Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 16 நவம்பர், 2012

தமிழக அரசு பள்ளிகளில் 5,000 ஆய்வக உதவியாளர்கள் விரைவில் நியமனம்


தமிழக அரசு உயர்நிலைப் பள்ளிகளில், 1980ல், 400 ஆய்வுக்கூட உதவியாளர் பணியிடங்களும், 81ல், 500 பணியிடங்களும் ஏற்படுத்தப்பட்டன. அதன்பின், இப்பணியிடங்களில் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், 31 ஆண்டுகளுக்குப் பின், தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளிகளில், 544 ஆய்வக உதவியாளர் பணியிடமும், காலியாக உள்ள, 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களையும் நிரப்ப, இம்மாதம், 11ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

ஆய்வக உதவியாளர் பணிக்கு, 10ம் வகுப்பு, கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், பணி நியமனங்கள் நடந்தன. தற்போது, அனைத்து வகை பணி நியமனங்களும், போட்டித் தேர்வு அடிப்படையிலேயே நடந்து வருகின்றன. இதனால், ஆய்வக உதவியாளர் பணியிடங்களும், போட்டித்தேர்வு அடிப்படையில் நடைபெறுமா என, கேள்வி எழுந்தது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி வட்டாரம் கூறியதாவது: அமைச்சுப் பணியாளர்கள் நியமனம் மட்டுமே, தேர்வாணைய வரம்பிற்குள் வருவர். ஆய்வக உதவியாளர் பணி நியமனம், பொது சார்புப் பணிகளின் கீழ் வரும். எனவே, இந்த வகை பணி நியமனங்கள், வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில்தான் நடக்கும். கல்வித்துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்களில், கல்வித்தகுதி வாய்ந்தவர்கள் இருந்தால், அவர்களுக்கு முதலில், ஆய்வக உதவியாளர் பதவி உயர்வு வழங்கப்படும்.

மீதமுள்ள பணியிடங்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப, மாவட்ட அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில், தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவர். இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது குறித்த முதல்வரின் அறிவிப்பை, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக்கூட உதவியாளர் சங்கம் வரவேற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக