திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த 10 பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
இது தொடர்பாக இம்மருத்துவக் கல்லூரி முதல்வர் எம். மனோகரன் கூறியதாவது:
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆய்வகத் தொழில்நுட்பவியலர், ரேடியோ டையக்னாசிஸ் தொழில்நுட்பவியலர் ஆகிய 2 ஆண்டு பட்டய படிப்புகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு தொழில்நுட்பவியலர், மயக்கவியல் தொழில்நுட்பவியலர், ஆர்த்தோ தொழில்நுட்பவியலர், இ.சி.ஜி. தொழில்நுட்பவியலர், ஆபரேஷன் தியேட்டர் தொழில்நுட்பவியலர், ரத்த சுத்திகரிப்பு தொழில்நுட்பவியலர், மூச்சுப் பயிற்சியாளர் மற்றும் உதவி செவிலியர் ஆகிய ஓராண்டு சான்றிதழ் படிப்புகளுக்கு 2012- 2013-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. விண்ணப்பங்கள் வரும் 24-ம் தேதி வரை விநியோகிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.200 ஆகும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் சாதிச் சான்றிதழைக் காண்பித்து விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுச் செல்லலாம்.
உதவி செவிலியர் படிப்பைத் தவிர மற்ற அனைத்துப் படிப்புகளுக்கும் பிளஸ் 2 தேர்வில் அறிவியல் பாடத்தை தேர்வு செய்து படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உதவி செவிலியர் படிப்புக்கு மட்டும் எஸ்.எஸ்.எல்.சி., கல்வித் தகுதியாகும்.
மாணவர் சேர்க்கை மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். அரசு விதிமுறைப்படி ஒதுக்கீடு உண்டு.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகள் நல்ல முறையில் கற்றுத் தரப்படுகின்றன. இதற்குத் தேவையான ஆய்வகங்கள், அதிநவீன கருவிகள் உள்ளன. திறமையான பேராசிரியர்கள் உள்ளனர். இக்கல்லூரியில் பட்டய மற்றும் சான்றிதழ் படிப்பை முடித்த 365 பேர் நல்ல வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
இந்தப் படிப்புகளை படித்தால் நல்ல வேலைவாய்ப்பு உள்ளது. எனவே, தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வரும் 26-ம் தேதி மாலை 5 மணிக்குள், செயலர், தேர்வுக் குழு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை- 10 என்ற முகவரிக்கு சென்று சேர வேண்டும் என்றார் அவர்.