"சர்வதேச அளவில் சமுதாயத்தை மாற்றும் அதிக சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வியாகும்,'' என, கோவா கவர்னர் பரத்வீர் வாஞ்சூ பேசினார்.கோவை, மதுக்கரையை அடுத்த நவக்கரையிலுள்ள ஏ.ஜே.கே., கல்லூரியின் மூன்றாவது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. கோவா கவர்னர் பரத்வீர் வாஞ்சூ பேசியதாவது:தமிழகம் கல்வி, கலாசாரம் மற்றும் பண்பாட்டில், மிகப்பெரிய அத்தியாயம் கொண்டதாகும். பல்வேறு துறைகளிலும் திறமையானவர்களை உருவாக்குவதில், நமது நாட்டில், தமிழகம் முன்னோடியாக உள்ளது. அதுபோல, இங்குள்ள கல்வி நிறுவனங்கள், பல்வேறு மாநிலத்தவரையும் கவர்ந்துள்ளது.கல்வி என்பது அறிவுக்கான ஒரு முதலீடாகும். அதன்மூலம் சிறந்த பலன்களை அடையலாம்.
நமது நாட்டின் கல்வி முறை, குரு - சிஷ்யன் முறையை அடிப்படையாக கொண்டதாகும். இம்முறைதான், தற்போது வகுப்பறை நடைமுறையாக உள்ளது. மருத்துவம், அறிவியல் உள்பட பல்வேறு துறைகளிலும் பயில, சர்வதேச அளவில், மாணவர்கள், நம் நாட்டுக்கு வந்தனர். தொடர்ந்து ஆங்கிலேயர் காலத்தில், பாரம்பரிய முறை மாற்றம் பெற்றது. மேற்கத்திய கல்வி முறை, நம்மை ஆட்கொண்டுள்ளது.கல்வி முறைதான், ஒரு அரசின் வெற்றிக்கு காரணமாகிறது. இதற்கு, நமது நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளார். இவர், நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, விவசாயம் சார்ந்த பொருளாதார மேம்பாட்டை, தொழில்சார்ந்த பொரு ளாதார மேம்பாட்டுக்கு மாற்றம் கொண்டு வர, பாடுபட்டார். அவரது காலத்தில்தான், ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்., போன்றவை கொண்டு வரப்பட்டன.சர்வதேச அளவில், சமுதாயத்தை மாற்ற, கல்வி என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கருவியாகும். நமது அனைத்து விதமான கல்வி முறைகள் குறித்து, ஆராய்ந்து, மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, ஆரம்ப கல்வி முறையிலேயே, இதனை கொண்டு வரவேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து முதுகலை மற்றும் இளங்கலையில், பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு, பட்டச் சான்றிதழை வழங்கினார். பாரதியார் பல்கலை துணை வேந்தர் ஜேம்ஸ் பிச்சை பேசுகையில், ""கற்பதை என்றும் நிறுத்தக்கூடாது. தமிழக முதல்வரின் எண்ணப்பட்டி, வரும் பத்து ஆண்டுகளில், 20 சதவீதம் பேர் உயர்கல்வி கற்கும் நிலையை உருவாக்க பாடுபடவேண்டும்,'' என்றார்.முன்னதாக, கல்லூரி அறங்காவலர் லால்மோகன் வரவேற்றார். கல்லூரி செயலாளர் அஜீத்குமார் தலைமை வகித்தார்.