படிப்பா? கல்வி நிறுவனமா? சுய விருப்பமா? வேலை வாய்ப்பா? உள்ளூரிலேயே படிப்பதா அல்லது வெளிநாடு செல்வதா? இதுபோன்ற கேள்விகளை தமக்குள் போட்டு குடைந்துகொள்ளும் மாணவர்கள் இன்று ஏராளம். ஆனால் இதுபோன்ற கேள்விகளுக்கு நேரடி பதில் இல்லை என்றே கூறலாம்.
இன்றைய உலகில், ஒரு தனிப்பட்ட நபர் தனது 30 முதல் 40 வருட பணி வாழ்க்கையில், குறைந்தது 3 முதல் 4 வெவ்வேறான தொழில்களில் ஈடுபடும் வாய்ப்புகள் அதிகம். எனவே, ஒருவருக்கு புதிய விஷயங்களை விரைவாக கற்றுக்கொள்ளும் திறனும், திறன் மாற்றுத் தன்மைகளும் அவசியம் தேவைப்படுகின்றன.
உயர்கல்வியில், எந்தப் படிப்பை தேர்ந்தெடுப்பது என்பதில், உங்களுக்குள் ஒரு போராட்டமே நடக்கும். அந்த சூழலில், உங்களுக்கு பிடிக்காத விஷயத்தை உடனடியாக நிராகரித்து விடுங்கள்.
கல்லூரியா - படிப்பா? எது முக்கியம்?
ஒரு பெயர்பெற்ற கல்லூரியில் இடம் கிடைக்கிறது என்பதற்காக, ஏதோ ஒரு விரும்பாத பாடப்பிரிவில் சேர்ந்து படிப்பதா? அல்லது மிகவும் விரும்பும் ஒரு படிப்பை, அது சாதாரண கல்லூரியில் கிடைத்தாலும், அதில் சேர்ந்து படிப்பதா? என்ற பெரிய குழப்பம் ஏற்படும்.
இதற்கான பொதுவான அறிவுரை என்னவெனில், பி.இ/எம்.பி.ஏ/எம்.சி.ஏ போன்ற, உடனடி வேலைவாய்ப்புக்கான தொழில் படிப்புகளைப் பொறுத்தவரை, கல்லூரியே முக்கியம் என்பதுதான் அது. ஆனாலும், சிலர் இன்னும் வேறுமாதிரியாக கூறுகிறார்கள். தொழிற் படிப்புகளுக்கு மட்டுமல்ல, பி.ஏ போன்ற கலை படிப்புகளுக்குமே, கல்லூரியின் புகழ் வலு சேர்க்கிறது என்கிறார்கள். அதேசமயத்தில், ஒரு புகழ்வாய்ந்த கல்லூரியில் படித்தாலும், படிக்கும் பாடத்தில் சுத்தமாக ஆர்வமோ, விருப்பமோ இல்லாதபட்சத்தில், பாடப்பிரிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.
ஆர்வமா, வேலை வாய்ப்பா? எது முக்கியம்?
நமது சமூகத்தில் பொதுவாக, வேலைவாய்ப்புகளை வைத்தே, ஒருவரின் படிப்பு தேர்வு அமைகிறது. தனிமனித ஆர்வத்திற்கும், திறமைக்கும் பொதுவாக முக்கியத்துவம் கிடைப்பதில்லை. ஆனால், ஒருவர் என்னதான் அதிக சம்பளத்திற்கு வேலை பார்த்தாலும், செய்யும் பணியில் ஒருவருக்கு ஈடுபாடும், திருப்தியும் இருப்பது முக்கியம். சிலரின் படிப்பிற்கும், அவர் செய்யும் தொழிலுக்கும் சம்பந்தமே இருக்காது.
ஒருவர், கணிப்பொறி அறிவியலில் எம்.டெக் படித்துவிட்டு, ஸ்போர்ட்ஸ் அகடமி நடத்துகிறார். என் வாழ்வில் நான் 10 ஆண்டுகளை கணினி துறையில் வீணடித்து விட்டேனே என்று புலம்புகிறார். வரலாற்றில் அதிக ஆர்வமுடைய ஒருவர், அதிலேயே எம்.பில் வரை படித்துவிட்டு, வேலைவாய்ப்பு குறைவு என்று தெரிந்ததும், மீண்டும் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டுள்ளார். அதிக வேலைவாய்ப்பு என்பதுதான் அவரின் தாவலுக்கு காரணம்.
எனவே, சிறந்த வேலைவாய்ப்புகளைக் கொண்ட படிப்பை நோக்கி நமது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு, அதில் நமது திறமையை எவ்வாறு நிரூபிக்கலாம் என்பதை திட்டமிட வேண்டும் அல்லது நமக்கு விருப்பமான துறையில், தற்போதைக்கு வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ள நிலையில், எந்தவகையில் புதிய வேலைவாய்ப்புகளை நாமே சுயமாக உருவாக்கிக் கொள்ளலாம் என்பதையும், இளையதலைமுறையினர் புதுமையாக யோசிக்கப் பழக வேண்டும். ஏனெனில், இன்றைய கார்பரேட் உலகம் வேறு. அந்த காலம் வேறு. இன்றைய நிலையில், புதுமையான ஒவ்வொரு முயற்சிக்கும் பணம் கிடைக்கும். எனவே, சூழலுக்கு ஏற்றவாறு நம்மை நாம் தகவமைத்துக் கொள்ள வேண்டும்.
இளநிலைப் படிப்பிலேயே ஸ்பெஷலைசேஷன் தேவையா?
புதிய தனியார் பல்கலைக்கழகங்களின் வருகையால், வழக்கமான பி.ஏ/பி.எஸ்சி போன்ற படிப்புகள் BS, BBA, BIFA, BSc (Tech) போன்ற படிப்புகளால் பின்தள்ளப்பட்டுவிட்டன. இளநிலை பட்டப்படிப்பிலேயே, Applied Nutrition, Biotechnology, Nanotechnology போன்ற படிப்புகள் வழங்கப்படுகின்றன. கார்பரேட் யுகத்தில், ஒருவருக்கு ஆரம்ப நிலையிலேயே ஸ்பெஷலைசேஷன் தேவைப்படுகிறது மற்றும் தொழில்துறை தேவைகளுக்கேற்ப தனது திறமையை தகவமைத்துக் கொள்ளவேண்டியுள்ளது. அதேசமயத்தில் இதுதொடர்பாக வேறு கருத்தும் உள்ளது.
BBA, BBS, BMS போன்ற படிப்புகளை முடித்த மாணவர்கள், Admin, Secretarial, coordination, sales and human resources job போன்ற பணி நிலைகளில் நேரடியாக நுழையும் தகுதியைப் பெறுகிறார்கள். ஆனால், சில வருட பணி அனுபவத்திற்கு பிறகு, பதவி உயர்வு என்ற நிலை வருகையில், முதுநிலைப் படிப்பு தகுதி தேவைப்படுகிறது. எனவே, அந்த வகையிலும் திட்டமிடுதல் இருக்க வேண்டும். மேலும், ஸ்பெஷலைசேஷன் படிப்பை பொறுத்தவரை, ஒருவரின் தனிப்பட்ட ஆர்வம், அதற்கான வேலைவாய்ப்பு மற்றும் படிக்கும் கல்வி நிறுவனத்தின் மதிப்பு ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கட்டணம் மற்றும் சிறப்பான பயிற்சி
தொழில்துறை தொடர்பான படிப்புகளை அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. ஆனால், தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணங்கள் அதிகமாக வசூலிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், ஒரு கல்வி நிறுவனம், தொழில் நிறுவனங்களிலிருந்து நிபுணர்களை அழைத்து வந்து உரையாற்ற வைத்து, மாணவர்களை திட்டங்களில் பங்கெடுக்க வைப்பதை தனது திட்டமாக கொண்டிருக்கலாம். ஆனால், நடைமுறையில் அது செயல்படுத்தப்படுகிறதா? என்பதை பார்க்க வேண்டும். ஒரு சில கல்வி நிறுவனங்களிலேயே இவை பின்பற்றப்படுகின்றன.
அங்கீகாரம் முக்கியம்
நீங்கள் ஒரு படிப்பை தேர்ந்தெடுக்கையில் அதன் பரவலான அங்கீகாரம் பற்றி கட்டாயம் விசாரிக்க வேண்டும். ஏனெனில், ஒரு மாநிலத்தில் அங்கீகாரம் பெற்ற ஒரு படிப்பானது, இன்னொரு மாநிலத்தில் செல்லுபடியாகாது. எனவே, நீங்கள் மேற்கொள்ளும் படிப்பு, நாடு முழுவதின் அங்கீகாரத்தைப் பெற்றதா என்பதை ஆய்வு செய்வது மிகவும் முக்கியம்.
ஆசிரியர் தொழில் சார்ந்த படிப்பாக இருந்தாலும் சரி, சட்டத்துறை சார்ந்த படிப்பாக இருந்தாலும் சரி அல்லது மருத்துவம் சார்ந்த படிப்பாக இருந்தாலும் சரி, முறையான அங்கீகாரம் இருந்தால்தான் உங்களின் பணமும், நேரமும் விரயமாகாது தடுக்கலாம்.
கல்லூரியை பற்றிய கவலை வேண்டாம்
பள்ளிப் படிப்பை முடித்தப் பிறகு, மதிப்பெண்கள் எப்படி வருமோ? அதை வைத்து, எந்தக் கல்லூரி கிடைக்குமோ என்ற கவலை பல மாணவர்களுக்கு இருக்கும். ஆனால், சாதனையாளர்கள் தரும் பொதுவான அறிவுரை என்னவெனில், எந்தக் கல்லூரியில் சேரப் போகிறோம் என்பதைப் பற்றி கவலைப்படாமல், அந்தக் கல்லூரியிலிருந்து எதைப் பெறுகிறோம் என்பதற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதுதான்.