பொதுவாழ்வில் நேர்மைக்கு நிரூபணமாய் விளங்கிய காயிதே மில்லத் அவர்கள் சொந்த வாழ்வில் எளிமைக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தார்.
குரோம்பேட்டையில் ஒரு சிறிய வீடு. வந்தவர்களை அமரவைக்க போதுமான அறையணிகள் இருக்காது. குரோம்பேட்டையில் இருந்து மின்சார ரயிலில் புறப்பட்டு, கடற்கரை ரயில் நிலையத்தில் இறங்கி, ரிக் ஷாவில் ஏறி மண்ணடி கட்சி அலுவலகம் செல்வார்.
அவருக்கு ஒரு காரை வாங்கித் தரப் பலரும் முயன்றனர். அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு முறை மலேசியா சென்று ஒரு அன்பர் வீட்டில் தங்கியிருந்தபோது, அவர் காயிதே மில்லத்திடம் ஒரு உதவி கேட்டார். “ஐயா என்னிடம் வெளிநாட்டுக் கார் உள்ளது. அதைத் தங்கள் வீட்டில் நிறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டும். நான் சென்னை வரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும் என்பதால் இந்த உதவியைக் கோருகிறேன்” என்றார். அதற்கு என் வீட்டில் கார் கொட்டகை இல்லையே என்றார் காயிதே மில்லத். “கார் கொட்டகையை நான் கட்டித் தருகிறேன்” என்றார் மலேசிய அன்பர். நேரடியாக காரை பரிசளித்தால் காயிதே மில்லத் வாங்கிக் கொள்ள மறுத்து விடுவார் என்பதற்காகவே அவர் சுற்றி வளைத்துப் பேசுகிறார் என்பதைப் புரிந்து கொண்ட காயிதே மில்லத் கண்டிப்புடன் அவரது வேண்டுகோளை நிராகரித்து விட்டார்.
கேரளாவில் ஒருமுறை அங்குள்ள கட்சிக்காரர்கள் ஒரு காரை வாங்கி சாவியை காயிதே மில்லத் அவர்களின் கையிலேயே கொடுத்து விட்டார்கள். ஆனால் காயிதே மில்லத் அங்குள்ள இஸ்லாமிய கல்லூரி ஒன்றின் உபயோகத்திற்கு அந்தக் காரை அங்கேயே கொடுத்து விட்டார்.
ஒருமுறை கட்சி அலுவலகத்துக்கு வந்த காயிதே மில்லத் அவர்கள் அங்கிருந்த அலுவலகப் பொறுப்பாளரிடம் ஒரு உறையைக் கொடுத்து பையில் இருந்து இரண்டு அணாவையும் கொடுத்து உரிய தபால் தலைகளை ஒட்டி அஞ்சலில் சேர்த்து விடுமாறு கூறி இருக்கிறார். உடனே அலுவலகப் பொறுப்பாளர் இதனை அலுவலகச் செலவிலேயே அனுப்பலாமே எனக் கேட்டிருக்கிறார். அதற்கு காயிதே மில்லத் அவர்கள் இது எனது சகோதரருக்கு எழுதுகின்ற கடிதமாகையால் அலுவலகப் பணத்தை இதற்கு செலவழிக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். அலுவலகப் பொறுப்பாளர் உடனே, தலைவரின் சகோதரரும் கட்சிப் பொறுப்பில் இருப்பவர்தானே, எனவே கட்சிப் பணத்தை செலவு செய்வதில் என்ன தவறு எனக் கேட்டிருக்கிறார். உடனே காயிதே மில்லத் அவர்கள், இந்தக் கடிதத்தில் நான் கட்சி விஷயங்களை எழுதவில்லை. குடும்ப விஷயங்களை எழுதி இருக்கிறேன். எனவே கட்சிப் பணத்தை இதற்குச் செலவழிக்கக் கூடாது. நான் கொடுத்த இரண்டானாவை அஞ்சல் தலைகளை ஒட்டி அனுப்பி விடுங்கள் என கண்டிப்புடன் கூறிவிட்டார்.
இதுபோல் காயிதே மில்லத் அவர்களின் வாழ்வில் எத்தனையோ நிகழ்வுகள். நபிகள் நாயகத்துக்குப் பின் வந்த நான்கு கலிபாக்கள் வாழ்ந்து காட்டிய நேர்மையான எளிமையான வாழ்க்கையை தானும் வாழ முயன்று வெற்றி கண்டவர் காயிதே மில்லத் அவர்கள்.
காயித் என்றால் வழிகாட்டி. சாயிக் என்றாலும் அரபியில் வழிகாட்டிதான். ஒட்டகத்தின் முதுகில் ஏறி அதை வழி நடத்துபவனுக்குப் பெயர் சாயிக். ஆனால் ஒட்டகத்தின் மூக்கணாங் கயிற்றைத் தன் கையிலே பற்றிக் கொண்டு, தான் முன்னால் நடந்து, பாதையில் உள்ள கரடு முரடுகளில் ஒட்டகத்தின் கால் இடறி விடாமல் அதை வழிநடத்துபவருக்குப் பெயர்தான் காயித். இன்று அரசியலில் சாயிக்குகளுக்குப் பஞ்சமே இல்லை. காயிதே களுக்குத்தான் பஞ்சம் !