இரண்டு கைகள் இல்லாத மாற்று திறனாளிகள் எளிதாக ஓட்டிச்செல்லும் வகையில் 3 சக்கர மோட்டார் வாகனம் ஒன்றை என்ஜினீயரிங் மாணவர் ஒருவர் கண்டு பிடித்து கோவை கல்லூரி கண்காட்சியில் செயல் விளக்கம் அளித்தார்.
கைகள் இல்லாமல்...
கால்களை இழந்த மாற்று திறனாளிகள் இருகைகளை கொண்டு, 3 சக்கர சைக்கிள், மற்றும் 3 சக்கர மோட்டார் வாகனங்களை இயக்கி வாழ்க்கையில் நம்பிக்கை பயணம் மேற்கொள்கின்றனர். இதுபோன்று ஒரு கையை இழந்தவரும், செயற்கையாக கையை பொருத்திக் கொண்டு வாகனங்களை ஓட்ட முயற்சிப்பது உண்டு.
இதில் பலர் தோற்று போவதால் வேறு வழியில்லாமல் தவிக்கும் நிலை ஏற்படும். இதைவிட இருகைகளையும் இழந்தவர்களால் எதுவுமே முடியால் முடங்கி கிடக்கும் நிலையே ஏற்படுகிறது. ஆகவே ஒரு கையில்லாத, இரு கைகள் இல்லாத மாற்று திறனாளிகள் எளிதாக வாகனத்தில் சென்று, வாழ்க்கை பயணத்தை இன்பமாய் கழிக்க வழியை ஏற்படுத்தி உள்ளார். சென்னையை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தருண்ரெட்டி.
முதலிடம் பெற்றது
இவர் கோவை சி.ஐ.டி தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த தேசிய தொழில்நுட்ப கண்காட்சியில் மெக்கானிக் துறை சார்பில் தங்களுடைய கண்டுபிடிப்பான கைகள் இல்லாமல் இயக்கும் 3 சக்கர மோட்டார் வாகனத்தை காட்டி செயல் விளக்கம் அளித்தார். இதனால் மொத்தம் கலந்து கொண்ட 60 பேரில் இவருடைய கண்டுபிடிப்பு முதல் இடத்தை பிடித்தது. அதற்கு ரொக்க பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு குறித்து தினத்தந்தி நிருபரிடம் அவர்கள் கூறியதாவது:–
மாற்று திறனாளிகள் ஓட்டுகின்ற 3 சக்கர மோட்டார் வாகனத்தை வாங்கி, அதில் கைகள் இல்லாத மாற்று திறனாளிகள் ஓட்டுவதற்காக புதிய மெக்கானிசம் முறையில் வடிவமைத்தேன். இதற்கு ஹேண்ட் ப்ரீ பைக் (கைகள் பிடிக்காமல் ஓட்டுதல்) என்று பெயர். கைகளுக்கு வேலை இல்லாததால் அனைத்தையும் கால்கள் மூலம் இயக்கும்படி செய்துள்ளேன்.
செயின் இணைப்பு
இதில் பிரேக் பிடிப்பது, ஆக்ஸிலேட்டரை அழுத்துவது, இடபுறம், வலபுறம் திருப்பது, நேராக செலுத்துதல் போன்ற செயல்பாடுகளை செயின் இணைப்பு மூலம் செய்யப்பட்டு உள்ளது. இது தவிர ஹெட்லைட், இண்டிகேட்டர், ஹாரன் போன்றவற்றை கால்கள் மூலம் செய்வதற்கு ஏற்ப சுவிட்ச் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எனக்கு உறுதுணையாக என்னுடன் படிக்கும் முத்துக்குமார் இருந்து வருகிறார்.
அடுத்த கட்டமாக முற்றிலும் தானியங்கி முறையில் இயக்க சென்சார் முறையை பயன்படுத்த உள்ளோம். இதை கண்டுபிடிக்க 10 மாதங்கள் ஆகியது. இதுபோன்ற கண்டுபிடிப்பு மாற்று திறனாளிகளுக்கு புது நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதால் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
அதிக மைலேஜ் கருவி
மேலும் இந்த கண்டுபிடிப்பு குறித்து காப்புரிமை பெற விண்ணப்பித்து உள்ளோம். இதுபோன்ற கண்டுபிடிப்பை உலக அளவில் யாரும் கண்டுபிடிக்க வில்லை. ஆகையால் இந்த மெக்கானிசம் எங்களின் திறமைக்கு கிடைத்த பரிசாக கருதுகிறோம். இந்த கண்டுபிடிப்பை நாங்கள் கோவையில் நடந்த தேசிய தொழில்நுட்ப கண்காட்சியில் சமர்ப்பித்த போது எங்களுக்கு முதல் பரிசு கிடைத்தது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த 3 சக்கர மோட்டார் சைக்கிள் வாகனத்தில் கோவையை சேர்ந்த வர்க்கீஸ், ராஜன் ஆகியோரது கண்டுபிடிப்பான வி.மெர்ஜ் என்ற அதிக மைலேஜ், புகை மாசு குறைக்கும் கருவியை பொருத்தி உள்ளோம். இதனால் எங்கள் வாகனம் தற்போதைய மைலேஜில் இருந்து 25 கிலோ மீட்டர் வரை கூடுதலாக கிடைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.