கட்சி மேலிடத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதை அடுத்து, பா.ஜ., எம்.பி.,யான, ராம் ஜெத்மலானி, கட்சியிலிருந்து நேற்று "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
பா.ஜ., சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவரும், மூத்த சட்ட நிபுணருமான, ராம் ஜெத்மலானி, சமீபகாலமாக, பா.ஜ., மேலிடத்துக்கு எதிராக, குரல் கொடுத்து வந்தார். "ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய, நிதின் கட்காரி, பா.ஜ., தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ரஞ்சித் சின்கா, சி.பி.ஐ., இயக்குனராக நியமிக்கப்பட்டதை, பா.ஜ., தலைவர்கள் எதிர்த்தது கண்டனத்துக்குரியது' என, அவர் கருத்து தெரிவித்தார்.
இதனால், பா.ஜ., தலைவர்கள், ராம் ஜெத்மலானி மீது, கடும் அதிருப்தி அடைந்தனர். அவர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தனர். "முடிந்தால், என் மீது நடவடிக்கை எடுக்கட்டும்' என, பா.ஜ., மேலிடத்துக்கு, அவர், சவால் விடுத்திருந்தார்.இந்நிலையில், கட்சி கட்டுப்பாட்டை மீறி, கருத்து தெரிவித்ததற்காக, கட்சியிலிருந்து, ராம் ஜெத்மலானி சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும், இந்த நடவடிக்கை, உடனடியாக அமலுக்கு வருவதாகவும், பா.ஜ., சார்பில், நேற்று அறிவிக்கப்பட்டது.ராம் ஜெத்மலானி, காங்கிரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாகவும், பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.