Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

வரும் கல்வியாண்டில் தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே பாடத்திட்டம்


அனைத்துக் கல்லூரிகளிலும், ஒரே பாடத் திட்டத்தை அமல் செய்யும் முறை, வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான, பணிகளை, பல்கலைக் கழக பாடத் திட்டக் குழுக்கள் துவங்கியுள்ளன.

தமிழகத்தில், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட, 10 பல்கலைக் கழகங்களில், பாடத் திட்ட வளர்ச்சி குழு அமைக்கப்பட உள்ளது. பல்கலைக்கழக பாடத் திட்டங்களை, உலக தரத்திற்கு உயர்த்துவதே, இக்குழுவின் நோக்கம். ஒரு பல்கலைக்கு, ஒரு கோடி என, 10 கோடி ரூபாய், இதற்காக, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், சமூக அறிவியல், உயிரி அறிவியல், உயர் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், கணினி மற்றும் வர்த்தக அறிவியல், இந்திய மொழி, அயல்நாட்டு மொழி உள்ளிட்ட, 10 துறைகளின் கீழ் உள்ள பாடத் திட்டங்களில், என்னென்ன மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்பது குறித்து, இக்குழு ஆராயும்.

ஒவ்வொரு துறைக்கும் பேராசிரியர் குழு அமைக்கப்பட உள்ளது. இக்குழு, இன்றைய வேலை வாய்ப்புகளுக்கேற்ப, பாடத் திட்டத்தில் கொண்டு வர வேண்டிய மாற்றங்கள் குறித்து அறிக்கையை சமர்ப்பிக்கும். பல்கலைக்கழக துறை பாடத் திட்டங்களை பதிவு செய்யும் வகையில், தனி இணையதளம் அமைக்கப்பட உள்ளது.

மாற்றம் செய்யப்படும் பாடத் திட்டங்கள், இதில் பதிவு செய்யப்படும். இந்த இணையதளம், உலக அளவில் உள்ள பேராசிரியர்களை ஒருங்கிணைக்கிறது. இணையதள தொடர்பு மூலம், துறை பேராசிரியர்கள் வெளிநாட்டில் உள்ள அதே துறை பேராசிரியர்களுடன் கலந்துரையாடி, கல்வி கற்கும் முறைகள், பாடத்திட்டம் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்து விவாதித்து, சர்வதேச தரத்திற்கு கல்வி மேம்பாட்டு வழிகளை மேற்கொள்வர்.

உலகளவில் துறை வாரியாக உள்ள பேராசிரியர்கள் பற்றிய, அடிப்படை புள்ளிவிவரங்களும் சேகரிக்கப்படுகிறது. ஒரு ஊரிலிருந்து, மற்றொரு ஊருக்கு இடமாறும் மாணவர்கள், தங்கள் படிப்பை தொடர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. பாடத்திட்டங்களே, இதற்கு அடிப்படையாக அமைகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து பாடத் திட்டங்களையும் முறைப்படுத்தி, ஒரே பாடத் திட்டம் கொண்டு வரப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே, ஒரே பாடத்திட்ட முறையால், மாணவர்கள் பெரும் பயனடைவர். தொழில் வல்லுனர்கள், வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், நூலகர்கள், விளையாட்டு இயக்குனர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, பாடத்திட்ட மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை வழங்க உள்ளனர்.

சென்னை பல்கலைக்கழக பாடத்திட்ட வளர்ச்சி குழு இயக்குனர் சீனிவாசன் கூறுகையில், "சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் பாடத் திட்டத்தால், மாணவர்களுக்கு உலக தரமான கல்வி கிடைக்கிறது. வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இடமாற்றத்தில் செல்லும் மாணவர்கள், கல்வி தொடர உதவும். அடுத்தாண்டு முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வரும், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக