Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 15 ஏப்ரல், 2013

தனி தனியாக தொழில் பகுதிகளாகும் பசுமை பகுதிகள் சி.எம்.டி.ஏ., திடீர் நடவடிக்கை


இரண்டாவது முழுமை திட்டத்தில், பசுமை பகுதிகளாக குறிப்பிடப்பட்ட இடங்களை தனி தனியாக தொழில் பகுதிகளாக மாற்றும் நடவடிக்கைகளை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.,) துவக்கிஉள்ளது.

சென்னை பெருநகர் பகுதிக்கான, இரண்டாவது முழுமை திட்டத்தில் ஒவ்வொரு பகுதியிலும், நிலங்களின் பயன்பாடு வரையறுக்கப்பட்டு உள்ளன.
இந்த வரையறையின் அடிப்படையிலேயே, அந்தந்த நிலங்களில் வளர்ச்சி, மேம்பாட்டு பணிகளுக்கு திட்ட அனுமதி வழங்கப்பட வேண்டும்.இந்த வகையில், பூந்தமல்லி புறவழிச் சாலை, செங்குன்றம் புறவழி சாலை ஆகியவற்றின் இருபுறமும் பசுமை பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. இந்த பகுதிகளில், சாலையின் இருபுறமும், 15 மீ., தூரம் வரை உள்ள நிலங்களில், எந்தவித கட்டுமான திட்டங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது.

வாயிற் தூண்கள், பாதுகாவலர் அறைகள் மட்டும் கட்ட அனுமதிக்கப்படும்.
இதன் மூலம், இந்த சாலையின் இருபுறத்திலும் சாலையை ஒட்டியுள்ள பகுதிகள் பசுமை தன்மை மாறாமல் பாதுகாக்கப்படும்.
ஆனால், இந்த பகுதிகளை, தொழிற்சாலை பகுதியாக ஒட்டு மொத்தமாக மாற்றி அறிவிக்கும் நடவடிக்கைகளை சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கடந்தாண்டு, டிசம்பரில் துவக்கினர்.

பசுமை பகுதிகளை தொழிற்சாலை பகுதிகளாக மாற்றுவதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், நகரமைப்பு வல்லுனர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதனால், பசுமை பகுதிகளை ஒட்டுமொத்தமாக தொழில் பகுதிகளாக மாற்றும் நடவடிக்கையை சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கைவிட்டனர்.

இந்த நிலையில், தனி தனியாக பசுமை பகுதிகளை தொழில் பகுதியாக மாற்றும் நடவடிக்கை மீண்டும் துவக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, சி.எம்.டி.ஏ., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
அம்பத்தூர் தாலுகா நூம்பல் கிராமத்தில், இரண்டாவது முழுமை திட்டத்தில் பசுமை பகுதியாக வரையறுக்கப்பட்ட பழைய சர்வே எண், 14/18, 15/14 ஆகியவற்றில் உள்ள நிலத்தை தொழில் பகுதியாக மாற்ற வேண்டும் என, தனியார் ஒருவர் கோரிக்கை விடுத்து உள்ளார்.

இதுகுறித்து, சமீபத்தில் நடந்த குழும கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நிலத்தின் பயன்பாட்டை மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நில பயன்பாடு மாற்றம் கோரி வரும் விண்ணப்பங்கள் போன்று, இதுவும் கருதப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

தேசிய மறுசுழற்சி எரிசக்தி பெல்லோஷிப் உதவித்தொகை


தகுதி : விண்ணப்பதாரர்கள், எம்.டெக்., படிப்பில் சேர்ந்திருப்பவர்களாகவோ அல்லது பி.எச்டி.,யில் சேர்ந்திருப்பவர்களாகவோ இருக்க வேண்டும். GATE தேர்வில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். அல்லது பி.டெக்.,/எம்.எஸ்சி., பட்டப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும்.

கால அளவு :எம்.டெக்., 2 ஆண்டுகள்,  பி.எச்டி., 2 ஆண்டுகள் (ஜேஆர்எப்)+ 3 ஆண்டுகள் (எஸ்ஆர்எப்)

விண்ணப்பம் செய்வதற்கான வழிமுறைகள்: விண்ணப்பங்களை www.mnre.gov.in என்ற இணைய முகவரியில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். பி.எச்டி., பெல்லோஷிப் விண்ணப்பங்களுடன் ஆய்வு குறித்த தலைப்புகளில் இரண்டு பக்க அறிக்கையை சேர்த்து இணைக்க வேண்டும். தகுதியானவர்களை, தேசிய புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறையினால் நியமிக்கப்பட்டுள்ள தேசிய குழு தேர்வு செய்யும்.

Scholarship : தேசிய மறுசுழற்சி எரிசக்தி பெல்லோஷிப் உதவித்தொகை
Course : பி.எச்டி.,
Provider Address : Ministry of New and Renewable Energy Block-14, CGO Complex, Lodhi Road,New Delhi-110 003, India. Fax: +91-11-24361298 www.mnre.gov.in

ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம்



"ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில், விரைவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான கருத்தாய்வுக் கூட்டம் ஏப்ரல் 17ல் துவங்குகிறது" என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் கூறினார்.

மதுரையில் நமது நிருபரிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில், ஆசிரியர் கல்வி பாடத் திட்டங்கள் 5 ஆண்டுகளுக்கு பின் மாற்றியமைக்கபடவுள்ளது. புதிய பாடத்திட்டங்கள், தற்கால கல்வி முறைக்கு ஏற்ப மாற்றப்படும். இதற்காக கல்வியாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் சென்னையில் ஏப்.,17 முதல் 19 வரை நடக்கிறது.

அடிப்படை வசதிகள் இல்லாத பி.எட்., கல்லூரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதில், சில கல்லூரிகள் மட்டுமே பதில் அளித்துள்ளன. அனைத்து கல்லூரிகளும் பதில் அளித்தவுடன், என்ன வகையான நடவடிக்கை எடுப்பது குறித்து "சிண்டிகேட்" கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும், என்றார்.