Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 25 டிசம்பர், 2012

குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்... தொலைக்காட்சிகளுக்கு கிடுக்கிப்பிடி


"குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில், வயதுக்கு வந்தோரின் நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் வகையில், குழந்தைகள் நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கூடாது" என, தொலைக்காட்சி சேனல்களுக்கு, ஒளிபரப்பு குறை தீர்வு கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

தொலைக்காட்சி சேனல்களில், நெடுந்தொடர்கள் என்ற பெயரில் கலாசார சீர்கேடு; ரியாலிட்டி ஷோ என்ற பெயரில், பங்கேற்பவர்களை வேதனைப்படுத்துவது என, விமர்சனங்கள் எழுந்து கொண்டு இருக்கின்றன. பொழுதுபோக்கு சேனல்களில், குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், குழந்தைகளின் வயதுக்கு மீறிய நடவடிக்கைகளில், ஈடுபடுவது போல் காட்சிகள் வருவது கவலையளிக்கிறது.

வயதுக்கு வந்தோரின் நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் வகையில், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்டு, காதல் பாட்டுக்கு நடனம் ஆடுவது, பாட்டுப் பாடுவது போன்றவற்றில் பங்கேற்கச் செய்கின்றனர். பெரியவர்களுக்குரிய பாடலையும், நடனத்தையும் அதே போன்றே குழந்தைகள் பாடுவதும், ஆடுவதும் கவலையளிக்கிறது.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் சேனல்களில் வருவதைத் தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பு சார்பில், மத்திய அரசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற புகார்களை களைவதற்காகவும், சேனல்களில் என்ன மாதிரியான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பலாம் என்பதற்கான ஆலோசனை வழங்குவதற்காகவும், ஒளிபரப்பு தொடர்பான குறைகள் தீர்வு கவுன்சில் அமைக்கப்பட்டது.

அனைத்து சேனல்கள் உறுப்பினர்களாக உள்ள, இந்திய ஒளிபரப்பு அறக்கட்டளையின் சார்பில் அமைக்கப்பட்டது தான் இந்த கவுன்சில். இந்த கவுன்சில், அனைத்து பொழுதுபோக்கு சேனல்களுக்கும் விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியிருப்பதாவது:

குழந்தைகள் தொடர்பான நிகழ்ச்சிகளில், குறிப்பாக, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், வயதுக்கு மீறிய செயல்களில், குழந்தைகள் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும். வயதுக்கு வந்தோர் சம்பந்தப்பட்ட பாடல், ஆடல் காட்சிகளை போல், பிரதிபலிக்கும் வகையில் குழந்தைகள் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும்.

காதல் பாடல், குத்துப் பாட்டு போன்றவற்றில் குழந்தைகள் ஆடுவதையோ, பாடுவதையோ அனுமதிக்கக் கூடாது. பெரியவர்களை போன்று, குழந்தைகள் உடைகளை அணிவது, ஒப்பனை செய்வதைத் தவிர்க்க வேண்டும். வயது வந்தோர் மட்டுமே பங்கேற்கக் கூடிய நிகழ்ச்சிகளில், 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பங்கேற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மன பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மற்றும் அவர்களின் தன்னம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கக் கூடிய ரியாலிட்டி ஷோக்களில், குழந்தைகள் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும். நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குழந்தைகளின் படிப்புக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில், நிகழ்ச்சிகளின் தயாரிப்புகளை வைத்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக அவர்களின் மன நலம், உடல் நலம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, தொலைக்காட்சி சேனல்களுக்கு, கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததால் கடும் பாதிப்பு கருகிய பயிர்களுடன் விவசாயிகள் கண்ணீர்


பருவ மழை பொய்த்ததால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கருகிய பயிர்களுடன் நெல்லையில் விவசாயிகள் குவிந்தனர்.

நெல்லையில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் திருவேங்கடம் புதுப்பட்டி பகுதி விவசாயிகள் பலர் கருகிய நெற் பயிர்களுடன் முற்றுகையிட்டனர். தொடர்ந்து அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
எங்கள் பகுதி விவசாயிகள் மானாவாரி விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலத்தில் மக்கா சோளம், பருப்பு வகைகள் உட்பட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தது. பருவ மழை பொய்த்ததால் பயிர்கள் வாடி கருகி விட்டன.

வயல்களில் இரண்டு முறை விதை விதைத்தும் பயிராகி மகசூல் வருவதற்கு முன்பே பயிர்கள் அனைத்தும் கருகி விட்டன. ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. இதனால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்ளுக்கு அரசின் வறட்சி நிவாரண நிதியை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் பாசிச சக்திகளின் பின்னணியில் நடைபெற்ற போராட்டத்தில் காயமுற்ற போலீஸ் சுபாஷ் தோமர் மரணம்


புதுடெல்லியில் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டதற்கு எதிராக என்ற போர்வையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் காயம் அடைந்த போலீசார் மரணம் அடைந்தார்.

கடந்த 16ந் தேதி அன்று டெல்லியில் ஓடும் பஸ்சில் 6 பேர் கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட மருத்துவ மாணவி, உயிருக்கு ஆபத்தான நிலையில் டெல்லி சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு என்ற போர்வையில் பாசிச சக்திகளின் பின்னணியில் டெல்லியில் இது தொடர்பாக தொடர்ந்து  பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்தது .

புதுடெல்லியில்,   இந்தியா கேட் பகுதியில் போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வெடித்தும்  போராட்ட குழுவினரை விரட்ட முயன்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் இரு தரப்பிலும் பலர் காயம் அடைந்தனர்.

இதில் சுபாஷ் தோமர் என்ற காவலரும் பலத்த காயம் அடைந்தார். உடனே அவர் மீட்கப்பட்டு டெல்லியில் உள்ள மனோகர் லோகியா என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும், உணர்வு திரும்பாத நிலையில் உள்ள காவலரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுபாஷ் தோமர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போராட்டத்தில் போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் விபரம் வீடியோ ஆதாரங்கள் மூலம் பெறப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், போலீசாரை காயப்படுத்தியவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இவரது மரணம் குறித்து மறைந்த போலீஸ்காரர் மகன் தீபக் கூறுகையில்: என்து தந்தை பொறுப்பானவர். இவர் மாணவர்களின் அமைதியை தான் நிலைநாட்ட முயற்சித்தார், ஆனால் அவர் மீது கொடும் தாக்குதல் நடத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். இவர் மரணத்திற்கு, போராட்டக்காரர்களே முழுப்பொறுப்பு. இத்துடன் இவரை போலீசாரை தவிர யாரும் வந்து ஆறுதல் கூற வரவில்லை. இது மிகவும் கவலையளித்தது. எனது தந்தையை திருப்பி தாருங்கள் என்றார் கண்ணீருடன்.