுள்ள, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட, பணியிடங்களுக்கு, கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

"பணி ஒதுக்கீடு செய்த எங்களுக்கும், உடனடியாக பணி நியமன உத்தரவு வழங்க வேண்டும்" என, வாரிசுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் பால்ராஜ் கூறியதாவது:

கருணை அடிப்படையில், அரசுப்பணி பெற,10 ஆண்டுகளுக்கும் மேலாக பலரும் காத்திருக்கின்றனர். தேர்வு செய்யப்பட்டோர், பணி நியமன உத்தரவு பெறாமல் தவிக்கின்றனர்.

இது குறித்து, பள்ளி கல்வித்துறை பணியாளர் தொகுதி இணை இயக்குனர் கண்ணப்பன், ஆணையாளரிடம் தெரிவித்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இப்பிரச்னையில், முதல்வர் தலையிட்டு, வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நெல்லை அரவிந்த் கண் ஆஸ்பத்திரியின் 25வது ஆண்டு வெள்ளிவிழா


நெல்லை அரவிந்த் கண் ஆஸ்பத்திரியின் 25வது ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி, டாக்டர்களுக்கான கருத்தரங்கம், பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடக்கிறது.

இதுகுறித்து அரவிந்த் கண் ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை கடந்த 88ம் ஆண்டு துவங்கப்பட்டது. அப்போது 6 டாக்டர்கள் இருந்தனர். தற்போது 550 அலுவலர்கள் உள்ளனர். இதில் 60 பேர் டாக்டர்கள். ஆஸ்பத்திரி துவங்கப்பட்ட போது ஆண்டிற்கு 6 ஆயிரம் கண் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. தற்போது ஆண்டிற்கு 45 ஆயிரம் கண் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மற்றும் கேரள மாநிலங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 25 ஆண்டுகளாக நெல்லை அரவிந்த் கண் ஆஸ்பத்திரி கண் தானம் குறித்த விழிப்புணர்வு, கண் மருத்துவத்தில் மக்களுக்கு சிறந்த சேவையாற்றி வருகிறது. கண் பார்வை இழப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. நெல்லை அரவிந்த் கண் ஆஸ்பத்திரியின் 25வது ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு கடந்த 3ம் தேதி நெல்லை ம.தி.தா.பள்ளியில் சிறப்பு மருத்துவ கண் மருத்துவ முகாம் நடந்தது. இதில் 600க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இன்று கண்காட்சி துவக்கம்:
வெள்ளிவிழாவை முன்னிட்டு "கண்ணே நலமா" மாபெரும் விழிப்புணர்வு கண்காட்சி இன்று (8ம் தேதி) துவங்குகிறது. கண்காட்சியை மேயர் விஜிலா சத்தியானந்த் துவக்கிவைக்கிறார். கண்காட்சியில் பொது அறிவு விஷயங்கள், கண் பாதுகாப்பு, கண் நோய்கள், கண் நோய்களை தடுக்கும் முறைகள், கண் பாதுகாப்பு குறித்த விளக்கவுரை, நவீன பரிசோதனை கருவிகள், பார்வை குறைபாட்டிற்கான நவீன சிகிச்சை முறைகள், கருவிழியில் ஏற்படும் பிரச்னைகள், கண் தானம் மற்றும் கண் வங்கியின் முக்கியத்துவம், கண்ணிற்கும், மூளைக்கும் ஏற்படும் பிரச்னைகள், சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு மற்றும் கிட்டப்பார்வையில் விழித்திரையில் ஏற்படும் மாற்றங்கள், பாதிப்புகள், குழந்தைகள் கண் நலன், கண் அழுத்த நோய் குறித்த அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

40 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கண் தானம், கண் பாதுகாப்பு குறித்த போட்டிகளில் பங்கேற்கின்றனர். பேச்சுப் போட்டி, கட்டுரை, வினாடி-வினா, ஓவியம் போட்டிகள் நடக்கின்றன. போட்டியில் வெற்றி
பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

வரும் 10ம் தேதி அரவிந்த் கண் ஆஸ்பத்திரியில் காலை 9.30 மணிக்கு டாக்டர்களுக்கான கருத்தரங்கம் நடக்கிறது. இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர்கள் கலந்து கொள்கின்றனர். 16ம் தேதி வெள்ளிவிழா நிகழ்ச்சி நிறைவு விழா நடக்கிறது. இதில் மதுரை தொழிலதிபர் கருமுத்து கண்ணன், டி.என்.பி.எஸ்.சி., முன்னாள் உறுப்பினர் பெருமாள்சாமி, ஆய்குடி அமர்சேவா சங்கம் சேர்மன் ராமகிருஷ்ணன், வ.உ.சி.கல்லூரி தாளாளர் ஏ.பி.சி.வி.சொக்கலிங்கம், ஐ.எம்.ஏ., தலைவர் டாக்டர் விஜயகுமார், சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் குணசிங் செல்லத்துரை உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாறு அரவிந்த் ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தேசிய நதிநீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வற்றாத நதியான தாமிரபரணியை மேம்படுத்த நடவடிக்கை

தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் மற்றும் மாநகர காவல் துறையினர் இணைந்து கடந்த ஆண்டு சனிக்கிழமை தோறும் தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தினர். இந்த ஆண்டு முதற்கட்டமாக தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம், பாளை., சேவியர் கல்வியியல் கல்லூரி சார்பில் தாமிரபரணியை சுத்தப்படுத்தும் பணி சிந்துபூந்துறையில் நேற்று துவங்கியது.

 நிகழ்ச்சிக்கு பாளை., சேவியர் கலைமனைகளின் அதிபர் பிரிட்டோ வின்சென்ட் தலைமை வகித்தார். நெல்லை தாமிரபரணி பாதுகாப்பு இயக்க தலைவர் ஜோசப் கென்னடி முன்னிலை வகித்தார். கலெக்டர் சமயமூர்த்தி தாமிரபரணியை சுத்தப்படுத்தும் பணியை துவக்கி வைத்து பேசியதாவது;
தாமிரபரணி தென் தமிழகத்தின் புண்ணிய நதியாகும். இந்த நதி பெரிய பொதிகையில் உற்பத்தியாகி நீண்ட தூரம் பயணம் செய்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தாமிரபரணி ஆற்றில் 8 அணைகள் உள்ளன. இதில் 7 அணைகள் சங்க காலத்திலும், ஒரே ஒரு அணி பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலும் கட்டப்பட்டதாகும். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்க 7 அணைகள் கட்டப்பட்டன. இத்தகைய பெருமைமிக்க நதியை தூய்மையாக பராமரிக்க வேண்டியது மாநகர மக்களின் பொறுப்பாகும். தாமிரபரணியை 3 நாட்களில் 5 முதல் 10 ஏக்கர் வரை சுத்தப்படுத்த முடியும். ஆற்றை சுத்தப்படுத்துவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தாமிரபரணி நதியை அனைவரும் ஒன்றுபட்டு பாதுகாக்க வேண்டும்.

கங்கை நதியை தேசிய நதிநீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்து பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதுபோல் தாமிரபரணி நதியை தேசிய நதி நீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பாதுகாக்க திட்ட விவர அறிக்கை தயார் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். தாமிரபரணியை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. எதிர்கால ஆசிரியர்களான நீங்கள், கிராமம் கிராமமாக சென்று அங்குள்ள மக்களிடையே சுகாதாரம் குறித்து கல்வி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் அனைவரும் சுகாதாரத்தை மேம்படுத்தி நலமுடன் வாழ முடியும்.இவ்வாறு கலெக்டர் சமயமூர்த்தி பேசினார்.

நிகழ்ச்சியில் சேவியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் தாமஸ் அலெக்ஸ், மாநகர போலீஸ் உதவி கமிஷனர் லோகநாதன், பொதுப்பணித்துறை இன்ஜினியர் முத்துபாண்டி, கவுன்சிலர் பரணி சங்கரலிங்கம், நெல்லை டவுன் அடைக்கல மாதா ஆலய பங்கு தந்தை அந்தோணி குரூஸ், தாமிரபரணி பாதுகாப்பு இயக்க துணை தலைவர் ஜாண்சன், தே.மு.தி.க., நெல்லை தொகுதி பொறுப்பாளர் ஆனந்தமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து சேவியர் கல்வியியல் கல்லூரி மாணவர்கள், பெண்கள் மற்றும் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் தாமிரபரணி ஆற்றில் உள்ள குப்பை, புதர், முட்செடி போன்றவற்றை அகற்றி, ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியை 9ம் தேதி மதியம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் ராஜராஜன் பணியை நிறைவு செய்து வைக்கிறார்.