மதுரையிலிருந்து தேனி சென்ற அரசு பஸ்சில் பயணித்த பெரியகுளம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. லாசர் உட்காருவதற்கு சீட் கொடுக்காத கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திராவிடக் கட்சிகளின் எம்.எல்.ஏக்கள்தான் சொகுசாக பறக்கும் கார்கள், மிதக்கும் வாகனங்களில் பயணிப்பார்கள். ஏன், நேற்று பிறந்த தேமுதிகவைச் சேர்ந்த சாதாரண வார்டு பிரதிநிதி கூட ஸ்கார்பியோவில்தான் ஒய்யாரமாக ஊர்வலம் வருகிறார். ஆனால் இந்த கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்களே, ரொம்ப வித்தியாசமானவர்கள். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சாதாரணமாக அரசு பஸ்களில்தான் போவார்கள், வருவார்கள்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் பெரியகுளம் எம்.எல்.ஏ லாசர். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். மதுரைக்குப் போயிருந்த லாசர், தேனி செல்வதற்காக பஸ் ஏற வந்தார். மதுரை அரசரடி காளவாசல் பஸ் ஸ்டாப்பில் மக்களோடு மக்களாக காத்திருந்தார். அப்போது பஸ் வந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால் பயணிகளோடு நெருக்கியடித்தபடி நின்றபடி பயணித்தார் லாசர்.
கண்டக்டர் வந்து டிக்கெட் கேட்டபோது, தான் ஒரு எம்.எல்.ஏ என்றும், எம்.எல்.ஏவுக்குரிய பஸ் பாஸில் பயணிப்பதாகவும் கூறியுள்ளார். அப்படியா என்று கேட்டு விட்டு போய் விட்டார் கண்டக்டர்.பஸ் முழுக்க கூட்டம் கட்டி ஏறியபடி இருந்தது. கண்டக்டர் தனக்குரிய சீட்டில் பயணித்து வந்தார். இதைப் பார்த்த லாசர், தனது செல்போன் மூலம், தேனி கிளை அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளருக்கு போனைப் போட்டு தகவல் அளித்தார்.
தான் பஸ்சில் நின்று கொண்டு பயணிப்பதாக அவர் கூறினார். இதையடுத்து கிளே மேலாளர் சுப்பிரமணியம், மதுரை கிளைக்குப் போனைப் போட்டு அங்குள்ள மேலாளரிடம் தகவலைத் தெரிவித்தார். இதையடுத்து நான்கு டிக்கெட் பரிசோதகர்களை உசிலம்பட்டிக்கு அனுப்பி பஸ்சை நிறுத்தி எம்.எல்.ஏவுக்கு சீட் கொடுக்க ஏற்பாடு செய்யுமாறு பணித்தார் மதுரை கிளை மேலாளர்.
ஆனால் எந்த பஸ் என்று தெரியாமல் நான்கு செக்கர்களும் பஸ்சை விட்டு விட்டனர். இந்த நிலையில் தொட்டப்பநாயக்கனூரை பஸ் சென்றடைந்தது. அப்போது எம்.எல்.ஏவைத் தொடர்பு கொண்ட தேனி மேலாளர், சார் உட்கார்ந்து விட்டீர்களா என்று கேட்டுள்ளார். இல்லை என்று எம்.எல்.ஏ. பதிலளிக்க, உடனே அப்படியே போனை கண்டக்டரிடம் கொடுங்கள் என்று கூறியுள்ளார் மேலாளர். கண்டக்டரை கண்டித்த அவர் மக்கள் பிரதிநிதி ஒருவர் அரசு பஸ்சில் வரும்போது சீட் ஏற்பாடு செய்து தர வேண்டாமா என்று கடிந்து கொண்டார்.
இதையடுத்து கண்டக்டர் எம்.எல்ஏவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தான் உட்கார்ந்திருந்த சீட்டைக் கொடுத்தார். அதன் பிறகு உட்கார்ந்தபடி தேனிக்குப் போய்ச் சேர்ந்தார் லாசர்.
தற்போது அந்த கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம். அவருக்கு பஸ்சில் பணி வழங்க வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளார்களாம்.
இந்த சர்ச்சை குறித்து எம்.எல்.ஏ. கூறுகையில், கண்டக்டர் குறித்து நான் புகார் தெரிவிக்கவில்லை. அது எனது நோக்கமும் அல்ல. நான் எம்.எல்.ஏ. என்று கூறியும் அதை கண்டு கொள்ளாமல் அவர் அலட்சியம் காட்டியதால் வருத்தப்பட்டு அதைக் கிளை மேலாளரிடம் தெரிவித்தேன். கண்டக்டர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் கூறினேன். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது என்றார்.இது ,பிள்ளையையும் கிள்ளிவிட்டுவிட்டு,தொட்டிலையும் ஆட்டுவது போல் உள்ளது .
சர்ச்சையில் சிக்கிய கண்டக்டரின் பெயர் ஸ்டீபன். இவர் கூறுகையில், பஸ்சில் ஏற்கனவே 75 பேர் பயணித்து வந்தனர். எம்.எல்.ஏ முன்பக்கமாக ஏறினார். நான் பின்பக்கத்தில் உள்ள சீட்டில் உட்கார்ந்திருந்தேன். நான் உட்கார்ந்திருந்த சீட்டில் ஏற்கனவே 6 பேர் உட்கார்ந்திருந்தனர். அவர்களோடு நெருக்கயடித்தபடிதான் நானும் அமர்ந்திருந்தேன்.
செக்கானுரணியில் முன்பக்கமாக சில பயணிகள் இறங்கியதால் எம்.எல்.ஏ எப்படியாவது சீட்டைப் பிடித்து அமர்ந்திருப்பார் என்று கருதி விட்டு விட்டேன். மற்றபடி எம்.எல்.ஏவை அவமதிக்கும் வகையில் நான் நடந்து கொள்ளவில்லை என்றார்.
எம்.எல்.ஏக்கள் பஸ்சில் வருவதே பெரிய விஷயம், உலக மகா அதிசயம். கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்கள் மட்டும்தான் அரசு பஸ்களை நாடி ஓடி வந்து போய் வருகிறார்கள். அவர்களுக்கு உட்கார இடம் கொடுத்திருக்கலாம்..!
அதேபோல...
அதேபோல, அரசுப் பேருந்துகளில் டவுன்பஸ் உள்பட, முன்பக்கத்தில், ஏறும் படிக்கட்டுக்கு வலது புறம் உள்ள முதல் இருக்கை மாற்றுத் திறனாளிகளுக்கும் இரண்டாவது இருக்கை எம்எல்ஏ, எம்பி என மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் சுற்றறிக்கையே விடப்பட்டுள்ளது. அமரர் எம்ஜிஆர் காலத்திலிருந்து அந்த முறை கடைப்பிடிக்கப்பட்டும் வந்தது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை இப்போ தூக்கிட்டாங்களோ, என்னவோ!!